Skip to main content

பேதுருவுக்குள் சாத்தான் புகுந்தான்

பேதுருவுக்குள் சாத்தான் புகுந்தான்


இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம், அவரது ஒவ்வொரு வார்த்தையில் பொதிந்துள்ள மொத்தக் கருத்துக்களையும், அதன் அர்த்தங்களையும் புரிந்துகொள்ளாவிடில், அவர் விரும்பிய திசைக்கு விரோதமாக பயணித்துவிடுவோம். அவரது சிந்தையையே நமது சிந்தை சுமக்கவேண்டும். பல நேரங்களில், 'என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல' என்று கர்த்தர் சொல்லும் நிலை நமது வாழ்க்கையில் உண்டாகிவிடுகின்றது (ஏசா 55:8). என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர் (சங். 139:2) என்று சங்கீதக்காரன் எழுதுகிறான்; எனினும், அவர் நினைவுகளை நாம் அறிந்திருந்து, அதையே செய்வோமானால் அவருக்குத் தூரமாயிருக்கமாட்டோம். பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால், அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை (யோவான் 8:29) என்ற இயேசுவின் வாய்மொழி நமது வாழ்க்கைக்கும் பொருந்திவிடும்.

இயேசு சிலுவையில் அறையப்படும் நாட்கள் சமீபித்துக்கொண்டிருந்தபோது, தனது சீடர்களுடன் பேசியவையும், சீடர்களின் செயல்பாட்டினையும் நாம் சற்று ஆராய்ந்தால், அது நம் வாழ்க்கைக்கும் நல்லதோர் பாடமே. இயேசு சீமோனை நோக்கி: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார் (லூக் 22:32). ஒரு மனிதனுடைய விசுவாசத்தை ஒழித்துவிட்டால், ஒரு கூட்டத்தையே சாத்தானால் புடைத்துவிட முடியும் என்பதை அறிந்த இயேசுவின் வார்த்தைகள் இவை. மேய்ப்பனை வெட்டினால், ஆடுகள் சிதறிப்போம் (சகரியா 13:7) என்பது தீர்க்கதரிசன வார்த்தைகள். இதையே, 'மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும்' (மத். 26:31) என்று இயேசுவும் சொல்லுகின்றார். தான் இந்த உலகத்தை விட்டுப் பிரியும் வேளை வந்தபோது, மந்தையை முன்நின்று நடத்தவேண்டிய அடுத்த வழிகாட்டியையே இயேசுவின் இந்த வார்த்தைகள் அடையாளம் காட்டிக்கொடுக்கின்றது. 'நீ பேதுவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் (மத். 16:18,19) என்று பேதுருவைப் பார்த்து இயேசு சொன்னார்.

அடுத்த தலைவனாக முன்னேறும் தைரியம் கொண்டிருந்த பேதுரு, இயேசு கடலில் நடந்து வந்ததைக் கண்டபோது தானும் அவரைப்போல நடக்கவேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தான். 'ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும்' என்றான். (மத். 14:28). அவனது ஆசை கடலின் மேல் இயேசுவை நோக்கி அடியெடுத்து வைக்கத் தூண்டியது. காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து அமிழ்ந்துபோகையில், ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று பேதுரு கூப்பிட்டான். அவனது வார்த்தையின்படி அவனைக் காப்பாற்றிய இயேசு, அவனது கையைப் பிடித்து, 'அற்பவிசுவாசியே ஏன் சந்தேகப்பட்டாய்?' (மத். 14:31) என்றார். பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை வாங்கவிருந்த பேதுருவுக்குள் அற்பவிசுவாசம் துளிர்விட்டிருந்தது; அது இயேசுவினால் அன்று அடையாளம் காட்டப்பட்டது.

இப்படிப்பட்ட பேதுருவின் விசுவாசத்தை ஒழித்துவிட்டால், முழு சீடர்கள் கூட்டத்தையும் கலைத்துவிடலாம் என்பது சத்துருவின் திட்டம்; இதனை இயேசுவும் அறிந்திருந்தார். தனது பாடுகளைக் குறித்து இயேசு பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட பேதுரு, 'அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்' (மத். 16:22). பேதுருவுக்குள் அவிசுவாசம் மட்டுமல்ல, சாத்தானும் புகுந்துவிட்டான் என்பதை அறிந்த இயேசு பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப் போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார் (மத். 16:23). யூதாஸுக்குள் சாத்தான் புகுந்து இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்கு முன்னமே, பேதுருவுக்குள் சாத்தான் புகுந்து இயேசுவை சிலுவைப்பாடுகளிலிருந்து திசைதிருப்ப முயற்சித்தான்; உலக ரட்சகராக அவர் மாறிவிடாதபடி, இயேசுவுக்கே இடறலாக அவனை மாற்றினான். பாடுகளை விரும்பாத பேதுரு இயேசுவின் பாதையினை மாற்ற நினைத்தான். பாடுகளை விரும்பாத அவன், பாடுகளின்போது, இயேசுவை விட்டு தூரமாகவே நடந்து சென்றான் (மத். 26:58).

