சனி, 30 செப்டம்பர், 2023

மதியீனம்

மதியீனம்


பரத்தின் பார்வையிலிருக்கும் நமது வாழ்க்கை, ஒருபோதும் உலகத்தின் தரத்திற்கு இறங்கிவிடக்கூடாது. அங்கங்கள் எல்லாம் அவருடையது என்று சொல்லிக்கொள்ளும் நம்முடைய சரீரத்தில், உலகத்தின் அசுத்தங்கள் தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை (யோவான் 14:30) என்ற இயேசு கிறிஸ்துவின் வாய்மொழி, எத்தனையாய் அவரது வாழ்க்கை பிதாவை மாத்திரமே சார்ந்ததாயும், பிதாவுக்கு மாத்திரமே சொந்தமானதாயும் இருப்பதனை எடுத்துரைக்கின்றது, உறுதிப்படுத்துகின்றது. தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும் (சங். 139:23,24) என்று முழுமனதோடு அவரது ஆய்வுக்கு தன்னை அர்ப்பணித்து, நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர் (சங். 17:3) என்று அறிக்கையிடுகின்றானே தேவனால் ஊடுருவிப் பார்க்கப்பட்ட தாவீது. 

  அவர் வசிக்கின்ற ஆலயமாகிய நம்முடைய உள்ளம் அவருக்குப் பிரியமானதாகவும் தூய்மையாகவும் காணப்படும்போது, சுவிசேஷத்தின் வாசனையினால் நமது உள்ளமும் நிறைந்திருக்கும்போது, வெளிப்புறமாகிய நமது உடலில் எள்ளளவும் உலகத்தின் வாடை வீசிவிடக்கூடாது என்பதிலும் நாம் கவனமாக இருக்கவேண்டுமே. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் (ரோமர் 12:2) என்பதுதானே அப்போஸ்தலனாகிய பவுல் தரும் ஆலோசனை. இந்த வசனத்தை எளிதாகவும் மற்றும் சற்று புரியும்படியாகவும் சுருக்கமாகச் சொல்வதென்றால், 'நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்' என்பதுதானே சத்தியம். 'மனம் புதிதானால்' மாத்திரம் போதும், எங்களுடைய வேஷத்தைப் பற்றி அதாவது வெளித்தோற்றத்தைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் என்பதானே இன்றைய தலைமுறையினர் முன்னெடுக்கும் முதற்கேள்வி. வேதத்தின்படி இதற்கு விடையறிய முற்படாமல் இடறிக்கிடக்கும் ஒருகூட்டம், உள்ளத்தை இயேசுவுக்குக் கொடுத்திருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, உடலிலோ இவ்வுலகத்தின் வேஷத்தைத் தரித்துத் திரிகிறது; இவர்களால், தேவ நாமும் பிற மக்களுக்குள்ளே தூஷpக்கப்படுகின்றது. 


 மதிகேடனாக மாறிவிடாதே


உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? (1 கொரி. 6:15) என்று, எத்தனை பெரிய சத்தியத்தை, இத்தனை இரத்தினச் சுருக்கமாக எழுதிவிட்டார் அப்போஸ்தலனாகிய பவுல்! 'வெளிப்புறத்தில் நாங்கள் எப்படியிருந்தால் என்ன? என்ன அலங்காரங்களைச் செய்திருந்தால் என்ன? என்னனென்ன உடைகளை உடுத்தியிருந்தால் என்ன? எங்கள் இருதயத்தில் இயேசு கிறிஸ்து இருக்கின்றார்; அதைப் பாருங்கள்; நீங்கள் ஏன் எங்கள் தோற்றத்தைப் பார்க்கிறீர்கள்?' என்பதுதான் இன்றைய தலைமுறையினர் தொடுக்கும் அடுக்குத்தொடர் கேள்விகள். ஆனால், 'மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்' (1சாமு. 16:7) என்ற வசனத்தையும் அவர்கள் அறிந்திருக்கவேண்டுமே. 'உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்கள்' என்பதை உணராமல், தாங்கள் விரும்பும் தரக்குறைவான, அரைகுறையான, சரீரத்தைக் கூட சரியாக மூடியிராத ஆடைகளையும் அணிந்துகொண்டு,  உலகத்திற்கடுத்த சிகை அலங்காரங்களால் தங்களைச் சிங்காரித்துக்கொண்டு மற்றும் மாறுபாடான வண்ணங்களால்  தங்களை அலங்கரித்துக்கொண்டு, வெளிப்புறத் தோற்றத்தை மாத்திரமே பாக்கும் பெலன் கொண்ட மனிதரிடத்தில், 'எங்கள் ஆடைகளையும் வெளிப்புறத்தையும் பார்க்காதிருங்கள், உள்ளத்தைப் பாருங்கள்' என்று சொல்லுவது எப்படி பொருந்தும்?  

ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் குமாரனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்றான். யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கண்டையில் கிட்டப் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்று சொல்லி, அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாயிருந்தபடியினாலே, இன்னான் என்று அறியாமல், அவனை ஆசீர்வதித்துவிட்டான் (ஆதி. 27:21-23); பசி ஒரு பக்கம் ருசி ஒரு பக்கம் ஈசாக்கை இழுத்திருக்கக்கூடும்; எனவே, 'சத்தம் யாக்கோபின் சத்தம்' என்று அவன் அடையாளம் கண்டுகொண்டபோதிலும், சத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், 'கைகளோ ஏசாவின் கைகள்' என்று தான் தொட்டு உணர்ந்த சரீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டான் ஈசாக்கு. என்மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான்.  அவன் கிட்டப் போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது (ஆதி. 27:26,27) என்றே சொல்லுகின்றான் ஈசாக்கு. 

