Skip to main content

விற்கப்பட்டாலும், மறக்கப்படுவதில்லை

 

விற்கப்பட்டாலும், மறக்கப்படுவதில்லை

 

'மறதி' என்பது மனித சரீரத்திற்குள் விதைக்கப்பட்டிருப்பது; அது தேவனாலேயே நமது சரீரத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றது; அது இறைவனின் படைப்பில் இணைந்த ஒன்று. என்றாலும், நாம் எவைகளை மறந்துவிடவேண்டும், எவைகளை மறந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருத்தல் வேண்டும். மறக்கவேண்டிய காரியங்களை நினைத்துக்கொண்டேயிருப்தும், நினத்துக்கொண்டிருக்கவேண்டிய காரியங்களை மறந்துவிடுவதும் நமது வாழ்க்கையில் எதிர்முனையான விளைவுகளையும், திருப்பங்களையும் ஏற்படுத்திவிடும். வாழ்க்கையில் நிகழும் பல காரியங்ளை நாம் மறந்துவிடுகின்றோம், பல வருடங்களுக்கு முன்னர் சந்தித்த நபர்களை நாம் மறந்துவிடுகின்றோம், வாசித்த புத்தகங்களை மற்றும் பார்த்தவைகளை மறந்துவிடுகின்றோம்; இப்படியாக, அனுதின வாழ்க்கையில் மறதி என்பது அவ்வப்போது நம்மிடத்தில் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. ஐயோ! அதனை மறந்துவிட்டேனே! என்று சில காரியங்களுகு;காக நாம் வருத்தப்பட்டுத் தேடுவதும் உண்டு.

ஒருபுறம், தனக்கு நன்மை செய்தவர்களைக் கூட மறந்துவிடும் கூட்டத்தாரை உலகத்தில் நாம் காணமுடியும். நம்மிடத்தில் நன்மை பெற்றவர்கள் நம்மை மறந்துவிடும்போது, நமக்கு மன வருத்தம் உண்டாகின்றதல்லவா. யோசேப்பினிடத்தில் நன்மை பெற்ற பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் நெடுநாளாய் அவனை மறந்துவிட்டான் (ஆதி. 40:23). என்றபோதிலும், மறந்துவிட்டவனைத் தூற்றிக்கொண்டிராமல், தன்னுடன் இருக்கும் தேவனைக் கொண்டு யோசேப்பு அந்தக் காயத்தை ஆற்றிக்கொண்டான். நம்முடைய பார்வை யார் மீதிலே? யார் நம்மை மறந்துவிடக்கூடாது என்று நாம் நினைக்கிறோம்? மனிதர்களின் மனதிலே நான் பதிந்திருக்கவேண்டும் என்று மனிதரைப் பிரியப்படுத்தும் பல காரியங்களைச் செய்து, கர்த்தரின் மனதைக் காயப்படுத்திவிடும் மக்கள் அநேகர் உண்டு. 'என் பந்து ஜனங்கள் விலகிப்போனார்கள்; என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள்' (யோபு 19:14) என்று தனது உபத்திரவத்தின் நாட்களில் யோபு புலம்புகின்றான்.

மற்றொருபுறம், தனக்குத் தீமை செய்தவர்களை மறக்க முடியாமல், தினம் தினம் நினைவில் கொண்டே திணறிக்கொண்டலையும் கூட்டத்தினரும் உண்டு. எதிர்த்து நின்ற மக்களைப் பொருத்துக்கொள்ள முடியாமல், விரோதஞ் செய்தோரை மன்னித்துவிட மனதில்லாமல், அத்தனையையும் இருதயத்தில் சுமந்து சுமந்து நாட்கள் செல்லச் செல்ல வாழ்வின் ஓட்டத்தில் களைத்துப்போய்விடுகின்றனர் இத்தகைய மக்கள். தாங்கள் களைத்துப் போனதற்கான காரணத்தைக் கூட அறிந்துக்கொள்ளக் கூடாதபடி கண்சொருகிப்போனவர்களாகவும் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தீமை செய்யும் மனிதர்களையே நினைத்து நினைத்து நாம் நம்மையே கெடுத்துக்கொள்ளக்கூடாது. 'பிதாவே இவர்களுக்கு மன்னியும்' என்று சிலுவையில் இயேசு சொன்னதைப் போன்று சொல்லிச் சொல்லி வாழக் கற்றுக்கொள்ளுவோம். அவர்களை எத்தனை முறை மன்னிக்கவேண்டும்? அவர்கள் தீமை செய்கிற அத்தனை முறையும் மன்னிக்கவேண்டும். அப்படிச் செய்தால் மாத்திரமே நாம் நமது ஆவிக்குரிய வாழக்கையைக் காத்துக்கொள்ளமுடியும்; இல்லையென்றால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை அவர்களாலேயே முடிந்துவிடும்; அவர்களோடேயே முடிந்துவிடும்.

