திங்கள், 18 அக்டோபர், 2021

மதிகேடனே!

மதிகேடனே!

 

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறியாததினாலேயே மனுஷன் என்னவெல்லாமோ செய்ய முற்படுகின்றான். எதிர்காலத்தைக் குறித்த நினைவுகளே அநேகருக்கு எதிரியாகவும் மாறி, அழைப்பின் பாதையில் தொடர்ந்து முன்னேற முடியாதபடி அவர்களை மறித்து நிற்கின்றது. பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல (லூக் 12:15) என்றார் இயேசு. சாலமோனும், 'பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்' (நீதி 1:19) என்று எழுதிவைத்துள்ளான். பொருட்களே ஜீவன், பொன்னும் பொருளும் வாழ்க்கையில் இல்லையென்றால், வாழ்க்கையே இல்லை என்ற கண்ணிக்குள் அநேகருடைய கழுத்தை சத்துரு சுருக்கிவிட்டான், இறுக்கிவிட்டான், அத்தகையோரின் உயிரையும் வாங்க எத்தணித்துக்கொண்டிருக்கின்றான். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால், அது போதுமென்றிருக்கக்கடவோம் (1தீமோ. 6:8) என்று எழுதுகின்றார் பவுல். பொருளையே தேடித் தேடி அலைந்து அவைகளாலேயே தங்கள் வாழ்க்கையினை அழகுபடுத்திக்கொள்ளவேண்டும் என்று அலைந்து திரிகிறவர்கள் தங்கள் தேவ அருளை வாழ்க்கையில் சுவைக்க இயலாதுபோய்விடுகின்றனர்.

ஒரு சகோதரர் தனது வாலிப வயதில் வேலைக்காக வெளிநாடு சென்றார், வயோதிப காலம் வரை வெளிநாட்டிலேயே தங்கிப் பணி செய்து, அவ்வப்போது மாத்திரம் தாய்நாட்டிற்கு வந்துசென்றார். வசதியான வீட்டைக் கட்டினார், வீட்டை அழகிய சாதனங்களால் அலங்கரித்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் அவரது வீட்டின் நிலையினைக் கண்டு பிரம்மித்துக்கொண்டிருந்தனர். அந்த மனிதரை ஊரில் பெரிய மனிதராகவும் எண்ணிக்கொண்டிருந்தனர். மாளிகையைப் போன்ற அழகுற மெருகூட்டப்பட்டுக் கட்டப்பட்டிருந்த அந்த வீட்டையும், அங்கிருக்கும் கார்களையும் காணும்போது, அவ்வழியே நடந்து செல்லும் மனிதர்களின் மனம் தாங்கள் அவரைக் காட்டிலும் குறைந்தவர்கள் என்று சொல்லும் அளவில் அந்த மனிதரின் வாழ்க்கை காணப்பட்டது. காலம் செல்லச் செல்ல, தனது வயதின் இறுதி நாட்களில், கம்பெனியில் பணிநிறைவு பெற்று தாய்நாடு திரும்பினார். வாழவேண்டும் என்று வீட்டிற்கு வரும்போது அவருடைய தலைமுடியோ நரைத்திருந்தது. தனது இறுதி நாட்களை தான் கட்டிய வீட்டில் படுத்தவாறே கழித்து, கல்லறையைச் சென்றடைந்தார். பொருளாசையைத் தேடித் தேடி அலைந்த அவர் குடும்பத்தோடும், மனைவியோடும், பிள்ளைகளோடும் தனது காலங்களைக் கழிக்க முடியாதபடி ஜீவனை இழந்துபோனார். 
எனவே இயேசு: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல (லூக் 12:15) என்றார். ஜீவனல்லாதற்காக நமது முழு ஜீவனத்தையும் கொடுத்துவிடுவது நியாயமாகுமோ? எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும் (மத் 6:11) என்றல்லவா இயேசு கற்றுக்கொடுத்தார்.

நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும் (நீதி 30:9) என்றல்லவா சாலமோன் ஜெபிக்கின்றான். கர்த்தர் கொடுத்த மன்னாவை, மோசேயின் சொல் கேளாமல், சிலர் அதில் விடியற்காலம்மட்டும் கொஞ்சம் மீதியாய் வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான் (யாத் 16:20). கர்த்தர் போதும் என்று சொன்ன பிற்பாடும், போய்க்கொண்டேயிருக்கின்றனர் சிலர். விளைவு, அவர்கள் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல், தேவனுக்கு தங்கள் வாழ்க்கையில் இடங்கொடாமல் சேர்த்தவைகளால் வேதனைகளே அவர்களுக்கு மிஞ்சுகின்றது. ஒருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாய் இருக்கிறது (பிர 2:21) என்று சேர்த்துவைப்போரது இறுதி நிலமையினை சாலமோன் வர்ணிக்கின்றான்.

மோசேயின் மாமன் மோசேயை நோக்கி : ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும் (யாத் 18:21) என்று ஆலோசனை கொடுத்தான். பொருளாசையுடையவர்கள் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தால், அவர்கள் பொருட்களின் மேலேயே கவனம் செலுத்துவார்கள், மனிதர்களையோ மறந்துவிடுவார்கள். இன்று அநேக தலைவர்களின் நிலை இதுதான். தன்னிடத்தில் பணிபுரிகிற ஊழியர்கள் எப்படியிருந்தாலும் பரவாயில்லை, அவர்களது நிலை எப்படியிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, அவர்களுக்கு என்ன இழப்பு நேரிட்டாலும் எனக்குக் கவலையில்லை; ஆனால், என்னுடைய கஜானா காலியாகிவிடக்கூடாது என்று நினைக்கும் தலைவர்கள் அநேகர். ஊழியத்திலும் இத்தகையோர் ஊடுருவிவிட்டதினால், உண்மையான மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். போரடிக்கிற மக்களின் வாய் கட்டப்படுகின்றது.

