Skip to main content

சிறை வைக்கப்படும் சிறுமிகள்

 

சிறை வைக்கப்படும் சிறுமிகள்

 

ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது. (1கொரி 2:14-16)

இது பவுலின் ஆலோசனை; ஆவிக்குரிய வாழ்க்கையை விரும்பும் நமக்கு போதனை; நம்முடைய வாழ்க்கையின் சுபாவத்தை அறிந்துகொள்ள உதவும் பரிசோதனை; ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளாத பைத்தியங்களாகிவிடாமல் சீர்திருந்தச் செய்யும் சத்தியம். தனிப்பட்ட வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும், சபை வாழ்விலும், உலகத்திற்கடுத்த காரியங்களிலும் நாம் செய்யும் ஒவ்வொன்றும், வேத வசனங்களினாலும், தேவ ஆவியினாலும் ஒத்துக்கொள்ளப்பட்டதா? என்பதை அறிந்தவர்களாகவே முன்னேற நாம் அழைக்கப்பட்டவர்கள். நாம் விரும்பினாலும், நாம் வெறுத்தாலும், நாம் போதித்தாலும், நாம் துதித்தாலும் அத்தனையும் தேவ சட்டத்திற்குட்பட்டதாகவே காணப்படவேண்டும். நாம் விரும்பும் ஆராதனை அல்ல அவர் விரும்பும் ஆராதனை; நாம் விரும்பும் கொடுத்தல் அல்ல அவர் விரும்பியபடி கொடுத்தல்; நாம் எண்ணுகிறபடியான வேண்டுதல் அல்ல அவர் எண்ணத்தின்படியான வேண்டுதல் என அத்தனையும் தேவ சித்தத்திற்குட்பட்டதா? என ஆராய்ந்து அறிவது ஆவிக்குரியவர்களுக்கு அழகு.

குழந்தைத் தொழிலாளர்கள் என்பது இன்றய சமுதாயத்தில் எங்கெங்கும் ஊடுருவிக் கிடக்கின்றது. விபரங்கள் அறியாத, எதிர்த்துப் பேச திராணியற்ற, குறைவுகள் என்னவானாலும் முனங்காமல் ஏற்றுக்கொள்கிற, ஆடம்பரங்களை அறியாத, ஆடம்பரங்களை விரும்பாத, கையில் இருப்பதில் களிகூறுகிற, பாமரத்திற்கும் பணச்செழிப்பிற்கும் வித்தியாசம் அறியாத, திட்டினாலும் அப்பயே அடிபணிகின்ற, கொடுக்கிறதை வாங்கிக்கொண்டு தொண்டு செய்கிற குணம் சிறார்களிடம் மாத்திரமே இருக்கிறது என்பதை அறிந்த சமுதாய வர்க்கத்தினர் அவர்களையே சிறைப்பிடித்து, வாழ்வின் இறகுகளை ஒடித்து, விலங்கிட்டு வேலையாளாக்கிவிடுகின்றனர். இப்படிப்பட்ட சிறுமியை அடிமையாக்கி வேலைவாங்கிக்கொண்டிருந்தவன் சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான்.

சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தி;ல் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ;டரோகியாயிருந்தான். சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறு பெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள் (2இரா 5:1,2). போத்திப்பாரின் வீட்டில் யோசேப்பு வேலைக்கு விடப்பட்டிருந்ததுபோலவும், விற்கப்பட்டிருந்ததுபோலவுமே இச்சிறுமியின் வாழ்க்கையும் நாகமானின் வீட்டில் கழிந்துகொண்டிருந்தது. தேவனுடைய தீர்க்கதரிசிகளைப் பற்றிய அறிவுடையவளாக அவள் இருந்தபோதிலும், சீரியன் வீட்டிலோ அவள் வேலைக்காரியாகத்தான் பாவிக்கப்பட்டுக்கொண்டிருந்தாள்.

சீரியனாகிய நாகமான் யாரென்று நாம் அறிந்துகொள்ளும் முன்னர், சீரியர்கள் யாரென்றும் நாம் அறிந்துகொள்வது நமது அறிவினை ஆழப்படுத்தும்.

சீரியர்கள் யார்?

சீரியர்களுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? வேதம் தொடங்கும் இடத்திலேயே நாமும் தொடங்குவோமே. நோவாவின் குமாரர்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்கள். சேமுடைய வம்சத்தில் வந்த தேராகுவின் புதல்வர்களே நாகோர், ஆபிரகாம், ஆரான் என்பவர்கள் (ஆதி. 11:26). தேராகுவின் மற்றொரு மனைவிக்குப் பிறந்தவள் சாராள். எனவே ஆபிரகாம், 'அவள் என் சகோதரி என்பது மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்' (ஆதி 20:12) என்கிறான். அதுபோல, ஆபிரகாமின் சகோதரன் நாகோர், தனக்கு மகள் முறையானவளும், தன் சகோதரனாகிய ஆரானின் குமாரத்தியுமாகிய மில்க்காளை விவாகம் செய்தான் (ஆதி. 11:29).

தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான் (ஆதி 11:31). ஆபிரகாமினிடத்தில் அல்ல, கானானை நோக்கிய பயணத்தை தேராகுவினிடத்திலேயே தொடங்கியிருந்தார் கர்த்தர். தேராகுவின் பயணத்திலே நாகோர் இடம்பெறவில்லை. கானானை நோக்கிய பயணத்தை கோட்டைவிட்டுவிட்டவன் நாகோர். அவன் கானானைக் குறித்த தரிசனம் அற்றவன்.

லோத்துவின் குடும்பத்திலும் இப்படிப்பட்டதோர் நிகழ்வு நடந்தது. இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டுபோ (ஆதி 19:12) என்று தூதர்கள் சொன்னபோது, லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்களின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது (ஆதி 19:14). இப்படிப்பட்ட மனநிலைதான் நாகோரினிடத்திலும் காணப்பட்டிருக்கும். தகப்பன் புறப்படும்போது, தான் மட்டும் இருந்துவிட்ட நாகோர் கர்த்தரின் வழியிலே காலடி வைக்கவில்லை.

இப்படிப்பட்ட நாகோரின் சந்ததியிலிருந்து பிறந்த பெத்துவேலின் குமாரத்தியே ரெபேக்காள் (ஆதி. 22:22). இந்த பெத்துவேலை 'சீரிய தேசத்தான்' (ஆதி. 25:20) என்றே வேதம் குறிப்பிடுகின்றது. ஆம், அவன் சீரிய தேசத்தை விட்டு வர மனதற்றவன். ஆபிரகாமும் தன் தேசமாக சீரியாவையே குறிப்பிடுகின்றான். என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்து வந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார் (ஆதி 24:7) என்கிறான். மேலும், சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் சேர்ந்தபோது, 'என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாயிருந்தான்' (உபா. 26:5) என்றே சொல்லும்படி ஜனங்கள் அறிவுறுத்தப்பட்டனர். சீரியா என்பது தேவ ஜனங்கள் விட்டுவந்த தேசம், மற்றவர்களுக்கோ தேவனுக்காக விட்டு வர இயலாத தேசம். நீங்கள் விட்டுவந்த தேசத்தில் இருக்கிறீர்களா? அல்லது விட்டுவிடமுடியாமல் இருக்கிறீர்களா? சிந்தையில் கூட நம்மை சீரியாவுக்கும், எகிப்துக்கும் சத்துரு திசை திருப்பிவிட முயற்சிப்பான். விடவேண்டியவைகளை விடமுடியாமலிருப்போமென்றால் நாம் சீரியர்களே.

பெண் வேண்டும் மண் வேண்டாம்

ஆபிரகாம் தன் குமாரனான ஈசாக்குக்குப் பெண் பார்க்கும்போது, இருவிதமான காரியங்களால் நெருக்கப்பட்டான்; ஒன்று, தான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளக்கூடாது; மற்றொன்று, தன் குமாரனை மறுபடியும் விட்டு வந்த இடத்திற்கு குமாரனை அழைத்துச் சென்றுவிடக்கூடாது. தன்னுடைய வீட்டிற்கும், இனத்திலும் தன் குமாரனாகிய ஈசாக்கிற்கு பெண் தேடினாலும், தன்னுடைய வீடும், இனமும் இருக்கிற இடத்திற்கு குமாரனை அனுப்ப ஆபிரகாம் ஆயத்தமாயில்லை. அங்கேமாத்திரம் என் குமாரனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்றான் ஆபிரகாம் (ஆதி 24:8). தன்னுடைய தேசத்திற்கு மீண்டும் திரும்பிவிடக்கூடாது என்பதில் ஆபிரகாம் கவனமாயிருந்தான். சீரிய தேசத்தானாகிய பெத்துவேலின் வீட்டார், ஆபிரகாமின் மகனான ஈசாக்குக்கு தங்களது மகளை விவாகம்பண்ணிக் கொடுக்க ஆயத்தமாயிருந்தபோதிலும், அவர்கள் ஆபிரகாமின் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாக இல்லை. ரெபேக்காளை மாத்திரமே கல்யாணத்திற்கு அனுப்பிவைக்கின்றனர்; எத்தனை வேதயான காரியம். எங்காவது, எப்போதாவது இப்படிப்பட்டது நடந்ததுண்டா? பெண்ணை வேண்டுமென்றால் அனுப்பிவைக்கிறோம்; ஆனால், நாங்கள் வரமாட்டோம் என்ற மனநிலை. எனவே, ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள். அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து, ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள். அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள்மேல் ஏறி, அந்த மனிதனோடேகூடப் போனார்கள். ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக் கொண்டுபோனான் (ஆதி 24:58-61).பெண்ணைக் கொடுக்கும்போதுகூட, தங்கள் இருப்பிடத்தை விட்டு எழுந்துபோகவில்லை பெத்துவேலின் வீட்டார். நாகோரின் நங்கூரம் அவர்களிலும் பாய்ந்திருந்தது, அத்தனை பெலமாயிருந்தது.

விசுவாசத்தின் தகப்பனாம் ஆபிரகாமின் குமாரனான ஈசாக்கை விவாகம்பண்ணியிருந்தபோதிலும், சீரிய தேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ரெபேக்காளின் குணத்தில் விஷம் ஒட்டிக்கொண்டுதானிருந்தது. ஆபிரகாமின் தரிசனத்திற்கு விரோதமாகவே அவள் செயல்படுகின்றாள். ஈசாக்கின் ஆசீர்வாதங்களை திருட்டளவாய் பெற்றுக்கொள்ள யாக்கோபுக்கு ஆலோசனை கொடுத்தவள் ரெபேக்காளே. ஏசா பசியாயிருக்கும்போது கூழுக்குப் பதிலாக, சேஷ;டபுத்திர பாகத்தைத் திருடிக்கொள் என்று ஆலோசனை கொடுத்தவளும் ரெபேக்காளாகத்தானே இருந்திருக்கவேண்டும். அதுமாத்திரமல்ல, ஆரானிலிருக்கிற ரெபேக்காளின் சகோதரனான லாபானின் வீட்டிற்கு யாக்கோபை அனுப்பிவைத்தவளும் அவளே. யாக்கோபு சீரியாதேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒருபெண்ணுக்காக ஆடு மேய்த்தான் (ஓசி 12:12). 'இந்த தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன?' (ஆதி. 27:46) என்று ஈசாக்கை மிரட்டும்படியான வார்த்தைகளையே ரெபேக்காள் பேசுகிறாள். அவளுடைய வார்த்தைகளைத் தொடர்ந்தே, ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல், எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப்போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான் (ஆதி 28:2). ஆபிரகாம் தன் குமாரனான ஈசாக்கை அங்கே போக அனுமதிக்கவில்லை; ஆனால், ஈசாக்கோ, தன் குமாரனான யாக்கோபை போக அனுமதிக்கின்றான். நடந்தது என்ன? யாக்கோபு காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ராகேல், சீரிய தேசத்திலிருந்து விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டுவந்தாள்.