யாக்கோபை தடவிப் பார்த்து, 'ஏசா' என்று எப்படி ஈசாக்கு சொன்னானோ; அப்படியே, ஆவிக்குரியவர்களாயிருந்தபோதிலும், இவ்வுலகத்திற்கடுத்தவைகளால் நம்மை அலங்கரித்தவர்களாக வாழுவோமென்றால், நம்முடைய வெளிப்புறத்தைத் தடவிப் பார்க்கும் இவ்வுலத்தினர், நம்மை 'ஆவிக்குரியவர்கள்' என்றும் 'கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள்' என்றும் அறிக்கையிடமாட்டார்களே! நமது மதியீனத்தால் இப்படிப்பட்ட நம்முடைய வாழ்க்கை நமக்கு ஒருவேளை திருப்தியை அளிக்கலாம்; ஆனால், நம்மைச் சூழ்ந்திருக்கின்ற மனிதர்களுக்கோ அது நிச்சயம் ஏமாற்றத்தையே கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை. உலகத்திற்குரியவர்களாக நம்மை அடையாளம் காட்டிக்கொண்டு; ஆவிக்குரியவர்களாக எங்களைப் பாருங்கள் என்று நாம் சொல்லுவோமென்றால், அது மதியீனமே. 

'என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையம் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு:  ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்ட' (லூக். 12:18,19) மனிதனை, 'மதிகேடனே' (லூக். 12:20) என்றுதானே அழைக்கிறார் தேவன். களஞ்சியத்திலிருக்கும் தானியம் எப்படி ஆத்துமாவுக்கு உதவாதோ, அப்படியே வெளிப்புறத்தை மாத்திரமே பார்க்கும் மனிதனின் கண்கள் உள்ளத்தைப் பார்ப்பதற்கு உதவாது; எனவே, வெளிப்புறத்தைப் பார்க்கும் பெலனுடைய மனிதனிடத்தில், 'எனது உட்புறத்தை அதாவது உள்ளத்தைப் பார்' என்று சொல்வதும் மதியீனமே. 

இது ஒருபுமிருக்க, மற்றொரு கூட்டமோ, 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையாக' வெளியிலே தங்களை தேவனுடையவர்களாக அடையாளம் காட்டிக்கொண்டு, உள்ளத்திலோ தேவனுக்கும் தங்களுக்கும் தங்களுக்கும் எந்தவித உறவுமின்றி உலாவுகின்றார்களே; இதுவும் மதியீனமே. பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி (மத். 23:14), தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள் (மத். 23:5-7). வேதபாரகரும், பரிசேயரும் தேவனுக்கடுத்தவைகளில் பங்குள்ளவர்களாகத் தங்களைக் காண்பிக்க, தங்களது வெளிப்புறத்திற்கடுத்த காரியங்களில் அதிக கவனம் செலுத்தினார்கள்; ஆனால், அவர்களுடைய உட்புறத்தைக் குறித்தோ, 'மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்' (மத். 23:25-28) என்றே கூறுகின்றார் இயேசு கிறிஸ்து. அவ்வாறே, கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத். 7:15) என்று கள்ளத் தீர்க்கதரிசிகளையும் கூடவே அடையாளம் காட்டிக்கொடுக்கின்றார். மக்களால் மதிக்கப்படத்தக்க, தேவனை ஜனங்களுக்குப் பிரதிபலிக்கவேண்டிய, 'பிரதான ஆசாரியன்' என்ற பெயருக்குள் வாழ்ந்துகொண்டிருந்த அனனியா, 'இவனை வாயில் அடியுங்கள்' என்று பவுலைப் பார்த்துச் சொன்னபோது, பவுல் அவனை நோக்கி, 'வெள்ளையடிக்கப்பட்ட சுவரே' (அப். 23:3) என்றுதானே அவனது நிலையைச் சுட்டிக்காட்டுகின்றார். யாக்கோபு ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு, தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டதுபோல, ஆவிக்குரிய ஆடைகளை அணிந்து ஆண்டவரிடத்தில் நாம் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது; தேவன் இருதயத்தைப் பார்க்கிறவர்.  

மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது (மத். 6:1-3) என்றும், 

அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும்  நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.(மத் 6:5,6) என்றும், 

நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு (மத். 6:16,17) என்றும் இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்த பாடங்கள் அனைத்தும், நம்முடைய வாழ்க்கையை நாம் மாய்மாலத்திற்குள் தள்ளிவிடக்கூடாது என்பதற்காகத்தானே! 

உபவாசத்தின்போது, வெளிப்புறத்தில் மாத்திரம் வேஷம் அணிந்துகொண்டு, உட்புறத்திலோ அவரோடு உறவாடாமல், தேவ சமுகத்தில் காத்திராமல், எதற்காக உபவாசம் இருக்கின்றோமோ அதற்காக முழுமனதோடு ஜெபிக்காமல், வேதத்தை தியானிக்காமல், 'வயிற்றை மாத்திரம் பட்டினியாக வைத்துக்கொண்டு' எங்கெங்கோ உலாவிக்கொண்டிருப்போமென்றால், அது மதியீனமே. உலகத்திலுள்ள மக்களின் கண்கள் காணவேண்டும் என்ற எண்ணத்தோடு மாத்திரம் காரியங்கள் அனைத்தையும் செய்துவிட்டு, பரலோகம் பார்த்துவிட்டது என்ற நினைவோடு நாம் காணப்படுமென்றால், அது நமது மதியீனமே. இத்தகைய மதிகேட்டிற்குள் நம்மைத் தள்ளி, நாம் தடம்புரண்டுச் சென்றுவிடாதபடி எச்சரிக்கையாயிருப்போம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக