பாதத்திலேயே இருக்கட்டும் பார்வை
முதன்மையானது எது? முக்கியமானது எது? முதலிடம் எதற்கு? முன்னுரிமை எதற்கு? என்று ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி ஒன்றுபோல் தோன்றும் அத்தனைக் கேள்விகளுக்கான விடைகளை வித்தியாசப்படுத்தி வேறுபிரித்துப் பார்ப்பதில், வாழ்க்கை ஓட்டத்தில் பலர் சிக்கிக்கொள்கின்றனர்; முக்கியமானவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் உணர்வின்றி திணறிக்கொண்டிருக்கின்றனர். இதற்கா? அல்லது அதற்கா? இதுவா அல்லது அதுவா? போன்ற இரண்டில் சரியான ஒன்றைத் தைரியமாய்த் தொடவேண்டிய கேள்விகளுக்குக் கூட, தேவனுக்கடுத்த மற்றும் வேதத்துக்கடுத்த அறிவின்றி, தவறாக விடையளித்து வாழ்க்கையில் தோற்றுப்போய்விடுவோர்; பலர். கால்களைச் சிக்கவைத்துக்கொண்டு, ஆவிக்குரியவைகளை உண்ண இயலாமல்; விக்கிக்கொண்டு, ஆவிக்குரிய மரணத்தைநோக்கிப் பயணிக்கும் கூட்டத்தினர் உண்டு. சரியான பாதையிலும் தவறாகப் பயணிக்கும் மக்கள் அநேகர். கிறிஸ்துவைப் பற்றி அறிந்திருக்கும் பலர், கிறிஸ்துவின் போதனைகளுக்குப் பணிவதில்லை. 'வருகிறோம்' என்று அழைப்பை ஏற்றுச் சென்றாலும், வணங்காக் கழுத்துடனேயே வாழ்க்கையைத் தொடருகின்றனர். உலகத்தின் பார்வையில், தேவனோடு கூட அடையாளப்படுத்தப்படும் பலர், தேவனால் அடையாளப்படுத்தப்படவில்லை. வாழ்க்கையில் வரும் பன்முகக் கேள்விகளைக் கண்டு மிரண்டுபோய்விடவேண்டாம், 'தேவையானது ஒன்றே' என்ற தெளிவான பதிலோடு எந்நேரமும் காத்திருங்கள். சத்துரு எந்தக் கேள்வி கேட்டாலும், விடைத்தாளில் ஒரே பதிலையே எழுதுங்கள், வெற்றி உங்களுடையதாகிவிடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
வீதியிலா? வீட்டிலா?
முதல் கேள்வி, இயேசுவுக்கு உங்கள் வீட்டில் இடமுண்டா? என்பதே. எங்கெல்லாம் இயேசு பிரசங்கித்துக்கொண்டிருந்தாரோ, அங்கெல்லாம் அவருக்குப் பின்னாகச் சென்று இயேசுவின் பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தனர் ஒரு கூட்டத்தினர்; மற்றொரு கூட்டத்தினரோ தங்கள் வியாதிகளிலிருந்து விடுதலைபெற இயேசுவைத் தேடித் தேடி ஓடிக்கொண்டிருந்தனர். எனினும், சொற்பமானோரே இயேசுவை தங்கள் வீட்டிற்குள் அழைத்துச் சென்றிருந்தனர்; அப்படிப்பட்டவர்களுள் ஒருத்தி மார்த்தாள். ஊழியத்தினிமித்தம் இயேசு பிரயாணமாய்ப் போகையில், மார்த்தாளின் கிராமத்தில் பிரவேசித்தபோது, மார்த்தாள் இயேசுவை தனது வீட்டிலே ஏற்றுக்கொண்டாள் (லூக். 10:38). இயேசு கிராமத்திற்குள் வருவதைக் காணக் காத்திருந்தவள் அல்ல அவள்; இயேசுவை தனது வீட்டிற்குள் வரவேற்கக் காத்திருந்தவள் அவள். மார்தாளின் இச்செயல் நற்செயலே. வீதியிலேயே இயேவுவை விட்டுவிட்டு வீட்டுக்குச் செல்லும் மக்கள் இந்நாட்களில் அநேகம். வீதியில், கூட்டங்களில் இயேசுவோடிருக்கும் மக்கள், வீட்டுக்குள் அவருக்கு இடங்கொடுப்பதில்லை.
அநேகர் இயேசுவுக்குப் பின்னாகச் செல்கிறார்கள், இயேசு சொல்வதையெல்லாம் கேட்கிறார்கள், ஆனால், இயேசுவை வீட்டுக்குள் அழைப்பதற்கோ பயப்படுகிறார்கள். இயேசுவோடு உறவு வைத்திருப்பவர்களைப்போல வெளியில் வாழும் இவர்கள், இயேசுவை வீட்டுக்குள் வரவிடத் தயங்குபவர்கள். வெளிக் கூட்டங்கள், ஆலய நிகழ்ச்சிகள் என அத்தனைக்கும் பங்காளர்களாயிருந்தாலும், இயேசு தங்களுடைய வீட்டிற்குள் பிரவேசித்தால், அவர் பிரியப்படுத்தாத பல காரியங்களை மாற்றியமைக்கவேண்டும் என்ற பயப்படுவதுதான் அதற்குக் காரணம். கிறிஸ்துவோடு கூட வாழவேண்டும், எனினும் தங்கள் சுய இச்சைகளையும், வாழ்க்கை முறைகளையும் விட்டுவிடக்கூடாது என்ற இரட்டை நிலையிலேயே வாழ்கின்றனர். வெளியில் பெருங்கூட்டத்தை உருவாக்க துளிகளாய்ச் சேரும் மனிதர்கள், தங்கள் வீட்டின் மேலும் விழிகளைப் பதிப்பது அவசியம். வீட்டுக்குள் இயேசுவை வரவிட பாத்திரமற்றவர்களாக வாழ்வது அர்த்தமற்றதல்லவா. 'கிறிஸ்தவர்களோடு கிறிஸ்தவனாக, கிறிஸ்தவளாக எண்ணப்படுவோரே, உங்கள் வாழ்க்கையில், உங்கள் வீட்டில் இயேசுவுக்கு இடம் உண்டா?' வெளியில் இயேசுவுக்குப் பின்னால் செல்லும் பலர், வீட்டிலோ இயேசுவை வாசலுக்கு வெளியேதான் நிறுத்தியிருக்கின்றனர்.
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான் (வெளி 3:20) என்கிறார் இயேசு. பிரியமானவர்களே, நீங்கள் விருந்துக்கு அழைக்காவிட்டாலும், இயேசு உங்கள் வீட்டிற்குள் பந்தியிருக்க வர விரும்புகிறார் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். இயேசுவைக் காண மரத்தின் மேல் ஏறியிருந்தான் சகேயு. இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான் (லூக் 19:5,6). வீட்டிலே இயேசுவுக்கு முன்பாக சகேயு நின்று, ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே (லூக் 19:8,9) என்றார்.
பிரியமானவர்களே! கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டாலும், கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் கூட்டத்திலும் நீங்கள் காணப்பட்டாலும், இயேசுவுக்கு உங்கள் வீட்டில் இடம் தேவை.
நீங்கள் அழைத்ததினால் அவர் உங்கள் வீட்டிற்குள் வந்தாலோ, அல்லது அவர் தானாக உங்கள் வீட்டிற்குள் பிரவேசித்தாலோ, உங்கள் வீட்டில் நடக்கவேண்டியது இதுவே. தனிப்பட்ட வாழ்க்கையில் இரட்சகராக அவரை ஏற்றுக்கொள்ளாமல், தேவனுக்குப் பின்னால் செல்வதில் இருவருக்கும் பிரயோஜனம் ஏதுமில்லை. 'தேவையானது ஒன்றே' என்பதில் தெளிவாயிருங்கள்.
பாதத்திலா? பற்பல வேலையிலா?
நம்முடைய வீட்டிற்கு அவரை அழைத்து விருந்துகொடுத்தாலும், நம்முடைய ஆத்துமா இரட்சிக்கப்படாவிடில், அவருடைய வீட்டிலே நாம் நித்தியத்தில் விருந்துண்ணமுடியாது. இயேசுவை தனது வீட்டிற்குள் அழைத்திருந்தும், அவர் முதன்மையாய் விரும்புவது எது? என்பதையோ மார்த்தாள் அறியாதவளாயிருந்தாள். இயேசுவை வரவேற்று வீட்டிற்குள் அமரச் செய்துவிட்டு பற்பல வேலைகளைச் செய்வதில் மூழ்கிப்போனாள் அவள் (லூக். 10:40). 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்பது தமிழ் பழமொழி. அப்படித்தான் இந்த மார்த்தாளின் நிலையும். வீட்டிற்கு வெளியே கிராமத்தில் இருந்த இயேசுவை, வீட்டுக்குள் வரவழைத்து, அவளோ வேலை செய்யச் சென்றுவிட்டாள். இயேசு வீட்டிலே இருக்கிறாள்; ஆனால், மார்த்தாளோ, பற்பல வேலைகளில் இருக்கிறாள். குடும்பங்களில் ஜெபக்கூடுகைகளை நடத்தும்போது, பலர் செய்வது இதுதானே. ஜெபக்கூட்டம் தொடங்கும், பாடல்கள் பாடப்படும், செய்திவேளை தொடங்கும்போது பாதியில் வீட்டாரில் சிலர் எழுந்து ஜெபக்கூட்டத்திற்கு வந்திருப்பவர்களுக்கு காபி, திண்பண்டங்கள் மற்றும் உணவுகளை ஆயத்தம் செய்ய சமையலறைக்குள் சென்றுவிடுவார்கள். வீட்டிற்கு வந்தவர்கள் மாத்திரம் ஆவியில் நிறைந்து ஜெபித்துக்கொண்டிருப்பார்கள். ஜெபக்கூடுகையின் முடிவில் உணவு பறிமாறுவதற்குத்தான் வீட்டார் வருவார்கள். அதுவரை வீட்டிற்கு வந்தவர்கள்தான் ஜெபித்துக்கொண்டிருக்கவேண்டும். வீட்டார் இன்றி ஜெபக்கூட்டம் நடத்தும் இந்த நிலை இன்று அநேக வீடுகளில் நடைபெறுகிறது. ஜெபக்கூடுகையின் இடையில் சமையலறையில் நிற்கும் வீட்டார் அனைவரும் மார்த்தாளின் சந்ததியாரே.
ஒருமுறை ஆலயத்தில் பிரசங்கம் நடந்துகொண்டிருந்தது, எனக்கு அருகிலிருந்த வாலிபனோ, தனது கைபேசியில், கயஉநடிழழம பார்த்துக்கொண்டேயிருந்தான். ஏறக்குறைய பிரசங்கம் முடியும் தருணம் வரை அவனது நிலை அப்படித்தான் இருந்தது. அந்த வாலிபனைக் கண்டு வருந்தமடைந்தேன். ஆலயம் வரை வந்து விட்டு, ஆண்டவரைக் காணாமல் போகிறவர்கள் இவர்கள். மற்றொருமுறை ஆலய ஆராதனையின்போது, சகோதரர் ஒருவர் அருகில் வந்து அமர்ந்தார்; நான் அவரைப் பார்த்திருந்தபோதிலும், யாரென்று அறியாதவன். ஆராதனை தொடங்கியது, பாடல்வேளை, ஆராதனை நேரம், ஜெபம், பிரசங்கம், ஆசீர்வாத ஜெபம் என ஆராதனையின் அத்தனை அங்கங்களும் முடிந்தபின்னும் அவர் தனது வேதத்தை திறக்கவேயில்லை. 'உங்கள் வேதாகமத்தில் வசனத்தைப் பாருங்கள்' என்று பிரசங்கியார் சொன்னபோதிலும், அந்தச் சகோதரரோ அதைப் பொருட்படுத்தாதவராகவே அமர்ந்திருந்தார். அவர் ஒரு இருக்கையிலும், தன்னிடமிருந்த பரிசுத்த வேதாகமத்திற்கென அருகில் மற்றொரு இருக்கையில் வைத்தவாறும் அமர்ந்திருந்தார். ஆராதனை முடிந்த பின்னர், அந்த வேதாகமத்தை எடுத்துக்கொண்டு ஆலயத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றார். அவர் சற்று தொலைவு சென்றதும், மற்றொரு சகோதரர் என்னிடத்தில் வந்து, 'பிரதர், அவர் ஒரு நல்ல கன்வென்ஷன் பிரசங்கியார்' என்று என்னிடத்தில் சொன்னார்; அதிர்ந்துபோனேன். தான் பிரசங்கிக்கும்போது திறக்கப்படவேண்டிய வேதம், அடுத்தவர் பிரசங்கிக்கும்போது திறக்கப்படவேண்டாமா? என்ற வருத்தமடைந்தேன்.
ஆலயம் வரை வேதத்தைக் கையில் சுமந்துகொண்டுவந்துவிட்டு, அதைத் திறக்காமல் அப்படியே வைத்துவிட்டு, ஆராதனை முடிந்தபின்னர் அப்படியே தூக்கிக்கொண்டு திரும்பிச் செல்வதால் பயன் என்ன? ஆலயம் வரை வந்துவிடுகிறார்கள், ஆனால், ஆண்டவரோடும், வேதத்தோடும் இணைய மறந்துவிடுகிறார்கள். வகுப்பறையில், ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது, மாணவன் ஒருவன் எந்த ஒரு புத்தகத்தையும் எடுக்காமல், திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தால் எப்படியிருக்கும்? அது ஆசிரியரை அவமதிப்பதாகத்தானே பொருள்படும். இதையே, ஆலயத்தில் பலர் செய்து ஆண்டவரை அவமதித்துவிடுகின்றனர். அநேகருடைய நிலை இன்று இப்படித்தான், ஆலயம் வரை வந்துவிடுகின்றனர்; ஆனால், ஆராதனைக்கும் தங்களுக்கும் சம்மந்தமில்லாமல் ஆலயத்தில் அமர்ந்திருக்கின்றனர். பிரியமானவர்களே! மார்த்தாளைப்போல நீங்கள் மாறிவிடவேண்டாம். நீங்கள் இயேசுவை உங்கள் வீட்டிற்கு அழைத்தாலும், இயேசுவின் வீட்டிற்கு நீங்கள் அழைக்கப்பட்டுச் சென்றாலும் அவருக்கே முதலிடம் கொடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
வரவேற்போம், கலந்துகொள்ளுவோம் ஆனால் வசனத்தைக் கேட்கமாட்டோம் என்ற இந்த குணம் அநேக கிறிஸ்தவர்களிடத்தில் பரவி விட்டது. தங்கள் வீட்டிற்குள் போதகர்களை அழைப்பார்கள், ஜெபிக்கச் சொல்லுவார்கள், ஜெபத்துடனேயே எல்லாவற்றையும் தொடங்குவார்கள்; ஆனால், அந்த வரவேற்போடு அத்தனையும் அணைந்துபோகும். ஒரு நண்பரின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். உடன் சில நண்பர்களுடன் திருமண அரங்கம் சென்றடைந்தேன். ஆலயத்தில் திருமண ஆராதனை சிறப்பாக நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து நடைபெறவிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நான் பேசுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தேன். மணமக்கள் அமர்ந்திருக்கும் மேடைக்கு முன் மூன்றாவது வரிசையில் நண்பர்களுடன் அமர்ந்திருந்தேன். திருமண வரவேற்பு விழாவினை ஆலயத்தில் திருமணத்தை நடத்திய அதே குருவானவர் வந்து ஜெபத்துடன் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து மாப்பிள்ளையின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பேசி முடித்ததும், சிறுவன் ஒருவன் நடனமாடும்படி மேடை ஏறினான், சினிமா பாடல் போடப்பட்டது. இதைக் கண்டதும் அதிர்ந்துபோன நான், அங்கிருந்து மெல்ல வெளியேற முயற்சித்தேன்; இது நான் பேசவேண்டிய மேடை அல்ல என்பதைப் புரிந்தவனாக, நண்பர்களிடத்தில் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். அடுத்து பேசவேண்டிய நான் எழுந்ததும், மேடையிலிருந்த மாப்பிள்ளை கண்ஜாடையில் என்ன? என்று கேட்பதைப்போன்று என்னைப் பார்த்தார். நானோ, எனக்கருகிலிருந்த நண்பர் ஒருவரிடம், என்னால் பேசமுடியாது, மன்னித்துக்கொள்ளுங்கள், என்று மாப்பிள்ளையிடம் செய்தி சொல்லிவிடும்படிச் கூறிவிட்டு அரங்கத்தை விட்டு வெளியே வந்தேன். திருமண விழா முடிந்த பின்னர், மாப்பிள்ளையிடமிருந்து தொலைபேசி வந்தது; 'கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதத்தை, சாத்தானைக் கொண்டு கொண்டாடக்கூடாது' என்று சாந்தமாக அறிவுரை சொன்னேன்.