சாமுவேல் முதிர்வயதானவோது, தன் குமாரர்களான யோவேல், அபியா ஆகியோரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான். ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள் (1சாமு 8:3). நல்ல ஊழியக்காரர், பிரசித்திப்பெற்ற ஊழியர், உலகமெங்கும் அறியப்பட்டவர், உண்மையாய் கர்த்தருக்கென்று ஊழியம் செய்துகொண்டிருப்பவர்; என்றாலும், பொருளாசையை உடைய தனது குமாரர்களை ஊழியர்த்தில் உயர்ந்த ஸ்தானங்களில் அமர்த்தும்போது, பொருளாசையுடைய அந்தக் குமாரர்களின் கண்களுக்கு முன் தேவ நியாயங்கள் தென்படுவதில்லை, வேதத்திற்கடுத்த காரியங்களையும், நியாயமான காரியங்களையும், தேவ வழிகளையும், ஊழியம் சென்றுகொண்டிருக்கும் பாதையையும் அப்படியே புரட்டிப்போட்டுவிடுவார்கள். இதுவே, ஊழியம் என ஆரம்பித்து இறுதியில் அது வியாபாரமாகிவிட்டதற்குக் காரணம். கல்வி ஸ்தாபனங்களும், அறக்கட்டளைகளும், இன்னும் பல வரவுகளைத் தரக்கூடிய காரியங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு, ஊழியமும் ஊழியர்களும் பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள் இவர்கள்.

ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப்; போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினாள் (1இரா 21:8) யேசபேல். தனக்குத் திராட்சைத் தோட்டம் வேண்டும் என நாபாலைக் கொலை செய்ய ஏற்படுத்தப்பட்ட சதி அது. இன்றும் இது ஊழியங்களில் நடைபெறுகின்றது; வெளியிடங்களில் ஊழியத்தின் பெயரால் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஊழியத்தையோ கொலைசெய்துகொண்டிருக்கும் யேசேபேலின் ஆவியைக் கொண்ட ஊழியர்கள் அநேகர். பல ஊழியங்கள் ஆரம்பித்த கல்வி ஸ்தாபனங்கள் இருக்கின்றது, ஆனால் ஊழியம் எங்கே? ஊழியர்கள் எங்கே?

பொளாசையுடைய குமாரர்கள் கையில் கிடைக்கும் ஊழியத்தில், உண்மை மலர்களாக மணந்துகொண்டிருக்கும் ஊழியர்கள் பிய்த்தெறியப்படுகின்றனர்; நார் மட்டுமே அந்த ஊழியத்தில் மிஞ்ஞி நாறிக்கொண்டிருக்கும் நிலை உண்டாகிவிடுகின்றது. அப்பொழுது அந்த ஊழியத்தைப் பார்க்கிறவர்கள், கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள் (1இரா 9:8). பதிலோ பதவியில் அமர்த்தப்பட்ட பொருளாசையைச் சார்ந்தவர்களே. பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான் (நீதி. 15:27) என்றே சாலமோன் நீதியான மொழிகளில் எழுதுகின்றான். 'வீட்டைக் கலைப்பது'தான் பொருளாசைக்காரனுடைய முதற்பணி. கர்த்தருடைய வீட்டில் உண்மையும் உத்தமுமாயிருக்கிற ஊழியர்கள், பொருளாசைக்கு ஒத்துப்போகாமல் வாழும் ஊழியர்கள் இவர்களைக் கலைப்பதுதான் பொருளாசைக்காரனின் பிரதான பணி. அவர்களைக் கலைத்தால்தானே, தனது பொருளாசை நிறைவேறும். எனவே, இத்தகையோராலேயே இன்று எத்தனையோ ஊழியங்கள், இடிந்துகிடக்கின்றன. பலரால் பிரபலமாகப் பேசப்பட்டவைகள், ஈசலிடப்படுகின்றன. எச்சரிக்கையாயிருப்போம்.

ஆத்துமாவைக் குறித்து கவலை இல்லாமல், பொருளாசையையே சார்ந்து வாழும் மனிதர்களைக் குறித்தே, 'மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்' (லூக் 12:20). ஆத்துமாக்களைக் குறித்த கவலையற்றவர்களாயிருந்தால், அவர்களது ஆத்துமாக்களுக்கும் நேரிடும் நிலமை இதுவே. இவர்களே, உலகம் முழுவதும் ஆதாயப்படுத்திக்கொண்டு, தன் ஜீவனை நஷ்டப்படுத்தும் கூட்டத்தினர் (மத். 16:26). மற்றவர்களுடைய ஆத்துமாக்களைக் குறித்தும் கவலை கொள்ளாமல், தன்னுடைய ஆத்துமாவைக் குறித்தும் கவலை கொள்ளாமல், பொருளாசையையே கவனத்தில் கொண்டு ஓடும் தலைவர்களின் முடிவு பரிதாபமே. இத்தகைய தலைவர்களை அடையாளம் கண்டுகொள்ளுவோம்; நாம் இத்தகைய தலைவர்களாக இருக்காவண்ணம் நம்மைக் காத்துக்கொள்ளுவோம்.

இவர்கள்,
கர்த்தரைப் பார்க்கிறவர்களல்ல, கணக்குப் பார்க்கிறவர்கள்
நீதியைப் பார்க்கிறவர்களல்ல, நிதியைப் பார்க்கிறவர்கள்
ஊழியத்தைப் பார்க்கிறவர்களல்ல, ஊதியத்தைப் பார்க்கிறவர்கள்

ஆத்துமாக்களைப் பார்க்கிறவர்களல்ல, ஆதாயத்தைப் பார்க்கிறவர்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக