Skip to main content

சத்துருவின் ஊடுருவல்

 

சத்துருவின் ஊடுருவல்



உறுதியாயிருக்கும் ஊழியத்தினையும் ஒழித்துவிடும் நோக்கத்துடன் தன்னுடைய ஒற்றர்களை ஒவ்வொருவராக உள்ளே ஊடுருவச் செய்து, இறைவனுக்கு முன் இரும்பென இவ்வுலகத்தில் உயர்ந்து நிற்பதையும் இடித்துப்போடுவதற்கு முயற்சிப்பவன் சத்துரு. ஊழியத்தில் மாத்திரமல்ல, தனிப்பட்ட மனிதனின் உடலிலும், சிந்தையும், குணத்திலும், செயலிலும் தன்னுடையதைத் திணித்து, தேவனுடைய பிள்ளை என்ற ஸ்தானத்திலிருந்து நம்மை தூரப்படுத்த துடிப்பவன் சத்துரு என்பதையும் கூடவே நாம் புரிந்துகொள்வது அவசியமே. தூணின் மேல் ஏறுவதற்கு, துருவாய் ஒவ்வொரு நாளும் சத்துருவினால் சகோதரர்களிடத்தில் அனுப்பப்படுபவர்களை, துடைத்து துப்புரவாக்காவிட்டால்; தூணாய் நிற்கும் அர்ப்பணிக்கப்பட்டவர்களையும்கூட ஒரு நாளில் தூரிலிருந்து அரித்து அத்தகையோர் துரத்திவிடுவார்கள்; தேவனுக்கென்று பலமாகக் கட்டப்பட்டிருந்த மாளிகையைக்கூட தகர்த்து தரைமட்டமாக்கிவிடுவார்கள். ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள் (1பேது 2:5) என்றே மாளிகையில் இணைந்திருக்கும் ஒவ்வொரு மனிதர்களாகிய கற்களைக் குறித்தும் வேதம் எடுத்துரைக்கின்றது அல்லவா. மேலும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களறநம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக (வெளி 1:6) என்றே வெளிப்படுத்தின விசேஷத்திலும் நாம் வாசிக்கின்றோமே. 

என்றபோதிலும், ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கப்பட்டவர்களும், விண்ணகத்தின் பார்வையில் விலையேறப்பெற்றவர்களுமாகக் காணப்படுகின்ற இத்தகைய கற்களை ஒவ்வொன்றாக நீக்கிவிட்டு, அந்த பொந்துகளை அடைக்க தன் சந்ததியைச் சார்ந்தவர்களை ஒவ்வொருவராக வைத்து சாந்துபூசி, இறுதியில் சத்தியத்திலிருந்தே சரிந்து விழும்படியாகவும், சரித்திரத்திலிருந்தே அழிந்துபோகும்படியாகவும் கிரியை செய்கிறவன் சத்துரு என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். பார்வைக்கு அர்ப்பணிக்கப்பட்டவைகளைப் போலவே ஊழியத்திற்குள் பாதம் பதித்தாலும், வெளிப்புறத்தில் அவர்கள் காட்சியளித்தாலும், அழைக்கப்பட்டோரின் மாளிகையில் அங்கங்களாக இணைந்திருந்தாலும் அவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கற்களே. ஆடுகளுக்குள்ளே ஆட்டுத்தோலைப் போர்த்திக்ககொண்டு, ஓநாய்களாக உலாவரும் போலிகளே. இத்தகைய மனிதர்களின் வெளிவேஷம் அவர்களின் வாழ்க்கையினாலேயே நிச்சயம் ஒருநாளில் வெளிப்படும். கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது;  கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது (மத் 7:15-18) என்று இயேசு கிறிஸ்து போதித்தாரே. 

அஸ்திபாரத்தின் மேல் மாளிகையாகக் கட்டப்பட்ட அனைத்தையும் அதமாக்கிவிட்டு, தான் உலாவுவதற்கு இதமான பாதையாக அதனை மாற்றிக்கொள்ள விரும்புவன் சத்துரு. சத்துருவின் இத்தகைய தந்திரத்தை அறியாமல், தரத்தை இழந்து தத்தளித்துக்கொண்டிருக்கும் ஊழியங்கள் இன்றைய நாட்களில் அநேகம் உண்டு. தூளிலிருந்து தான் தூக்கியெடுக்கப்பட்டதை மறந்து, தூசியாக தன்னுடைய கண்களில் சேர்ந்துகொண்டிருப்பவைகளால் பார்வை இழந்து, உத்திரமாக உருமாறியபின் அதனை தூக்கியெறியவும் மனம்தளர்ந்து, நீதியாய் வாழவேண்டிய தன்னுடைய வாழ்க்கை நீர்த்துப்போகச் செய்துவிட்ட மனிதர்கள் அநேகர். சகோதரனுடைய கண்களிலிருக்கிற துரும்பைப் பார்க்குமளவிற்கு தெளிவான தூரப் பார்வையைக் கொண்ட இவர்கள், தன்னுடைய கண்களிலிருக்கிற உத்திரத்தை உணர இயலாத கிட்டப்பார்வையற்றவர்களாக மாறிப்போனது பறிதாபமே (லூக். 6:41). நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையினை நிர்வகிக்கும் பொறுப்பு நம்முடைய கையிலேயே. நம்முடைய வாழ்க்கை ஆண்டவருக்கு நீர்த்துப்போகாதபடிக்குக் காத்துக்கொள்வது அவசியம்.

செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் (பிர 10:1) என்று எழுதுகின்றார் சாலொமோன். ஆவிக்குரிய நாம் நம்முடைய அஸ்திபாரங்களைக் குறித்தும், எல்லைகளைக் குறித்தும் கவனமாயிருக்கவேண்டியது அவசியம். பரிமளதைலமாக நாம் மாறிய பின்பு, செத்த ஈக்களை நம்மோடு சேர்க்கும்படியாக சத்துரு எடுக்கும் முயற்சிகளை முறியடிப்போம். தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது ஊழியத்திலோ செத்த ஈக்களைப் போல சேர்ந்துகொண்டிருக்கும் மனிதர்களை அடையாளம் கண்டுகொள்ளவோ, அகற்றிவிடவோ நாம் அறியாதிருப்போமென்றாலோ அல்லது உணராதிருப்போமென்றாலோ, பரிமளம் போன்ற நம்முடைய பெயரோ அல்லது ஊழியத்தின் பெயரோ நிச்சயம் ஒருநாள் பறிபோய்விடும். 


Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...