சுவரைத் தாண்டி சுவிசேஷம்
அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்குத் அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.(லூக் 14:21)
அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.(லூக் 14:24)
பரலோக ராஜ்யத்தின் பணியில் முனைந்து நிற்கும் நாம், முன்னேறத் தடையாயிருக்கும் காரியங்களையும் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். எங்கோ ஓரிடத்திலேயே போரிட்டுக்கொண்டும், போரடித்துக்கொண்டும் இருக்க அழைக்கப்பட்டவர்கள் அல்ல நாம். நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (மாற் 16:15) என்ற இயேசுவின் கட்டளையை நிறைவேற்றவேண்டியவர்கள். ஓரிடத்தில் நடத்தும் சபையுடனோ, ஊழியத்துடனோ, ஒரு சிறு குழுவுடனோ, சிறியதோர் கூட்டத்துடனோ நமது தரிசனம் முடங்கிவிடக்கூடாது.
இதைப் புரிந்துகொள்ளும்படியாகவே, இயேசு ஓர் உவமையையும் எடுத்துரைத்தார். ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான். விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான். அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான் (லூக் 14:16-20). இந்த பதிலையே இன்றும் பல அழைக்கப்பட்டவர்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். மனந்திரும்புதலைப் பற்றியும், சுவிசேஷம் அறிவிப்பதைப் பற்றியும் அக்கறை கொள்ளாமல், தங்கள் சொந்த அலுவல்களிலேயே மூழ்கிக்கிடக்கின்றனர். இவர்களை திசை திருப்புவதில் பெருமளவு நேரத்தைச் செலவழிக்கும் நிலை பல நேரங்களில், பல ஊழியர்களுக்கு உண்டாகிவிடுகின்றது. வருடக்கணக்காக அழைத்துக்கொண்டிருப்பதும், வருடக்கணக்காகச் சாக்குபோக்குச் சொல்லிக்கொண்டிருப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இயேசு மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்தார்; ஆனால், மனந்திரும்புவதையோ மக்களிடம் விட்டுவிட்டார்; அறிவிக்கவே தான் அனுப்பப்பட்டதில் அவர் உறுதியோடு இருந்தார். ஒரு மனிதனிடத்தில் அல்ல உலகம் முழுவதும் சுவிசேஷம் சென்றடையவேண்டும் என்பதே பிதாவின் சித்தமாயிருக்கிறது.
ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 10:23) என்றார் இயேசு. ஒரே இடத்தில் இயேசுவை அறிவித்துக்கொண்டே, நாட்களையும், காலங்களையும் செலவழித்துக்கொண்டு, மனந்திரும்புங்கள், மனந்திரும்புங்கள் என்று எத்தனை முறை அழைக்கப்பட்டாலும் மனந்திரும்பாத மக்கள் கூட்டத்தின் மத்தியில் நமது நேரத்தை விரயமாக்கிவிடக்கூடாது. அறிவிக்கப்பட்டவர்கள் மனந்திரும்புதல் என்ற விருந்தை அசட்டை செய்யும்போது, திறந்து கிடக்கும் பரந்த உலகத்தைப் பார்க்க நாம் தவறிவிடக்கூடாது. பலமுறை கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டும், ஏற்றுக்கொள்ளாத கூட்டத்தினர் ஒரு புறம்; மறுபுறமோ ஒருதரம் கேள்விப்பட்டாலே ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கும் கூட்டத்தினர். இத்தகைய கேள்விப்படாதோர் கூட்டத்தின் மத்தியில், அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே (ரோம 10:15). அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்க நமது பாதங்கள் எத்தனையாய் பயணித்திருக்கிறது? என்பதை ஆராய்ந்து பார்ப்போம். அறிவித்தவர்களுக்கே அறிவித்துக்கொண்டும், போதித்தவர்களுக்கே போதித்துக்கொண்டும் நாம் இருப்போமென்றால், தொலைவிலிருக்கும் அறிவிக்கப்படாதோரை புறக்கணித்துவிட்ட சுவிசேஷகர்களாக, போதகர்களாக நாம் காணப்படுவோம். அழைக்கப்பட்டவர்களையே அழைத்துக்கொண்டிருக்கிறவர்களாகவே நாம் காணப்படுவோம். வீட்டிலிருப்போரையே விருந்துக்கு வா, வா என்று அழைத்துக்கொண்டிருந்தால், ஒருமுறை கூட போஜனம் அற்று (சுவிசேஷம் அறிவிக்கப்படாமல்) கிடக்கும் மாந்தரின் நிலை என்ன ஆவது?
இயேசு புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத் தேடி, அவரிடத்தில் வந்து, தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத்திக்கொண்டார்கள்.அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார். (லூக் 4:42,43) அழைப்பைப் புரிந்துகொள்ளுவோம், அதுவே நம்மை அழைத்துச் செல்லட்டும்
Comments
Post a Comment