Skip to main content

உபவாசம் ஓன் உன்னத அனுபவம்

 உபவாசம் ஓன் உன்னத அனுபவம்


ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியடைய உபவாசம் என்பது உதறப்படக்கூடாதது. உபவாசம் என்பதனை உப 10 வாசம் ஸ்ரீ உபவாசம் என்று தமிழில் எளிதாக நாம் புரிந்துகொள்ளக்கூடும். ஆண்டவருக்கு அருகே அதாவது அவரது சமுகத்தில் நெருக்கமாகக் கிட்டிச் சேருவதையே இப்பதம் சுட்டிக்காட்டுகின்றது. உபவாசத்தின்போது ஆகாரத்திற்கு நாம் தூரமாவது மாத்திரமல்ல, ஆண்டவருக்கு நாம் அருகில் சேருவதும் அவசியமானது. ஆகாரத்தை விட்டுவிட்டால் மட்டும் போதும் என்றல்ல, ஆத்துமாவில் நெருக்கமாக அவரைத் தொட்டுவிடும் தூரத்திற்கு நாம் நகர்ந்து வரவேண்டும். ஆண்டவருக்கு தூரமாக பசியோடு பட்டினியாய் இருப்பதல்ல, அவரது பக்கத்தில் பரிசுத்தமாய் இருப்பதுதானே உண்மையான உபவாசம். சாப்பிடாமல் வழக்கமான பணிகளையும், விரும்புகிற அனைத்தையும் செய்துகொண்டு, அங்கும் இங்கும் போக்குவரத்துமாய் பிற ஜனங்களோடு உரையாடிக்கொண்டு, யாராகிலும் கேட்கும்போது, 'இன்றைக்கு நான் உபவாசம்' என்று சொல்லுவது செல்லாதது. நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள் இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள் (ஏசா 58:3) என்று ஆண்டவர் சொல்லவில்லையோ! 

வாழ்க்கையின் தனிப்பட்ட காரியங்களுக்காக தனித்து உபவாசத்தோடு ஜெபிக்க விரும்புவோமென்றால், தனிமையாக தேவசமுகத்தில் அமர்ந்திருப்பது நல்லது அல்லது, ஏதாகிலும் குறிப்பிட்ட சில காரியங்களுக்காக குழுவாக ஜெபிக்க விரும்புவோமென்றால், ஆவிக்குரிய பிற சகோதர சகோதரிகளோடு சபையாக உபவாசத்துடன் கூடி ஜெபிப்பது நல்லது. எனினும், உபவாசத்தின்போது, வேதம் சுட்டிக்காட்டும் சில சூத்திரங்களையும் நாம் கடைபிடிப்பது கர்த்தருக்குப் பிரியமானது.

ஆகாரம் சரீரத்தைப் பெலப்படுத்துவதைப் போல, உபவாசமும் ஜெபமும் ஆத்துமாவைப் பெலனடையச் செய்யப் போதுமானது அது மாத்திரமல்ல, சத்துருவாகிய சாத்தானோடும் எதிர்த்து நின்று போராட உபவாசம் என்பது ஓர் உடைவாளே. சீஷர்களால் பிசாசை விரட்ட இயலாமற்போனபோது (மத். 17:16), எங்களால் ஏன் கூடாமற்போயிற்று? என்று கேட்டார்கள், அப்போது இயேசு, அவிசுவாசமும், உபவாசமின்மையும்தான்  அதற்குக் காரணம் என்பதை  சீஷர்களுக்கு உணர்த்துவித்தாரே. இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது (மத் 17:21) என்று சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தாரே.  

நம்முடைய விருப்பங்களுக்காக ஆண்டவரிடத்தில் வேண்டிக்கொள்வதோடு மாத்திரமல்லாமல், ஆண்டவர் விரும்புகிற வண்ணம் நம்முடைய வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ளவும் நம்மை ஒடுக்கி ஒப்புக்கொடுக்க உபவாசம் உதவுதின்றது.  உபவாசம் என்றாலே, தேவைகளையே முன்றிறுத்துகின்ற பழக்கம் வழக்கமாகிவிட்டது. எனினும், நம்முடைய வாழ்க்கையை தேவனுக்கு விருப்பமாக வடிவமைப்பதற்கும், உபவாசம் அவசியம். நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன் (எஸ்றா 8:21) என்கிறான் எஸ்றா.  

மேலும், உபவாசத்தின் பெலனை நாம் அனுபவிக்கவேண்டுமென்றால், நம்முடைய வாழ்க்கை அதற்கு உகந்ததாகவும் காணப்படவேண்டியது அவசியம். நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள் என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள். அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன் என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது (சங் 35:12,13) என்று தாவீது கூறுவதின் அர்த்தமென்ன? தீமையான காரியங்களில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களுக்காக, இடைவிடாமல் ஊழியர்கள் உபவாசமிருந்து ஜெபித்தாலும், அவர்கள் மனந்திரும்பாத பட்சத்தில் பட்சமான விடைகிடைப்பது என்பது தடையாகத்தான் இருக்கும். பாவங்களிலும், அக்கிரமங்களிலும் தொடர்ந்து வாழ்ந்துகொண்டு, அவருக்குப் பிரியமில்லாத காரியங்களைச் செய்துகொண்டு, யாரோ ஒரு ஊழியர் தனக்காக உபவாசமிருந்து ஜெபித்துவிட்டால், கட்டுகள் உடைந்துவிடும், தடைகள் மாறிவிடும் என்பது கற்பனைகூட செய்துபார்க்கக் கூடாது.  

உபவாசம் அவரது வார்த்தையையே வாழ்க்கையில்  ஆகாரமாக்கிவிடுகின்றது. மோசே அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான் அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான் (யாத் 34:28). மேலும் கர்த்தருடைய வார்த்தையைக் குறித்து யோபுவும், என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்.  அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன் (யோபு 23:11,12) என்கிறான். கர்த்தர் சொன்ன வார்த்தைகளை எழுதிய மோசேயும் ஆகாரத்திற்குத் தூரமானவனாகவே அதனை எழுதினான் அப்படியே, கர்த்தருடைய வார்த்தைகளைக் வாழ்க்கையில் காத்துக்கொள்ளவேண்டும் என்று விருப்பங்கொண்ட யோபுவும் ஆகாரத்தை தூரமாகவே பார்க்கின்றான். நம்முடைய வாழ்க்கையிலும், ஆகாரத்திற்கு தூரமாகும்போது, இப்படிப்பட்ட அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவேண்டும் என்ற ஆவல் உண்டாகுமென்றால் உபவாசம் ஆவிக்குரிய வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு நம்மை கொண்டு செல்லும். 

மேலும், இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார் தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர்யாவையும் துடைப்பார் (வெளி 7:16,17). பரலோகத்தில் அவரருகே நாம் வாசம்செய்யும்போது, பசி நமக்குத் தூரமாகிவிடும் என்பதைத்தானே இவ்வசனம் சுட்டிக்காட்டுகின்றது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன் அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார் அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார் இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது (வெளி 21:3,4). பசியுடன், பத்தும் பறந்துபோகும் அன்று. 


பகிர்ந்துகொடுத்தால் பக்கத்தில் இருக்கலாம் 


பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். (ஏசா 58:7)

மேற்கண்ட வசனம், 'உபவாசம்' என்ற பெயரில் நாம் ஓரிடத்தில் அமர்ந்துகொள்வதை அல்ல, உலகத்தில் ஆண்டவருக்காக அவரைப் போன்ற குணத்தோடு நாம் செயல்படுவதையே சுட்டிக்காட்டுகின்றது. உபவாசம் இருக்கும் நாட்களில் நமது ஆகாரத்தை நாம் தவிர்த்துவிடக்கூடும் ஆனால், பசியாயிருக்கும் ஓர் மனிதனுக்கு நாம் உணவளிக்க மனதில்லாதவர்களாயிருப்போமென்றால், நாம் உபவாசமாயில்லை அதாவது அவருக்கு அருகில் இல்லை என்பதையே இவ்வசனம் வெளிப்படுத்துகின்றது. 

பசியாயிருந்தேன்,  எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள் தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள் அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள் வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள் வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள் காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்(மத் 25:35,36) என்ற வசனத்திற்கு நம்முடைய வாழ்க்கை பாத்திரமாகவேண்டும். இந்த வசனங்கள் ஏசாயா 58:7-ல் சொல்லப்பட்டுள்ள உபவாசத்திற்கடுத்த ஒழுங்குமுறைகளோடு ஒத்துப்போகிறதல்லவோ. அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான் (மத் 19:16). அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும் பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார் (மத் 19:21). தரித்திரருக்கு தனது ஆஸ்திகளை அந்த மனிதன் கொடுத்திருந்தால், அவரோடு கூட அவரைப் பின்பற்றும் பாக்கியத்தை தன்னுடைய வாழ்நாளில் பெற்றிருப்பான் ஆனால், தரித்திரரை உதறிவிட்ட அவனுக்கு தேவனுடைய ராஜ்யம் தூரமாயிற்று. 

சாம்பலாகும் சத்துருக்களின் சட்டங்கள் 

ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாய், அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள். (எஸ்தர் 4:3)


நம்முடைய உபவாசம் சத்துருவின் சட்டங்களை சாம்பலாக்கிவிட வல்லது. ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள் அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுகிறதில்லை ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல. ராஜாவுக்குச் சம்மதியானால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது அப்பொழுது நான் ராஜாவின் கஜானாவிலே கொண்டுவந்து செலுத்த பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணிக் காரியக்காரர் கையில் கொடுப்பேன் என்றான். (எஸ்தர் 3:8,9)

யூதர்களை அழித்துவிட ஆமான் திட்டம் தீட்டினான் (எஸ்தர் 3:5,6). அரமனையிலிருந்து ஆணையும் பிறந்தது. ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாய், அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள் (எஸ்தர் 4:3). எஸ்தர் மொர்தெகாயை நோக்கி: நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள் நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம் இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன் நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள் (எஸ்தர் 4:16). முடிவு, துக்கத்திற்குக் காரணமான ஆமான் தூக்கிலிடப்பட்டான். 

நமக்கு விரோதமாக சத்துருக்கள் எழும்பி நிற்கும்போது, நாம் மனிதர்களைச் சார்ந்து அல்லது சத்துருக்களை எதிர்த்து நிற்காமல், தேவனண்டை நெருங்கிச் சேருவோமென்றால், அவரது சமுகம் சத்துருக்களை அழிக்கப் போதுமானது. 

 

மனந்திரும்பினால் மரணமில்லை


 அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். (யோனா 1:1,2)

அக்கிரமங்களினிமித்தம் மனிதர்கள் மீது வரவிருக்கும் சாபத்தினை மற்றும் அழிவினை மனந்திரும்புதலும் அதைத் தொடரும் உபவாசமும் மாற்றிவிட வல்லது. வாழ்க்கையில் அக்கிரமங்களால் நிறைந்திருக்கும் மனிதர்களை ஆண்டவர் அப்படியே அழித்துவிடுவதில்லை. அக்கிரமத்திலிருப்போருக்கு அவர்களது அக்கிரமத்தை தேவமனிதர்களைக் கொண்டு அறிவித்து, அறிவிக்கப்பட்ட பின்னும் அதிலிருந்து அவர்கள் மனந்திரும்பாத பட்சத்திலேயே அவர்களை அழியும்படியாக விட்டுவிடுகின்றார். நோவாவின் நாட்களில் நடந்தது இதுதான், பூமியின் மேல் அழிவு வரவிருப்பதை அறிந்த நோவா ஜனங்களுக்கு அதனை அறிவித்து நீதியை பிரசங்கித்தான் (2 பேதுரு 2:5) என்றபோதிலும், மனந்திரும்பாததினால் ஜனங்கள் அழிவைச் சந்திக்கவேண்டியதாயிற்று. 

நினிவேயின் மக்கள் அக்கிரமத்தினால் நிறைந்திருந்தபோது, அவர்களது அக்கிரமத்தை அறிவிக்க யோனாவை அனுப்பினார். ஆனால் யோனாவோ, கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலி கொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான் (யோனா 1:3). அறிவிக்கப்படாமல் அழிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் ஆண்டவர் கவனமாயிருந்தார். மீண்டும் யோனாவை மீன் மூலமாக நினிவே பட்டணத்திற்குக் கொண்டுவந்தார் (யோனா 1:17, 2:10). இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவா நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார் (யோனா 3:1,2). யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான். 

அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள் பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள். இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான் (யோனா 3:4-6). மேலும் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயிலெங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும், மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள். யாருக்குத் தெரியும் நாம் அழிந்து போகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிரகோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான் (யோனா 3:7-9)

அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார். (யோனா 3:10)

நினிவே மக்களின் அக்கிரமம் அவர்களது வாழ்க்கையிலே அழிவைக் கொண்டுவரவிருந்தது. அவர்களது வாழ்நாட்கள் ஆண்டவரால்  எண்ணப்பட்டுக்கொண்டிருந்த இக்கட்டான நேரத்தில், தாங்கள் அழிக்கப்படவிருப்பதைக் கூட அறியாமல் அக்கிரமத்திலேயே ஆனந்தமாக வாழ்நாட்களை நினிவேயில் கழித்துக்கொண்டிருந்தார்கள். என்றபோதிலும், அவர்களது அக்கிரமமும் அழிவும் அறிவிக்கப்பட்டபோதோ, உபவாசத்தோடு ஆண்டவரைத் தேடினதினால் உயிர்பிழைத்துக்கொண்டார்கள். நம்முடைய வாழ்க்கையின் அக்கிரமங்கள் தேவமனிதர்களாலோ, வேத வசனங்களினாலோ உணர்த்தப்படும்போது, உபவாசத்தோடு தேவசமுகத்தை நாம் கிட்டிச் சேருவோமென்றால், பாவத்தின் சம்பளமாகிய மரணத்தில் நாம் மாட்டிக்கொள்ளமாட்டோம். அறிவிக்கப்பட்டும், அசதியாய் அக்கிரமத்திலேயே தொடர்ந்து வாழ்ந்துகொண்டிப்போரை மரணம் ஆட்கொள்வது உறுதி. 

உபாசம் தரும் ஊழியம்

அவர் அருகிலே வாசம் செய்யும் மக்கள், அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதைக் காட்டிலும், அவருக்காக ஏதாகிலும் செய்துகொண்டேயிருக்கவேண்டும் என்பதிலேயே கருத்தாயிருப்பார்கள். 

அவருக்கு அருகில் நெருங்க நெருங்க தனிப்பட்ட வாழ்க்கையின் விருப்பங்கள் நொறுங்கிப்போகும். நம்முடைய கண்கள் நமக்கானவைகளை அல்ல, அவருக்கானவைகளையே நோக்கிப் பார்க்கும். இப்படிப்பட்ட நெருக்கத்திற்குள்ளாக கடந்து வரும் மனிதர்களுடைய மனங்களில் தனது உள்ளத்தின் பாரங்களை ஊற்றுகின்றார் ஆண்டவர் கர்த்தருடைய பாரத்தை தங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு முனையிலும் சுமக்கக் கற்றுக்கொண்டோர்க்கு, தங்கள் வாழ்க்க்கையின் பாரங்கள் பெரிதாகத் தெரிவதில்லை. உயரப் பறப்போருக்கு உலகம் கையுருண்டையாகத்தான் தெரியும். 

எதற்காக நம்மை அழைத்தாரோ, அதற்காகவே நம்மைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்துவதிலேயே ஆண்டவரது முழு வல்லமையையும் நாம் உணரமுடியும். அப்போஸ்தலர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக் கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார். அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள் (அப் 13:2,3). குழுவாக இணைந்து செய்யவேண்டிய பணிகளும் உண்டு, அப்படியே தனிப்பட்ட வாழ்க்கையின் ஆவியானவரால் வசனத்தின் அடிப்படையில் உள்ளத்தில் உருவாக்கப்படும் விருப்பத்தினை அழைப்பாக புரிந்துகொண்டு அதனடிப்படையில் செயல்படவேண்டிய அவசியமும் உண்டு. 

இயேசு கிறிஸ்துவும் தனது ஊழியத்தைத் தொடங்கும் முன் நாற்பது நாட்கள் உபவாசமாயிருந்தாரே (மத் 4:2). ஊழியத்தின் தொடக்கத்திலேயே இயேசு கிறிஸ்துவினிடத்தில் சாத்தான் தோல்வியைச் சந்தித்தான் (மத். 4:11). சத்துருவை வென்ற பின்னரே இயேசு 'மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது' (மத். 4:17) என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். தனிப்பட்ட வாழ்க்கையில் சத்துரு நமக்கு முன் வைக்கும் சோதனைகளில் நாம் வெற்றிபெற்றுவிடுவோமென்றால், ஊழியத்தின் பாதையில் சோதனைகளால் சாத்தான் நம்மை வீழ்த்துவது கூடாததாகிவிடும். இத்தகைய வெற்றியுள்ள வாழ்க்கைக்கு உபவாசமே நமக்கு வழிவகுக்கிறது.  


Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...