உங்களுக்கு எதிரி
நீங்களே
'
நமது ஓட்டத்தின் வழியில், எங்கு தாமதிக்கக்கூடாது என்றும், எங்கு தாமதிக்கவேண்டும் என்றும், எங்கு நிற்கக்கூடாது என்றும் எங்கு நிற்கவேண்டும் என்றும் நாம் அறிந்திருக்கவேண்டும். தேவன் ஓடச்சொல்லும் நேரத்தில் நின்றுகொண்டிருப்பதும், நிற்கச் சொல்லும் நேரத்தில் ஓடிக்கொண்டிருப்பதும், தாமதிக்கச் சொல்லும் நேரத்தில் தகாததைத் செய்துவிடுவதும் நமது ஓட்டத்தை தாறுமாறாக்கிவிடும். நம்மை நாமமே சுத்திகரித்துக்கொள்ளவேண்டும் என்பதிலும், நம்முடையவர்களை சுத்திகரிப்புக்குள் நடத்தவேண்டும் என்பதிலும் நாம் ஒருபோதும் தாமதிக்கக்கூடாது. சபையாகிய சரீரத்தில் வியாதியோடு வாழக்கூடாது, அதை சுகப்படுத்தத் தாமதிக்கக்கூடாது.
தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்துபோம் (லூக். 11:17) என்பது கிறிஸ்துவின் போதனை; அதுவே சத்தியம். என்றபோதிலும், தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருந்து, தன்னையே பரிசுத்தப்படுத்தவும் நாம் அழைக்கப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். குழுவாக கூடி கிறிஸ்துவுக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கும் நமக்குள்ளே ஆங்காங்கே காணப்படும் அசுத்தங்களை அகற்றுவது நமது பொறுப்பே. விரோதிக்கவேண்டிய அசுத்தங்களை வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருந்தால், வீதிகளில் சென்று சுவிசேஷம் அறிவிப்பது சாதமற்றதாகிவிடும். வீட்டார் என்று விட்டுவிட்டால், தேவனே நம்மை விட்டுவிடும் சூழ்நிலைக்குத்தான் நாம் தள்ளப்பட்டுக்கிடப்போம்.
'நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு' என்று கர்த்தர் யாக்கோபினிடத்தில் சொன்னபோது, உடனே யாக்கோபு தன் வீட்டாரை யும் தன்னோடே கூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள் என்றான் (ஆதி. 35:1,2). ஆசாரியரும் லேவியரும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியைக் கொண்டுவர, தங்களைத் தாங்களே சுத்தம்பண்ணிக்கொள்ளவேண்டியதாயிருந்தது (1நாளா. 15:14). பரிசுத்தம் என்பது நமக்குள்ளே பிரதானமாகக் காணப்படவேண்டிய குணாதிசயம். ஆசாரியரும் லேவியரும் ஒருமனப்பட்டு தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டதுபோல (எஸ்றா 6:20) நம்மை நாமே சுத்திகரித்துக்கொள்வதற்கு நாம் ஒருமனப்படவேண்டும்.
ஆகான் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினதினால், கர்த்தருடைய கோபம் இஸ்ரவேல் புத்திரர்மேல் மூண்டது (யோசு. 7:1). தன்னுடைய ஜனம்தான், தன்னால் விடுவிக்கப்பட்டவர்கள்தான்; ஆகானும் அவர்களில் ஒருவன்தான்; ஆனாலும், துரோகம்பண்ணியபோது அவன் மேல் தேவன் கோபப்பட்டாரே. தன்னுடைய ஜனம் என்பதற்காக, தன்னுடைய நாமத்தைச் சுமந்துகொண்டு அவர்கள் தங்கள் இஷ்டப்படி எப்படி வேண்டுமென்றாலும் வாழ்ந்துகொள்ளட்டும் என்று விட்டுவிடுவதில்லை தேவன். 'சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே, விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே' என்று பாடுகிறோம் நாம், அவரோ அதைச் செயல்படுத்துகிறவர். கிறிஸ்தவர்கள் என்ற பெயரைத் தரித்துக்கொண்டு, தேவனுக்கு விரோதமான காரியங்களையே செய்துகொண்டிருக்கும் மக்களுக்கு தேவன் விரோதமாயிருக்கிறார். சுத்தத்தை விரும்பும் தேவன் தன் ஜனத்தைச் சுத்திகரியாமலிருப்பாரோ? அவர் சுத்திகரித்தால் நீங்கள் களஞ்சியத்தில் சேர்க்கப்படுவீர்களா? அல்லது, தூற்றுக்கூடையை கையில் வைத்திருக்கும் அவரால் தூசியாக மதிக்கப்படுவீர்களா? (லூக். 3:17)
எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டு, கானானை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் சித்தீமிலே தங்கியிருக்கையில், மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள். வேசித்தனம் பண்ணியதோடு மாத்திரமல்லாமல், மோவாபிய வேசிகள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி இஸ்ரவேல் ஜனங்களை அழைத்துச் சென்றார்கள்; இஸ்ரவேல் ஜனங்களும் போய் புசித்தார்கள்; விளைவு தேவனை மறந்து அந்நிய தேவர்களை வணங்க ஆரம்பித்துவிட்டார்கள் (எண்; 25:1-3). வேசித்தனத்திலிருந்து விருந்துக்கும், விருந்திலிருந்து விக்கிரக வணக்கத்துக்கும் படிப்படியாக மோவாபியர்கள் இஸ்ரவேல் ஜனங்களை இழுத்துக்கொண்டுபோனார்கள். வேசித்தனம், விருந்து, விக்கிரகம் இந்த மூன்றிலும் சிக்கிக்கொண்ட இஸ்ரவேல் மக்களைக் கண்டபோது கர்த்தருக்கு கோபம் மூண்டது. இவர்களை சுத்திகரிக்காவிட்டால், தன்னுடைய சம்பத்தையே (இஸ்ரவேல் ஜனத்தையே) இழக்க நேரிடும் என்று அறிந்த தேவன், தன்னை விட்டு விலகிப்போனவர்களை தூக்கிப்போடும்படியாகவும் ஆணை பிறப்பித்தார். சாராயத்தை நாடி ஓடுகிறவர்கள், அக்கிரமத்தில் வாழ்கிறவர்கள், பரிதானம் வாங்குகிறவர்கள், நியாயத்தைப் புரட்டுகிறவர்கள் என மேலும் பல்வேறு பாவத்தி;ற்குள் சிக்கிக்கிடக்கும் தனது ஜனங்களுக்கு விரோதமாய் கர்த்தருடைய கோபம் மூண்டதே (ஏசாயா 5:24). நம்முடைய நடக்கைகள், செயல்கள், வார்த்தைகள், வேலைகள், உறவுகள் என எதுவும் தேவனை நமக்கு விரோதமாகத் திருப்பிவிடாதபடி நம்மைக் காத்துக்கொள்ளுவோம்.
ஜனத்தின் ஒரு சிலருடைய பாவத்தினால் உண்டான தேவ கோபம் ஜனங்களுக்குள்ளே அழிவைக் கொண்டுவந்து, அப்படியே சபைக்குள் அழுகையையும் கொண்டுவந்தது. கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்திருப்போர்களே! ஊழியக்காரர்களே! நீங்கள் தவறும் போது, பாவத்தில் விழும்போது, உங்கள் நிமித்தமாக சபைக்குள் அழுகை உண்டாகிறது என்பதை மறந்துவிடவேண்டாம். ஏதோ ஒருவிதமான பாவத்தில் நீங்கள் சிக்கிக்கொண்டவர்களாயிருந்தால், 'ஆண்டவரே! இப்படிப்பட்ட பாவங்களில் சிக்கிக்கொண்டிருக்கிற ஊழியர்களை இரட்சியும்' என்ற அழுகையின் சத்தம் சபைக்குள் உருவாகும் என்பதை மறந்துவிடவேண்டாம். பாவங்களில் சிக்கிக்கொண்டவர்கள், சபைக்கு சந்தோஷத்தைக் கொண்டுவருவதற்குப் பதிலாக சாபங்களையே கொண்டுவந்துவிடுவார்கள். எதிரிகள் கூட வெல்ல முடியாத பெலமுடையவர்களாக இருந்த நம்முடைய மனிதர்களை, நாமே கொன்றுபோடவேண்டிய நிலை உண்டாகிவிட்டதே. தேவனுடைய கோபத்தை நீங்கச் செய்வதற்கு இதைத் தவிற வேறு வழியும் இல்லாமற்போயிற்றே என்று அழுதுகொண்டிருந்தார்கள். கர்த்தருடைய கட்டளையை செய்துமுடிப்பதற்குப் பதிலாக கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தனர் தலைவர்கள்.
