Skip to main content

தூக்கம் தந்த துக்கம்

 

தூக்கம் தந்த துக்கம்



மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.  (மத் 13:25)


செத்த ஈக்களை நாம் அடையாளம் கண்டுகொள்ளாவிட்டால், நம்முடைய அடையாளத்தையே அவைகள் அழித்துவிடும். உயிரோடு இருக்கும் ஊருக்குள் உயிரில்லாத ஒரு உடலைக் கண்டால், உடனே அதனை உயிரோடு எழுப்பவேண்டும்; இல்லையென்றால், ஊரை விடடே அதனை அகற்றிவிடவேண்டும்; அப்படிச் செய்யாவிட்டால், வீட்டில் தொடங்கும் நாற்றம் விரைவில் வீதியில் வீசத் தொடங்கிவிடும். விழித்திருக்கிற நாம் துரிதமாகவும், துணிவுடனும் இத்தகைய பணியைச் செய்யத் தவறிவிட்டால், மரித்தேரின் எண்ணிக்கை ஊரின் எல்லைக்குள் பெருகத்தொhடங்கிவிடும். இந்த பெருக்கம் ஆவிக்குரியவர்களின் எண்ணிக்கையையும் விரைவில் ஊருக்குள் சுருங்கச் செய்துவிடும். இறுதியில் அப்போஸ்தலனாகிய பவுல் சொன்ன 'ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்' (எபே 5:14) நிலைக்கு நமது விகிதத்தைக் கொண்டுவந்துச் சேர்த்துவிடும். மரித்தோரின் ஊராகவே அது மாறி, நம்மை தனித்திருக்கும் நிலைக்குள் தள்ளிவிடும்.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் தூக்கம், மரித்தவர்களைக்கூட அடையாளம் காணக்கூடாதபடிக்கு நம்முடைய கண்களை அடைத்துவிடும். குடிகாரர் களையும், விபச்சாரக்காரர்களையும், வேசித்தனத்திலிருப்போரையும், காமவிகாரங்களில் ஊறிக்கிடப்போரையும், எதிர்பாலினருடனான இச்சைகளில் தினமும் திளைத்திருப்போரையும், அசுத்தமான உடைகளோடும் மற்றும் உதடுகளோடும் உலாவருவோரையும், வசனத்திற்கு விரோதமானவர்களையும், பரிசுத்தத்திற்குத் தூரமானவர் களையும், பாவங்களிலும் மற்றும் சிற்றின்பங்களிலும் சிக்கியிருப்போரையும், துராலோசனைக்காரர்களையும், ஒழுங்கற்றவர்களையும், கீழ்ப்படியாதவர்களையும், கர்த்தருடைய ஊழியத்தை அசட்டை பண்ணுகிறவர்களையும், இரட்சிக்கப்படாதவர்களையும்  கூடவே வைத்துக்கொள்ளும்படியான துக்கமான நிலைக்குள் ஆவிக்குரிய தூக்கம் நம்மைக் கொண்டுசென்றுவிடும். இன்றைய நாட்களிலும், ஊழியங்களில் உள்ள பலர் உறங்கிவிட்டதினாலேயே, இப்படிப்பட்டவர்களை சத்துதுரு உள்ளே ஊடுருவச்செய்துவிட்டான். 

நீங்கள் நினையாதவேளையில் வீட்டெஜமான் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள் (மாற் 13:36) என்று இயேசு கிறிஸ்து போதித்தாரே; இதன் பொருள் என்ன? சத்துரு இப்படிப்பட்டவர்களை உள்ளே நுழைக்கும்போது, அவர்களை துரத்துவதற்கு நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும்; மாறாக, தூங்கிக்கொண்டிருக்கக்கூடாது என்பதுதானே! இத்தகைய தூக்கம் நம்முடைய வாழ்க்கையில் காணப்படுமானால், நாம் இருக்கிற இடத்தையே அது நாசம்பண்ணிவிடும் என்பது நிச்சயம். ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம் (1தெச 5:6) என்று பவுலும் எழுதி உணர்த்துகின்றாரே. செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் (பிர 10:1) என்று எழுதுகின்றான் சாலொமோன். இதன் அர்த்தமென்ன? இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு செய்துவைத்திருந்த தைலத்தை, ஊழியத்தை, சபையை அல்லது ஸ்தாபனத்தை 'செத்துப்போன ஈக்கள்' நாறிக் கெட்டுப்போகச் செய்துவிடும் என்பதுதானே. 

பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது, களைகளும் காணப்பட்டது (மத் 13:24-26) என்று வேறொரு உவமையையும் இயேசு கிறிஸ்து போதித்தாரே. மனுஷர் நித்திரை செய்யும்போது, சத்துருவோ தன்னுடைய வேலையைத் தொடங்கிவிடுகின்றான். இந்த மனிதன் தன்னுடைய தோட்டத்திலே நல்ல விதையைத்தான் விதைத்திருந்தான், களைகளை அவனது கைகள் விதைக்கவில்லை; என்றபோதிலும், இந்த மனிதன் நித்திரைசெய்தபோதோ சத்துருவின் கைகள் களைகளை இவனது தோட்டத்திற்குள் விதைத்துவிட்டன. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது (மத் 13:27) என்று கேட்கும் அளவிற்கு வெளிப்படையாக அவைகள் தென்படத் தொடங்கியிருந்தது. சத்துருதான் அதைச் செய்தான் என்பதை அந்த மனிதன் அறிந்திருந்தான்; என்றாலும், கோதுமையும் வேரோடேகூடப் பிடுங்கப்பட்டுவிடாதபடிக்கு, தன்னுடைய வேலைக்காரர்களுக்கு களைகளைப் பிடுங்கிப்போட அந்த மனிதன் அனுமதியளிக்கவில்லை (மத். 13:29); அறுப்பு மட்டும் இரண்டும் வளரும் நிலைக்கு அந்த தோட்டம் தள்ளப்பட்டது. தன்னுடைய தோட்டத்தை இந்த நிலைக்கு உள்ளாக்கிவிட்ட தலைவர்கள் இன்றும் உண்டே. நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் (லூக் 22:46) என்ற இயேசு கிறிஸ்துவின் சத்தம் இன்று நம்முடைய செவிகளிலும் தொனிக்கட்டும்.

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...