ஆனால், தேவனோ, எந்நேரமும், எச்சூழ்நிலைகளிலும் நம்மை மறப்பதில்லை. பிரச்சனைகளைச் சந்திக்கும்போது, துன்பங்களைச் சந்திக்கும்போது, பாடுகளின் வழியாக உபத்திரவங்களின் வழியாகக் கடந்து செல்லும்போது, தோல்வியைத் தழுவும்போது, தேவன் நம்மை மறந்துவிட்டார்? என்ற எண்ணம் நமக்குள் உண்டாகிவிடுகின்றது. கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் (ஏசா 49:14) என்று சொல்லத் தொடங்குகின்றோம்; மட்டுமல்லாது, இத்தனை நாட்கள் நமக்கு நன்மை செய்த தேவனையும், இத்தனை நாட்கள் நம்மை நடத்திய தேவனையும் நாம் மறந்துவிடுகின்றோம். ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள் (எரே 2:32) என்று தன்னை மறக்கிற மனிதர்களைக் கண்டு கர்த்தர் அங்கலாய்கின்றாரே.

'தேவன் என்னை 'மறந்துவிட்டார்' என்ற நினைவினை மனதில் கொடுத்து, நாம் தேவனை மறக்கும்படிச் செய்வது சத்துருவின் தந்திரம். இப்படி தேவனை மறக்கும் ஜனங்கள், தங்கள் வாழ்க்கையில் வேதனையையே வருவித்துக்கொள்கின்றனர். தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும் நரகத்திலே தள்ளப்படுவார்கள் (சங். 9:17) என்கிறான் தாவீது. நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்? (ஏசா 51:12). தேவனை மறக்கிற ஜனங்களை சாத்தான் தன்னை நினைக்கும்படிச் செய்துவிடுகின்றான். தேவனை மறக்கிற ஜனங்களே அந்நிய தேவர்களைப் பின்பற்றி வணங்கத் தொடங்குகின்றனர் (உபா. 8:19; நியா. 3:7; சங். 44:20; ஏசா. 65:11; எரே. 13:25; எரே. 18:15). இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறாள் (ஓசி. 8:14) என்று ஓசியா தீர்க்கரிசியைக் கொண்டு கர்த்தர் உரைக்கின்றாரே. நம்முடைய அனுதின வாழ்க்கையில், நம்முடைய நினைவில் தேவன் உண்டா? தேவனைக் கொண்டு காரியங்களைச் செய்கின்றோமா? அல்லது தேவனை மறந்தவர்களாகக் காரியங்களை நடப்பிக்கின்றோமா? கிறிஸ்தவர்கள் என்ற பெயருடன் இருந்தபோதிலும், தேவனையும் அவருடைய பரிசுத்தத்தையும் மறந்து, தேவனுக்கு விரோதமான காரியங்களுக்கும், சினிமாக்களுக்கும், போதை வஸ்துக்களுக்கும் தங்கள் வாழ்க்கையை விட்டுக்கொடுத்துவிடும் மக்கள் உண்டல்லவா! தேவனை நாம் மறந்துவிட்டால், அவருக்கு விரோதமானவைகளையே செய்யத்தொடங்குவோம். தேவன் மறந்து மன்னித்துவிட்ட பாவங்களை மீண்டும் நினைவுக்குள் கொண்டுவருவதும், நம்மையே நினைத்துக்கொண்டிருக்கும் தேவனை 'உன்னை மறந்துவிட்டார்' என்று சொல்லுவதும் சத்துருவின் சூழ்ச்சியே; இதில் வீழ்ச்சியடையாதிருப்போம். 
ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை (ஏசா 49:15) என்றல்லவா தேவன் நம்மைப் பார்த்து சொல்லுகின்றார். யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை (ஏசா 44:21) என்று நம்மை தைரியப்படுத்துகின்றார். உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியுஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே (எபி 6:10). இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை (லூக் 12:6) என்றார் இயேசு. ஆம், நாம் விற்கப்பட்டாலும், மறக்கப்படுவதில்லை. நம்மை விற்கிறவர்களைக் குறித்து நாம் கவலை கொள்ளாமல், நம்மை மறக்காதவரைக் குறித்து களிப்போடு இருப்போம்.

யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். என்றாலும், அவன் தான் கண்ட சொப்பனத்தை மறந்துவிடவில்லை, சொப்பனத்தைத் தந்த கர்த்தரையும் மறந்துவிடவில்லை. யோசேப்பு விற்கப்பட்டு எகிப்திற்குக் கொண்டுபோகப்பட்டான் (ஆதி 37:28). எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்கப்பட்டான் யோசேப்பு (ஆதி 37:36). என்றாலும், தேவன் யோசேப்போடு கூட இருந்தார்; தேவன் யோசேப்பை மறக்கவில்லை. தேவனின் நினைவு, யோசேப்பை தேசத்தின் மேல் அதிபதியாக உயர்த்தியது; தேசத்தை பஞ்சகாலத்தில் போஷிப்பவனாக மாற்றியது. வாழ்க்கையில் உண்டாகும் கஷ்டங்கள் தேவன் நம்மை மறந்துவிட்டார் என்பதைக் காட்டுபவைகளல்ல, தேவன் உடனிருக்கிறார் என்பதை உணர்த்தும் பாதைகள் அவ்வளவே. 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...