பிரியமானவர்களே! இயேசுவை வீட்டிற்குள் வரவேற்று அழைத்துச் செல்லும் நீங்கள், வீட்டில் அவருடன் நேரம் செலவழிக்கின்றீர்களா? அவர் விரும்புவதைச் செய்கின்றீர்களா? அல்லது நான் கிறிஸ்தவன் எனவே, திருமணம், புதுவீடு என பல்வேறு நிகழ்ச்சிகளை ஜெபத்துடன் தொடங்கவேண்டும் என்ற கடமுறையோடு தொடங்கி தொடர்ந்து தேவனுக்குப் பிரியமில்லாதவைகளைச் செய்துகொண்டிருக்கின்றீர்களா? குடும்ப ஜெபம் இன்றியும், வேத வசனத்திற்கு இடமின்றியும் காணப்படும் வீடுகள் அநேகம். உள்ளே வந்திருப்பது யார்? என்ற அறிவிருந்தால், உங்கள் உள்ளமெல்லாம் அவர்மேலேயே ஒட்டிக்கொண்டிருக்கும்.
ஊழியமா? உதவியா?
மார்த்தாளின் சகோதரியாகிய மரியாளோ, இயேசு வீட்டிற்கு உள்ளே வருவதைக் கண்டதும், உடனே சென்று அவரது பாதத்தண்டை அமர்ந்து அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள் (லூக். 10:39). மரியாள் இயேசுவின் பாதத்தை விட்டு எழும்பவில்லை; சகோதரியாகிய மார்த்தாள் வீட்டில் என்ன செய்கிறாள் என்பதிலும் மரியாள் கவனம் செலுத்தவில்லை. மரியாள் இயேசுவின் பாதத்திலும், மார்த்தாளோ பற்பல வேலைகளிலும் இருந்தனர். மரியாளை வசனம் வளைத்து வைத்திருந்தது, மார்த்தாளையோ வேலைகள் இழுத்துவைத்திருந்தன. இருக்கும் இடத்தைக் கொண்டே, நாம் கட்டப்பட்டிருக்கும் கயிற்றினை அறிந்துகொள்வது எளிது. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை ஆராய்ந்துபாருங்கள். உலக இன்பமோ, பணமோ, பல்வேறு விருப்பங்களோ, மனிதர்களுடைய நட்புகளோ, ஆசைகளோ உங்களை இயேசுவை விட்டு உங்களை தன்பக்கம் இழுத்துக்கொள்ள பெலனுள்ளவைகள். யோசுவா என்னும் வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான் (யாத் 33:11); அவனே இஸ்ரவேல் ஜனத்தை நடத்தும் தலைவனாகவும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டானல்லவா.
வசனத்தைக் கேட்பதை விட்டு விலகி, பற்பல வேலைகளைச் செய்துகொண்டிருந்த மார்த்தாளுக்கு 'வேலையினால் வருத்தம்' உண்டானது. வசனத்தை விட்டு விலகிச் செல்வோரின் வாழ்க்கையில் உண்டாகும் காரியத்தைத்தான் மார்த்தாளின் 'வருத்தம்' சுட்டிக்காட்டுகின்றனது. தேவன் அழைத்த அழைப்பை விட்டு விலகி, அடுத்ததைச் செய்துகொண்டிருப்போரின் வாழ்க்கையில் நடப்பது இதுதான். ஊழியத்திற்கென்றும், சுவிசேஷம் அறிவிப்பதற்கென்றும் அழைக்கப்பட்டவர்கள் எது எதையோ செய்துகொண்டிருந்தால், அவைகள் உங்களையும் திருப்திப்படுத்தப்போவதில்லை, தேவனையும் திருப்திப்படுத்தப்போவதில்லை.