ஊழியத்தைக் குறித்த தரிசனம் இல்லாமல் உறவைக் குறித்த கரிசனைமட்டும் மனதில் கொள்ளப்பட்டு நடைபெறும் திருமணங்கள் ஏராளம். ஜாதி, பணம், அழகு, உறவு போன்றவைகளே இன்றைய திருமணங்களை நிச்சயிக்கின்றன. அழைப்பை நோக்கி நகராமல், இருக்கும் இடத்திலேயே நங்கூரமிட்டு நின்றுகொண்டிருக்கும் உறவிலிருந்தும், இனத்திலிருந்தும் கொண்வரப்படும் பெண்கள், பாதையை அறியாததினால் பயணத்தில் சலிப்பையே உண்டாக்குவர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. கணவன் ஊழியம் செய்யவேண்டும் என்ற விருப்பமுடையவராயிருப்பார்; ஆனால், மனைவியோ, கணவன் எப்போதும் நங்கூரமடித்து வீட்டிலேயே தன்னுடன் இருக்கவேண்டும் என்ற எண்ணமுடையவராயிருப்பார். கணவனின் ஊழியத்தில் துணையாக நில்லமலும், தூணாக நில்லாமலும், குறுக்கே நின்றுகொண்டிருக்கும் மனைவிகள் அநேகம். இது ஆண்களுக்கும் பொருந்துவதே.

சீரியர்களும் சிறந்தவர்களும்

ஆபிரகாமின் சந்ததிகளான ஈசாக்கும், யாக்கோபும் சீரிய தேசத்தில் உள்ள பெண்ணை கொண்டுவந்தார்கள். அவர்களை வீட்டுக்கு எஜமாட்டிகளாக்கினார்; ஆனால், சீரியர்களோ இஸ்ரவேல் தேசத்திலிருந்து பிடித்துக்கொண்டுவந்தவர்களை அடிமைகளாக்கினார்கள். ஆபிரகாமின் சந்ததியார்கள் போய்க் கூட்டிக்கொண்டுவந்தார்கள்; சீரியர்களோ போரிட்டு கூட்டிக்கொண்டுவந்தார்கள். அப்படி பிடித்துக்கொண்டுவரப்பட்டவர்களுள் ஒருவளே நாகமானின் வீட்டில் இருந்த இஸ்ரலிய சிறுபெண்.

கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ;டரோகியாயிருந்தான். சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறு பெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள். (2இரா 5:1,2)

தன்னுடைய பிள்ளைகளை எஜமாட்டிகளாகவும், மற்றவர்களின் பிள்ளைகளை அடிமைகளாகவும் நடத்தும் மனநிலை சீரியர்களுடையது. நாகமான் பெரிய மனிதன், என்றாலும், அது தவறு என்று அறியாதவன். அவன் சீரிய ராஜாவின் படைத்தலைவன், என்றாலும் அவனது உடைகளோ குஷ்டரோகத்தினால் மாசுபட்டுக்கொண்டிருந்தது. அவனது குஷ்டரோகத்தினால், மனைவியின் வேலைப் பழு கூடியிருந்தது. ஒருமுறை ஆடையணிந்தவுடன் இரத்தத்தினால் அவை கறைபட்டிருக்கும், எனவே அடிக்கடி துணிகளை துவைக்கும் பணி இருக்கும். இதனையெல்லாம் தனியாக செய்துகொள்ளமுடியாமலிருந்த நானமானின் மனைவிக்கு உதவி செய்ய ஒரு சிறுபெண் சிறைவைக்கப்பட்டிருந்தாள். குழந்தையைத் தத்தெடுத்து, தங்களுடைய மகளாகவே மாற்றி, தங்கள் உடமைக்கும் உரியவளாகும் உரிமை கொடுத்து எஜமான்களாக ஏற்றி வைத்துப் பார்க்கும் மனிதர்கள் உலகத்தில் உண்டு. ஆனால், குழந்தைகளை, வேலைக்கென வைத்துக்கொண்டு, விட்டெறிந்துவிடும் வழக்கமுடைய மனிதர்களும் உண்டு.