கர்த்தருடைய உக்கிரமான கோபத்தை நீங்கச் செய்யும் பொறுப்பு ஜனத்தின் மத்தியிலிருந்த தலைவர்களிடத்தில் கொடுக்கப்பட்டது (வச. 4). எனினும், கர்த்தர் அறிவித்த இந்தக் காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பாக மோசேயும், இஸ்ரவேல் சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு முன்பாக நின்று அழுகொண்டிருந்தார்கள் (எண். 25:6). சுத்திகரிக்கும் பொறுப்பினைப் பெற்ற அவர்கள் உடனே புறப்பட்டுச் செல்லாமல், அழுதுகொண்டிருந்தால் தாமதமும் உண்டானது. கர்த்தரே பார்த்துக்கொள்ளட்டும் என்று அவர்கள் இருந்திருந்தால், சுற்றிலும் ஒருவரும் உயிரோடு இருந்திருக்கமாட்டார்கள். 'நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்கள் மனிதரைக் கொன்றுபோடுங்கள்' (எண். 25:5) என்பதே கர்த்தரின் ஆணை. தேவன் விரோதிக்கும் மனிதர்கள் நம்மிடையே காணப்படும்போது, நாம் அத்தகையோரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது. காயம்பட்டவனைச் சத்திரத்தில் சேர்ப்பதும், காயப்படுத்துவோரை சத்திரத்தில் கண்டுபிடிப்பதும் நமது பணியே. நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போது, நாம் அவர்களை எச்சரிக்கவேண்டும், இல்லயெனில் இரத்தப்பழியோ நம் கரத்திலேயே கேட்கப்படும் (எசே. 3:20). ஆண்டவரே தன் ஜனத்திற்கு விரோதமாக எழுந்து வாதித்துக்கொண்டிருந்தபோதிலும், தங்களுக்கு விரோதமாக எழும்ப தலைவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தார்கள். அழுகையினால் அல்ல செயலினால் பாவங்களைத் தடுத்து நிறுத்தவேண்டிய வேளை அது.
மோசேயும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கையில், அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்திலே அழைத்துக்கொண்டு வருவதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன் கையிலே பிடித்து, இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று (எண்; 25:6-8). தலைவர்கள் புறப்படும் முன்னர், பினெகாஸ் புறப்பட்டுவிட்டான் தடுத்தும் நிறுத்திவிட்டான். யாரோ ஒருவடைய தலைமைக்குட்பட்டது, அது யாரோ செய்யவேண்டியது, அதனைச் செய்வதற்கு தலைவர்களுக்கு மாத்திரமே அதிகாரம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தால், தாமதத்தினால் மடிவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேயிருக்கும். பாவத்தினால் உண்டான சபாததினால் சீரழியும் எண்ணற்ற கோடி மக்களுக்கு 'உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது' என்று சொல்லும் இயேசுவைக் காட்டவேண்டியது உங்கள் பொறுப்பல்லவா! பினெகாஸ் ஈட்டியால் குத்தியபோது வாதை நின்றுபோனதைப் போலவே, நம்முடைய பாவங்கள் அனைத்தையும் சுமந்தவராக, சிலுவையில் ஈட்டியால் குத்தப்பட்ட இயேசுவைக் கண்டால் அநேகருடைய வாழ்க்கையின் வாதைகள் நின்றுபோகுமே; விரைந்து செயல்படுவோம். ஆயுதமான ஈட்டியை அல்ல அவரையே ஈட்டியாகக் எடுத்துச் செல்லுவோம்.
