கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்து
நான் தேவ அறிவிப்பினாலே போய், புறஜாதிகளிடத்தில் நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு (யூதர்களுக்கு) விவரித்துக் காண்பித்தேன்; ஆயினும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன். (கலா 2:2)
புறஜாதியினருக்குப் பிரசங்கிக்கும் சுவிசேஷத்தை, சொந்த ஜனமான யூதர்களுக்கோ விவரித்துக் காண்பிக்கும் நிலை பவுலின் ஊழியத்தில் உண்டானது. மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே (ரோம 9:3) என்று இஸ்ரவேலரின் ரட்சிப்பிற்காக, தன்னையே ஈடாக வைத்து ஊழியம் செய்தவர் பவுல். சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது (ரோம 10:1) என்கிறார் பவுல். என்றாலும், இஸ்ரவேலர்கள் மத்தியில் செய்யும் ஊழியம் பவுலுக்கு எளிதாகக் காணப்படவில்லை. புறஜாதிகளிடத்தில் சுவிசேஷத்தை பவுல் பிரசங்கித்தபோது இருந்த வரவேற்பும், அங்கீகாரமும், ஏற்றுக்கொள்ளுதலும், இஸ்ரவேல் மக்களிடத்தில் பவுலுக்குக் கிடைக்கவில்லை. கிறிஸ்து இஸ்ரவேலரில் ஒருவராகப் பிறந்திருந்தபோதிலும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தையே விவரித்துக் காட்டவேண்டிய நிலையில் இஸ்ரவேலர் காணப்பட்டனர். கந்தாகே என்பவளின் மந்திரி எருசலேமுக்கு வந்திருந்து, ஊருக்குத் திரும்பிப்போகும் வழியில், தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது, பிலிப்பு அவனை நோக்கி: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா? என்று கேட்டான். அப்பொழுது மந்திரி பிலிப்பை நோக்கி: தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக் குறித்தோ, வேறொருவரைக் குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான் (அப். 8:27,28,30,34). வேதம் கையில் இருந்தும், தேவாலயத்திற்குச் சென்று ஆராதித்து வந்தும், வேதத்தைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் அந்த மந்திரி காணப்படடான். இன்றும் பல கிறிஸ்தவர்களின் நிலை இதுவே, அனுதினம் ஆலயத்திற்குச் சென்றும், ஆராதனையில் பங்கெடுத்தும், கூட்டங்களில் கலந்துகொண்டும், இன்னும் வேதத்தை அறிந்துகொள்ளாதபடி தூரமாயிருக்கிறார்கள் பல கிறிஸ்தவர்கள். இவர்களை இரட்சிப்பிற்குள் நடத்துவது நம் மேல் விழுந்த கடமைகளில் ஒன்று.
இயேசு யூதரில் ஒருவராகப் பிறந்தார்; ஆனால், யூதர்களோ அவரை மேசியா என்றோ, தேவனுடைய குமாரன் என்றோ ஏற்றுக்கொள்ளாமல், அவரைப் புறக்கணித்தனர்; சிலுவையில் அறைந்தனர். இயேசு இந்த உலகத்திற்கு வந்ததின் நோக்கமும், சிலுவையில் மரித்ததின் நோக்கமும், மூன்றாம் நாள் உயிரோடெழுந்ததின் நோக்கமும் சுவிசேஷமாக அப்போஸ்தலர்களால் அறிவிக்கப்பட்டுவந்தபோதிலும் கூட, யூதர்களால் இயேசுவை மேசியா என்று ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அந்த சுவிசேஷத்திற்கு செவிசாய்க்க மனதில்லாமல், இறுமாப்புள்ளவர்களாகவே காணப்பட்டனர். புறஜாதியினர் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளும் நிலை உண்டானது; ஆனால், யூதர்களோ, இயேசுவை ஏற்றுக்கொள்ள மனதற்றவர்களாயிருந்தார்கள்.
புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அவருடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக (அப் 9:15) தேவன் தெரிந்துகொண்ட பவுலின் ஊழியம், புறஜாதியாரிடத்தில் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. புறஜாதியார் பவுலினால் சொல்லப்பட்ட சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்தார்கள். எனினும், யூதர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படவேண்டுமே என்று ஆவல் கொண்டார் பவுல். ஆனாலும், அவர்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியம் வீணாகிவிடக்கூடாது என்று எண்ணினார் பவுல். அதற்கு அவர் தெரிந்தெடுத்த முறை, 'குறைந்த எண்ணிக்கையுள்ளவர்களுக்கு தனிமையாய் விவரித்துக் காண்பிப்பது.' தன்னுடைய பொருட்களோ, பணமோ எவ்விதத்திலும் வீணாகிவிடக்கூடாது என்பதில் உலக மனிதன் அதிக அக்கறை கொள்கிறான். விலைகொடுத்து வாங்கிய பொருட்கள் வீணாகும்போது, மனம் வருத்தமடைகின்றது. இதே நிலையே கிறிஸ்துவின் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் மனதிலும் காணப்படவேண்டும்.
இன்றைய நாட்களில், கூட்டத்தைப் பார்த்தால் மட்டுமே ஊழியங்களுக்கும், ஊழியர்களுக்கும் உற்சாகம் பிறக்கின்றது. இந்தக் கூட்டத்தில் இத்தனை பேர் கலந்துகொண்டார்கள்; இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டது போல எந்தக் கூட்டத்திலும் கலந்துகொண்டதில்லை, ஒரே பட்டணத்தில் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன; எனினும், எங்களுடைய கூட்டத்திற்கே அதிகமான ஜனங்கள் வருகை தந்திருந்தனர் போன்ற சொற்றொடர்கள் பல ஊழியர்களின் வாயிலிருந்து வெளிவருவது சாதாரணமாகிவிட்டது. சுவிசேஷத்தைக் கேட்க ஜனங்கள் திரளாகக் கூடுவது நல்லதுதான், திரளான ஜனங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படுவதும் நல்லதுதான்; ஆனால், திரளான கூட்டம் வந்தால் மட்டுமே சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் என்றும், எத்தனை பேர் கூட்டத்திற்கு வருவார்கள் என்றும் ஊழியங்களும், ஊழியர்களும் முன்பே அறிந்துகொள்ள விளைவது; ஊழியங்களுக்கு ஆபத்தைத்தான் விளைவிக்கும்.
பெரிய கூட்டத்தில் பேசவேண்டும் என்ற ஆசை பலரைப் பிடித்து இழுக்கிறது. பெரிய பெரிய கூட்டங்களில் பிரசங்கம் செய்யும் ஊழியர்களை தனிமையாகச் சென்று சந்திக்க ஜனங்கள் விரும்பும்போதோ, ஜனங்களின் நிலைமை பரிதாபமாகவே காணப்படுகின்றது. ஜனங்களுக்காக ஊழியனா அல்லது ஊழியனுக்காக ஜனங்களா? என்ற கேள்விக்கு விடை அப்போதுதான் வெளிப்படுகின்றது. சமாரிய ஸ்திரீயுடன் இயேசு செலவிட்ட நேரம், அவளை ஜீவனுள்ள தேவனை அறிந்துகொள்ளச் செய்தது (யோவா. 4:19). நம்முடைய ஊழியம் வீணாகிவிடாதிருக்கவேண்டுமென்றால், ஒவ்வொரு தனி நபரின் மேலும் நமது கரிசனை காணப்படவேண்டும்.
Comments
Post a Comment