இன்றைய சமுதாயத்திலும் நாகமானின் இப்பழக்கம் புழக்கத்தில் வந்துவிட்டது. துணிகளைத் துவைக்கவும், வீடுகளைச் சுத்தப்படுத்தவும், பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளவும் சிறுமிகளையே பலர் வேலைக்கு அமர்த்துகின்றனர். கல்வி கொடுக்கிறோம், உணவு கொடுக்கிறோம், பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் சிறுமிகளின் வாழ்க்கையைப் பாழடித்துவிடுகின்றனர். தாங்கள் குஷ்டரோகிகளாக இருப்பதினாலேயே இத்தகைய கடினமான நுகங்களை சிறுமிகளின் கழுத்தில் ஏற்றுகின்றனர். உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் முன்னே நிறுத்தி (1இரா 21:12) கொலை செய்ததுபோல, சிறுவர்களின் வாழ்க்கைதனை அழித்துவிடுகின்றனர். ஆவிக்குரியவர்கள் என்ற போர்வையிலிருப்போரும் இதனை துணிந்து செய்துகொண்டிருக்கின்றனர். எங்க விசுவாசி வீட்டுப் பிள்ளை, எங்க சபையில் உள்ள பிள்ளை, எங்க பணித்தளத்தில் உள்ள பிள்ளை என்று பல்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லிக்கொண்டு, கொத்தடிமைகளாக வீட்டில் வைத்திருக்கும் கிறிஸ்தவர்கள், ஊழியர்கள் மனம் திரும்பியே ஆகவேண்டும். நாகமானைப்போல தங்களுக்குக் குஷ்டம் இருப்பதினாலேயே, இத்தகைய சிறுமிகளை கூட வைத்துக்கொண்டு கூசாமல் வேலைவாங்குகின்றனர்.

ஒரு உணவு விடுதிக்கு நான், எனது மனைவி, எனது மகன் மற்றும் மகளுடன் உணவருந்தச் சென்றிருந்தோம். நாங்கள் அமர்ந்ததும், நாங்கள் ஆர்டர் செய்திருந்த உணவை சுமார் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஏந்திக்கொண்டுவந்தான். அச்சிறுவனைப் போன்ற மேலும் இரண்டு சிறுவர்கள் அழுக்கான உடை உடுத்தியவர்களாக அந்த உணவு விடுதியில் நின்றுகொண்டிருந்தனர். வரும் வாடிக்கையாளர்களைக் கவனிப்பது இந்த மூன்று சிறுவர்களின் பணி. அந்த மூன்று சிறுவர்களையும் சுட்டிக்காட்டியவனாக, எனது ஏழுவயது நிரம்பிய மகனை நோக்கி: 'பார், உன்னைப்போன்ற வயதுள்ள இச்சிறுவர்களை எப்படி வேலை வாங்குகிறார்கள், இப்படி வேலைசெய்தால்தான் இவர்களுக்குச் சாப்பாடு கிடைக்கும், சாப்பாடு கிடைத்தால்போதும் என்ற கூலியோடு இவர்கள் வேலைசெய்கிறார்கள்' என்று சொன்னேன். இந்த ஹோட்டல் தை;திருப்பவர்களுக்கும், வீட்டில் வைத்திருப்பவர்களுக்கும் வித்தியாசம் என்ன? குழந்தை திருமணத்தை ஒழித்துவிட்டோம், குழந்தை சிறையிருப்பை மாற்ற புறப்படுவோம்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து தலைவர்கள் பயிற்சி முகாம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு ரயிலில் வந்துகொண்டிருந்தேன். ரயில் டெஹ்ரி ஆன் சோனை நெருங்குவதற்கு சுமார் 10 நிமிடங்களுக்கு முன்னர், இறங்குவதற்கான ஆயத்தங்களைச் செய்து, கதவினருகே வந்து நின்றேன். அங்கே வழியில் ஒரு சிறுவன் தலையணையாக ஒரு கட்டு அன்றைய செய்தித்தாள்களை வைத்து குப்புறப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். கதவின் அருகே கீழே அச்சிறுவன் படுத்துக் கிடந்ததால், கதவினைத் திறக்க இயலாமல், அவனை கூப்பிட்டு எழுப்ப முயன்றேன். அவனுக்கோ கேட்டபாடில்லை. சட்டென ஒரு சகோதரி என்னிடத்தில், 'அண்ணே தலைக்குக் கீழே இருக்கிற நியூஸ் பேப்பர்ல ஒன்ன எடுங்க எந்திச்சுருவான்' என சொல்ல, நானும் இசைந்து, ஒரு செய்தித்தாளைத் தொட்டேன், அவ்வளவுதான் உடனே எழுந்துவிட்டான். குளித்திராத தோற்றம், சின்னஞ் சிறு வயது, அழுக்கு உடைகள், தூங்குவதற்கு மனமிருந்தும் செய்தித்தாள்களை சுமைகளாக்கிக்கொண்டு சோற்றுக்காகப் போரடும் அச்சிறுவனைக் கண்டு பரிதாபம் கொண்டேன். பள்ளிக்குச் செல்லும் வயதில், பாடப்புத்தகங்களைத் தூக்கவேண்டிய இச்சிறுவன், இப்படி தனது வாழ்க்கையையே பாரமாகச் சுமந்து அலைகிறானே என எண்ணம் கொண்டேன். ஆம், இவன் தன்னைத்தானே காப்பாற்றும் குழந்தைத் தொழிலாளி. பெற்றெடுப்பது மட்டும்தான் எங்களது வேலை, பேணுவதும், போஷிப்பதும், போதிப்பதும் எங்களுடையதல்ல என்ற நினைப்பில் குழந்தைகளைப் பெற்று நீயே உனது வாழ்க்கையைப் பார்த்துக்கொள் என்று விட்டு விட்டவர்களால் வீதிக்கு வந்தவர்கள்.