இதைப்போலவே, மேர்சேயுடன் பேசும்படியாக அவனை சீனாய் மலைக்கு மேலே அழைத்தார் தேவன். சீனாய் மலையிலே தேவன் மோசேயோடு பேசி, கற்பனைகளை கற்பலகைகளில் எழுதி, மோசேயின் கைகளில் கொடுத்தார் (யாத். 31:8). எனினும், இந்த காலகட்டத்திற்குள், மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள் (யாத் 32:1). மோசே வருவதற்குத்தானே தாமதமானது! தேவன் அவர்கள் உடனேதானே இருந்தார்! மோசே இல்லாமற்போய்விட்டால், தேவனும் இல்லாமற்போய்விடுவாரோ? மோசே மரித்தால் தேவனும் மரித்துவிடுவாரா? அல்லவே. அப்படியிருக்க, மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; எனவே, நீர் எழுந்து எங்களை நடத்தும் என்று ஆரோனிடம் சொல்லியிருக்கலாமே. தலைவன் மறைந்துவிட்டான் என்று எண்ணி, தேவனையே மாற்றிவிட்டார்களே! எத்தனை வேதனையான மனநிலை இது. அவர் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன்; எத்தனை தலைமுறைகள் மாறினாலும், எத்தனை தலைவர்கள் மாறினாலும் தேவன் ஒருவரே. தலைவர்களை மாற்றலாம் அல்லது தலைவர்கள் மாறலாம் ஆனால், தேவன் மாறுவதில்லை. மோசேயோடு கூட இருந்த ஆரோனும், அறியாமல் பேசிய அந்த ஜனங்களுக்கு தேவனை அடையாளம் காட்டி அவர்கள் அறியாமையை நீக்கவில்லை ; மாறாக, அவர்கள் வார்த்தைகளுக்கும், ஆசைகளுக்கும், விருப்பங்களுக்கும் இழுக்கப்பட்டுப் போனான். ஜனங்கள் விரும்புவதைச் செய்பவர்கள் தலைவர்கள் அல்ல, தேவன் விரும்புவதைச் செய்பவர்களே தலைவர்கள். ஜனங்கள் போய்விடுவார்கள் என்று பலிசெலுத்திய சவுலை 'போ' என்று அனுப்பிவிட்டார் தேவன்; தங்களை உண்டாக்கிய தெய்வத்தை மறந்து, தெய்வத்தை தாங்கள் உண்டாக்கிவிடமுடியும் என்ற அறிவிலிகளாயிருந்தார்கள் இஸ்ரவேல் மக்கள். மோசே வரட்டுமே, என தாமதிக்க மனமற்றிருந்ததினாலலேயே இந்த மாபெரும் பாவத்திற்கு உடன்பட்டார்கள். தேவனிடத்திலிருந்து ஜெபத்திற்கு பதில் வருவதற்கு முன்பாக. குறிகாரர்களிடத்தில் ஓடிப்போய்விடவேண்டாம், விக்கிரகங்களை நாடிச் சென்றுவிடவேண்டாம்; பதில் உண்டு, பதில் உண்டு நிச்சயம்.
மோசே அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன் தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன் தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன் தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான் (யாத் 32:27). பட்டயமாகிய வேதத்தைக் கொண்டு நம்மை நாம் சுத்திகரித்துக்கொள்ளுவோம். வேதத்திற்கு விரோதமானவைகளை சகோதரன் செய்யக் காணும்போது, பட்டயத்தில் எழுதப்பட்டுள்ளதை எடுத்து சத்தியத்தை அவர்களுக்குச் சுட்டிக்காட்டுவோம்; பரிசுத்தத்தை நிலைநாட்டுவோம்.
எங்கே தாமதிக்கக்கூடாது, எங்கே தாமதிக்கவேண்டும் என்பதை அறிந்தவர்களாக நமது ஓட்டம் அமையட்டும். தேவனுக்கு தாமதியுங்கள், பாவத்திற்கு உடனே எதிர்த்து நில்லுங்கள்.
Comments
Post a Comment