எந்த வரிசையில் என் வாழ்வு?
சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயை பெற்றான்; ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான். (மத் 1:5,6)
மனந்திரும்புதல், பிள்ளைகள் என்ற வரிசையில் நம்முயை பெயரை பிதா எழுதும்படிச் செய்யும். ஒரே பேறான குமாரன் கொடுக்கப்பட்டது அதற்காகவே. வேசியாக வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தவள் ராகாப். வேசியாகவே சமுதாயத்தினால் அறியப்பட்டவள்; எரிகோ பட்டணத்தின் மதில் மீது வேசியாக அவள் வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டிருந்ததற்கு, வேசித்தனம் பண்ணும்படியாக அவளிடத்தில் வந்துபோய்க்கொண்டிருந்தவர்களும் ஓர் காரணம். மறுபுறம், தகப்பன் உயிரோடு இருக்கும்போதே (யோசு. 6:25), தகப்பன் அறிய விபச்சாரத்திற்குள் தள்ளப்பட்டவள் அவள். எரிகோ அழிக்கப்படவிருந்தபோது, யோசுவா ஜனங்களை நோக்கி: இந்தப் பட்டணமும் இதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியால், அவளும் அவளோடே வீட்டுக்குள் இருக்கிற அனைவருமாத்திரம் உயிரோடிருக்கக்கடவர்கள் (யோசு. 6:17) என்று சொன்னான். 'வீட்டுக்குள் இருக்கிற அனைவரும் உயிரோடிருக்கக்கடவர்கடவர்கள்' என்று சொல்லப்படுவதினால், ஒருவேளை, வேசித்தனம்பண்ணும்படியாக அவளது வீட்டிற்கு அப்போது வந்திருந்தவர்களும் உயிரோடிருந்திருப்பார்களோ என்ற சந்தேகம் ஒருவேளை நமக்குள் எழக்கூடும்; அப்படியல்லவே.
எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியினால், அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்; அவள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவிலே குடியிருக்கிறாள் (யோசு. 6:25) என்று வாசிக்கின்றோமே. அப்படியே, விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள் (எபி. 11:31) என்று எழுதுகின்றார் எபிரெய ஆக்கியோன். இந்த வசனம் 'இஸ்ரவேலின் தேவன் மீது அவள் விசுவாசமுள்ளவளாகிவிட்டாள்' என்பதையும், விசுவாச வீரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிள்டாள் என்பதையும் உறுதிப்படுத்துகின்றதே. அத்துடன், எரிகோவின் ராஜா சத்துருவாக எண்ணிய வேவுக்காரர்களை அவள் 'சமாதானத்தோடே ஏற்றுக்கொண்ட' செயல், இஸ்ரவேலின் மக்களோடும், இஸ்ரவேலின் தேவனோடும் அவள் சமாதானமாகிவிட்டதையே வெளிக்காட்டுகின்றது; மேலும், 'கீழ்ப்படியாதவர்களோடே சேதமாகாதிருந்தாள்' என்ற வார்த்தைகள், 'அவள் கீழ்ப்படிதலான வாழ்க்கைக்குள் வந்துவிட்டாள்' என்பதையுமே குறிக்கின்றது. இத்தனை குணாதிசயங்களைக் கொண்ட ராகாப், பின்நாட்களில் வேசியாக வாழ்ந்திருக்கமாட்டாளே. அப்போஸ்தலனாகிய யாக்கோபுவும், அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்? (யாக் 2:25) என்றல்லவோ எழுதுகின்றார்.
கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன் (ஆதி 7:1) என்றார்; 'நீதிமானாக வாழ்ந்துகொண்டிருந்ததால், நோவாவின் குடும்பம் காப்பாற்றப்பட்டது.' அப்படியே தூதர்கள் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டுபோ. நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள் (ஆதி 19:12,13). 'நீதிமானாக வாழ்ந்துகொண்டிருந்ததால், லோத்துவின் குடும்பம் காப்பாற்றப்பட்டது.' (2 பேது. 2:8) என்றே லோத்துவைக் குறித்து பேதுரு எழுதுகின்றார். இவ்வாறாகவே, ராகாபின் நீதி அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையம் காப்பாற்றினது.
எரிகோ மக்களால் வேசியின் வரிசையில் வாசிக்கப்பட்ட ராகாப், வேவுக்காரர்களைச் சந்தித்தபின், விசுவாசிகளின் வரிசையில் வாசிக்கப்படுகின்றாள். மனந்திரும்பிய ராகாபை விவாகம் செய்த சல்மோன், எரிகோவை வேவுபார்க்கச் சென்றவர்களுள் ஒருவராயிருக்கக்கூடும் என்பது வேத ஆராய்ச்சியாளர்களின் கருத்து. வரிசையிலிருந்து நாமும் விவாகத்திற்கே ஆயத்தமாகிறோம். இயேசுவைச் சந்தித்ததினால் வேசியாயிருந்த சமாரிய ஸ்திரி விசுவாசியாக மாறி ஊருக்குள்ளே சுவிசேஷகியாகிவிட்டாளே (யோவா. 4:28). நம் வாழ்வு எந்த வரிசையில்?
Comments
Post a Comment