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன், தீடீரென வேட்டி கட்டிய ஒருவர், இரண்டு குழந்தை, மற்றும் ஒரு பெண் (அவரது மனைவியாக இருக்கலாம்) உடன் நான் நின்ற இடத்தின் அருகே வந்தார். வந்ததும், சர்க்கஸ் காட்டுவது போல சில ஏற்பாடுகளைச் செய்தார். பின்னர் வளையத்துக்குள் குழந்தையை போகவைத்து, குழந்தையின் மேல் ஏறி நின்று என பல சாகசங்களைச் செய்துவிட்டு, குழந்தைகளின் கைகளிலே இரண்டு தட்டுகளைக் கொடுத்து சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தவர்களிடத்தில் பிச்சை வாங்க அனுப்பினார். பிச்சை எடுக்கும் பெற்றோர்கள் இவர்கள்; தங்கள் பிள்ளைகளின் வயிற்றில் ஏறி நின்று தங்கள் வயிற்றையும் நிறைத்துக்கொள்ள விரும்புபவர்கள்.

தீர்க்கதரிசியினிடத்தில் இவர்கள் சென்று, யோர்தானில் முழுகினால் மட்டுமே இத்தகையோரின் குஷ்டம் தீரும். இல்லையேல், இவர்களது வாழ்க்கை பல சிறுமிகளுக்குக் கஷ்டங்களையே கொண்டுவரும். தேசமே விரோதமாகச் சட்டத்தை உருவாக்கியிருந்தும், தேவனின் பக்கத்திலிருக்கும் இவர்கள் பரத்துக்கு விரோதமாகவும், தேசத்துக்கு விரோதமாகவும் செய்யும் இத்தகைய குற்றங்களுக்கான பதில் என்னவோ? யோர்தானில் ஞானஸ்நானம் எடுக்கவேண்டியவர்கள் அல்ல, மூழ்கவேண்டியவர்கள். நாகமான் யோர்தானில் மூழ்கியபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப் போல மாறி, அவன் சுத்தமானான் (1இராஜா. 5:14).

சீரியாவின் ரஜாவாகிய பெனாதாத் சமாரியாவை முற்றுகையிட்டிருந்தபோது, தேசத்தில் பஞ்சம் உண்டானது. அப்போது, ஒலிமுகவாசலில் இருந்த நான்கு குஷ;டரோகிகள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன? பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி, சீரியருடைய இராணுவத்திற்குப்போக இருட்டோடே எழுந்திருந்து, சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை (2இரா 7:3-5). குஷ்டரோகி எதிர்த்துவந்தால், குஷ்டரோகிகளைத்தான் தேவன் அனுப்புவார்; எத்தனை பெரிய பதிலடி தேவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை பாருங்கள். சீரியரின் சேனையை தேவன் கலங்கடித்திருந்தாலும், வெற்றியை அறிவித்தது குஷ்டரோகிகளான அந்த நான்கு பேரே.