இரண்டாவது, இயேசுவின் பாதத்தண்டை உட்கார்ந்துகொண்டு வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த தன் சகோதரியாகிய மரியாளைக் கண்டு மார்த்தாளுக்கு 'கோபம்' உண்டானது.
மூன்றாவதாக, 'ஆண்டவரே, 'தனியே' வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும்' என்று 'தனிமையின் உணர்வையும்' கூடவே, 'ஆண்டவரையே கோபித்துக்கொள்ளும் குணம்' மார்த்தாளுக்கு உண்டானது. (லூக் 10:40).
மார்த்தாள் இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார் (லூக் 10:38-42).
ஒருபுறம் உதவி கேட்பதைப் போலத் தோன்றினாலும், மறுபுறமோ மரியாளை இயேசுவினிடமிருந்து பிரித்தெடுப்பதுதானே அவளது நோக்கம். 'தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறாள்' என்று சொல்லும் மார்த்தாள், மரியாளை கூடச் சேர்த்துக்கொண்டால் நடப்பது என்ன? மார்த்தாளும் மரியாளும் இருவரும் சேர்ந்திருக்க, இயேசுவோ தனியாக விடப்பட்டுவிடுவாரே. இத்தகைய நிலையினை இயேசுவுக்கு உண்டாக்கிவிடும் கிறிஸ்தவக் குடும்பங்களே மனந்திரும்புங்கள்.
இயேசுவின் பாதத்தண்டை அமர்ந்திருப்போரை எப்படியாகிலும் எழுப்பிவிடவேண்டும் என்ற இத்தகைய காரியங்கள் இன்றும் நடைபெறாமலில்லை. ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்தில், பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனபோது, தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைக் கேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். ஒருநாள், தேவாலயத்தில் பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சை கேட்டான். பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொன்னான் (அப் 3:4-6). ஆனால், இன்றோ, அழைக்கப்பட்ட இடத்திலேயே சப்பாணிகளைப் போல அமர்ந்திருந்து தேவ திட்டத்தை நிறைவேற்றவேண்டிய பலர் வெள்ளிக்காகவும் பொன்னுக்காகவும் எழுந்து நடமாடச் செய்துவிட்டது. சப்பாணிiயாக, தேவனுடைய அழைப்பிலே எழுந்திருக்காமல் அமர்ந்திருக்கவேண்டிய பலரை, வெள்ளியும் பொன்னும் எழுப்பிவிட்டுவிட்டன. அழைப்பை மறந்துவிட்டு, ஆசைக்குப் பின்னே ஓடிக்கொண்டிருக்கும் ஜனம் பெருகிக்கொண்டேபோகின்றது. எதற்காக நான் அழைக்கப்பட்டேன்? என்பதை மறந்துவிட்டு, அது செய்தால் இவ்வளவு இலாபம் கிடைக்கும்? இங்கே போனால் இவ்வளவு பணம் கிடைக்கும்? என்று, அழைப்பை விட்டு அகன்றுபோய்விட்டவர்கள் அநேகர். மிஷனரிப்பணிக்காக அழைக்கப்பட்ட பலரை, தேவைகளைக் காட்டி தென்னிந்தியாவிலும், வெளிநாடுகளிலுமே சுருட்டிவைத்துக்கொள்ள விரும்பும் சத்துருவின் தந்திரத்தை அறிந்தவர்கள் எத்தனை பேர்? எங்கே இருக்க அழைக்கப்பட்டவர்கள் நீங்கள், ஆனால் எங்ககே இருக்கிறீர்கள்? அழைப்பிலே சப்பாணியைப்போல அமர்ந்திருக்கவேண்டிய உங்களை அங்கேயிருந்து எழுப்பியது எது? மிஷனரிப் பணிக்கென வரவேற்றுவிட்டு, பற்பல வேலைகளில் சிக்கிக்கொள்ளச்செய்யும் சத்துருவின் ரகசியத்தை அறிந்துகொள்ளுங்கள். பற்பல வேலைகளைச் செய்யும் மார்த்தாளின் பெலம் உங்களில் பெருகிக்கொண்டேயிருந்தால், வசனத்தைக் கேட்கும் மரியாள் உங்களில் மரித்துப்போய்விடுவாள்; எச்சரிக்க்கை.