பிரியமானவர்களே! உங்கள் தோலையும் சிறுபிள்ளையின் தோலைப்போல மாற்றிக்கொள்ளுங்கள். இயேசுவின் இரத்தத்தால் கழுவிக்கொள்ளுங்கள்? குஷ்டரோகம் நீங்குவதற்கு அவரையன்றி வேறு வழி ஒன்றுமில்லை. எனவே இயேசு, சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொன்னார் (மத் 19:14). எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப் பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும் (எரே 13:23).

  • முதலில் அந்தச் சிறுமியை உங்கள் வீட்டிற்கு அழைக்கும்போது, ஏதாவது ஒரு சிறுமிக்கு நான் கல்வி உதவி செய்யவேண்டும் என நோக்கில் அழைத்தீர்களா, அல்லது வீட்ல ஹெல்ப் க்கு ஒரு பொண்ணு இருந்தா நல்லா இருக்கும்ன்னு அழைத்தீர்களா? (ஹெல்ப் க்கு அழைத்திருந்தால் அவள் வேலைக்காரிதான்)
  • நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தைக் குறித்த கரிசனை உண்டா? இப்போது எங்களுக்கு உதவியாயிருக்கட்டும், பின்னால் அவள் எப்படியிருந்தால் என்ன என்ற எண்ணமுடையவரா நீங்கள்?
  • தற்காலிகமாக பிள்ளைகளை வைத்திருப்போர் கவனத்திற்கு :
  • உங்கள் குழந்தைகள் அவர்களை வேலை வாங்குகின்றனரா?
  • உங்கள் குழந்தைகளுக்குச் செய்வதைப் போலவே அச்சிறுவர்களுக்கும் செய்கிறீர்களா? துணி எடுப்பதின் தரத்தில், உங்கள் குழந்தைக்கும் அச்சிறுவர்களுக்கும் வேறுபாடு காண்பிக்கிறீர்கள் என்றால் நீங்கள் வேடமாடுகிறீர்கள்.
  • நீங்கள் செய்யக்கூடிய வேலையையும் அச்சிறுமியைச் செய்ய வைக்கிறீர்களா?
  • அச்சிறுமி வேலை செய்யும்போது, நீங்கள் ஓய்வு எடுக்கிறீர்களா?
  • உங்கள் குழந்தை இருக்கும்போது, அந்தக் குழந்தையையே கூப்பிட்டு வேலை செய்யச் சொல்கிறீர்களா?
  • எதற்கெடுத்தாலும் அவளையே அழைத்து வேலை செய்யச் சொல்லும் எண்ணம் வருகிறதா?
  • அச்சிறுமி மீதம் வைக்கும் சோற்றினை, உங்கள் குழந்தைகளின் சோற்றைப் போல சாப்பிட முடிகிறதா? இல்லையென்றால், குப்பையில் கொட்டுகிறீர்களா? 
    வேலை செய்யும்போது எத்தனை முறை உங்கள் குழந்தைகளின் பெயரை உச்சரிக்கிறீர்கள், அச்சிறுமியின் பெயரை உச்சரிக்கிறீர்கள். வேலை என்றாலே அச்சிறுமியைத்தான் தேடுகிறீர்களா?
  • உங்கள் பிள்ளை தூங்கிக்கொண்டிருக்கும்போது, அச்சிறுமியின் தூக்கத்தை உங்கள் வேலை வாங்கும் அதிகாரம் உடைக்கிறதா? யாரை முதலில் எழுப்புகிறீர்கள்.

இத்தனைக்கும் சரியான பதில் இல்லையென்றால், அந்தக் குழந்தைகளை வேலைக்காரிகளாக்காமல், விடுதிகளிலோ அல்லது தொண்டு இல்லங்களிலோ குழந்தைகளாகவே வாழவிட்டுவிடுவது நல்லது. 
படிப்பதற்கு வசதியற்ற நிலையில் உள்ள குடும்பதிலுள்ள பிள்ளைகளை தங்கள் குடும்பத்தில் தங்கவைத்து கல்வி அறிப்பது தவறல்ல, ஆனால் அச்சிறுவர் சிறுமியர் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது. குடும்ப பாரத்தைச் சுமந்துகொள், கல்வியைத் தருகிறோம் எனக் கட்டாயப்படுத்தவேண்டாம்.

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...