'ஊழியம் செய்வோரே, நீங்கள் உதவி செய்ய வாருங்கள்' என்று அழைக்கப்பட்டோரை தடம் மாற்றும் மக்கள் அநேகர். நாங்கள் வேலைசெய்துகொண்டிருக்கும்போது, நீ என்ன ஜெபித்துக்கொண்டேயிருக்கிறாய்? ஊழியம் ஊழியம் என்று சுற்றிக்கொண்டிருக்கிறாய்? கூட்டங்கள் கூட்டங்கள் என போய்க்கொண்டிருக்கிறாய்? என்று சொல்லும் ஜனங்களை அடையாளம்கண்டுகொள்ளுங்கள். 'நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல' (அப் 6:2) என்று அப்போஸ்தலர்கள் தங்கள் அழைப்பில் உறுதியாக நின்றார்களே. 'வசனத்தைப் போதிக்க அழைக்கப்பட்டவர்கள், பிற வேலைகளைச் செய்ய தங்களை அர்ப்பணித்துவிடக்கூடாது என்பதைத்தானே அப்போஸ்தலர்களின் வாழ்க்கை சுட்டிக்காட்டுகின்றது. 'சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்' (1கொரி 1:17) என்று பவுலும் தனது அழைப்பின் உறுதியை வெளிப்படுத்துகின்றாரே.
தேவனுக்குக் கொடுக்கவேண்டிய நேரத்திலும் வேலையையே செய்துகொண்டிருப்பது தேவனுக்கு எதிரானது என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஞாயிற்று கிழமையிலும் தொழில் செய்தால் அதிக இலாபம் கிடைக்கும் என்று ஆலயத்தை விட்டுவிடுகிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் மார்த்தாளின் வரிசையில் நிற்கிறவர்களே. மார்த்தாளின் வரிசையில் நிற்கிறவர்களே மனந்திரும்புங்கள், இயேசு வாசலண்டையில் நின்று தட்டவில்லை உங்கள் வீட்டிற்குள்ளேயே வந்திருக்கிறார் உணர்வடையுங்கள். வாசலண்டை தட்டிக்கொண்டிருப்பவருக்கு கதவினைத் திறக்காத கூட்டம் ஒருபுறமிருக்க, வீட்டுக்குள் வரவிட்டும் கண்டுகொள்ளாமலிருக்கும் கூட்டம் இன்னொருபுறம் இருக்கத்தானே செய்கிறது. 'வேலையா ஊழியமா?' என்பது அல்ல, 'பாதிநேர ஊழியம், முழுநேர ஊழியம்' என்பதல்ல, எப்போது, எது என்பதுதான் பிரதானமானது.
அநேகருடைய நிலை இன்று இதுதான், ஊழியர்களை வீட்டிற்குள் அழைத்து, பிரியாணி, பாயாசம் என விருந்துகொண்டுத்து உபசரித்து, வசனத்தையோ கேட்க மறந்துபோகிறார்கள். இன்றைய நாட்களில், பல ஊழியர்களும்கூட, விருந்தை உண்டு, வசனத்தைப் பேசாமல் வந்துவிடுகின்றனர். ஊழியர்கள் உங்கள் வீட்டிற்கு வரும்போது, முதலிடம் கொடுக்கப்படுவது எதற்கு?
பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று இயேசுவை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார் (லூக் 7:36). எனினும், இயேசுவுக்கு விருந்தளிக்க, பந்திக்கான அத்தனை உணவுகளையும் ஆயத்தம்பண்ணியிருந்த பரிசேயனாகிய சீமோன், இயேசுவுக்குச் செய்யவேண்டியவைகளையோ மறந்திருந்தான். அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்து, அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள் (லூக் 7:36-38). நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என்கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள். நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள். நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ, என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள். ஆதலால் நான் எனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்ற சொல்லி; அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார் (லூக் 7:44-48). பாதத்தின் அருகே இருப்பவர்களுக்குக் கிடைக்கும் பிரதிபலனைப் பாருங்கள்; எத்தனை பெரியது.
Comments
Post a Comment