பேதுருவைக் கொண்டு இயேசுவை திசை திருப்ப முடியாத சாத்தான், இயேசுவின் சீடர்களை திசைதிருப்பும் பணிக்கு அவனைப் பயன்படுத்தினான். இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்பு, சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள் (யோவா 21:3). ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் (மத் 28:19,20) என்ற இயேசுவின் கட்டளைக்கு சீமோனின் செயல் எத்தனை விரோதமானது.

நம்மிடத்தில், அவிசுவாசம் துளிர்விடத் தொடங்குமென்றால், நம்மைக் கொண்டு சாத்தான் கிரியை செய்ய திட்டமிடுவான்; அவிசுவாசிகள் அவனுக்கு அதிகம் தேவை. அவிசுவாசிகளை மற்றோருக்கு இடறலாகவும் மாற்றிவிடுவான். ஊழியத்தின் பாதையிலே கற்களாகக் கிடத்திவிடுவான். திட்டமிடும் நேரங்களில், இது நடக்குமா? என்ற சந்தேகத்தைக் கிளறிவிடுவான். தான் மாத்திரமல்ல, பிறரையும் விழத்தள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவான். இயேசு உலகத்திற்குள் அனுப்பச் சித்தமாயிருந்த சீஷர்களை, பேதுருவோ கடலுக்குள் அனுப்ப நினைத்தான். 'என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்' (மத். 4:19) என்றார் இயேசு, ஆனால், பேதுருவோ, 'என் பின்னே வாருங்கள் உங்களை மீன்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன்' என்கிறான்; இயேசுவைத் திருப்ப முடியாத சாத்தான், பேதுருவைத் திருப்பிவிட்டு சீஷர்கள் கூட்டப் படகையே கவிழ்த்துவிட நினைத்தான்.

சாத்தான் நம்மை வஞ்சித்துவிடாதபடிக்கும், நம்மைக் கொண்டு பிறரை வஞ்சித்துவிடாதபடிக்கும் நாம் எச்சரிக்கையாயிருப்போம். எனவே பவுல், 'பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்' (எபே. 4:27) என்று ஆலோசனை கூறுகின்றார். இடங்கொடுத்தால், நம்முடைய இருப்பிடத்தையே மாற்றிவிடுவான்; எச்சரிக்கை. மற்றவர்களை நடத்தும் திறமையும், தகுதியும், தாலந்தும் கொண்ட மனிதர்களைக் கடத்தும் தீவிரவாதி சாத்தான். எல்லாரையும் புடைக்கிறதற்கு சாத்தான் உத்தரவு கேட்டுக்கொண்டபோதிலும், இயேசுவோ பேதுருவின் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கே விண்ணப்பம்பண்ணினார். ஏனெனில், அவன் குணப்பட்டுவிட்டால், சகோதரரைக் ஸ்திரப்படுத்தும் சக்தி அவனுக்குள் இருப்பதை (லூக். 22:32) இயேசு அறிந்திருந்தார். இயேசு பேதுருவை நோக்கி: இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்று சொன்னபோது, பேருருவோ, நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள் (மத் 26:34,35). 'மறுதலிக்கமாட்டேன்' என்று பேதுரு சொன்னபின்தான், மற்ற சீஷர்களும் 'அப்படியே சொன்னார்கள்'. 

எனவே, இயேசு பேதுருவை நோக்கி, யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? (யோவான் 21: 15) என்று கேட்டார், இரண்டாந்தரமும் கேட்டார், மூன்றாந்தரமும் 'நீ என்னை நேசிக்கிறாயா?' என்று கேட்டார். தொடர்ந்து, என் ஆடுகளை மேய்ப்பாயாக என்ற பணியை அவனுக்குக் கொடுத்தார். கர்த்தரின் பணியைப் பெற்ற பேதுருவை, சாத்தான் தனக்குப் பணியவைக்க நினைத்தான்.

'என் தாசனாகிய யோபுவின்மேல் கவனம் வைத்தாயோ?' என்று சாத்தானைப் பார்த்து கர்த்தர் கேட்டபோது, 'நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? (யோபு 1:8,10) என்றான் சாத்தான். எனினும், யோபுவை சோதிப்பதற்கு கர்த்தர் அனுமதி கொடுத்தார், அச்சோதனையில் யோபுவே ஜெயித்தான். பேதுருவைச் சோதிப்பதற்கும் கர்த்தர் அனுமதி கொடுத்தார், ஆனால் பேதுருவோ அச்சோதனையில் தோற்றுப்போனான்.

பேதுரு தனக்கு இஷ்டமான இடங்களிலே, விருப்பமான இடங்களிலே நடந்து திரிந்தவன் என்பதை இயேசுவும் குறிப்பிடுகின்றார். நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும் போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் (யோவா 21:18). மறுரூபமலையில் பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும்,மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான் (மத் 17:4). பேதுரு பாடுகைள விரும்பாமல், சுகமாக வாழும் சிந்தை கொண்டிருந்தான், அதுவே அவன் விருப்பமாகவும் இருந்தது; எனினும், அவனது இறுதி நாட்களில், அவனுக்கு இஷ்டமில்லாத பாடுகளைச் சந்திக்கும் நிலைக்கு அவன் கொண்டுபோகப்படுவான் என்பதையே இயேசு அவனுக்கு அறிவித்தார்.

பேதுருவின் வாழ்க்கையில் இத்தனை நடந்திருந்தாலும், 'உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்' என்ற மத்தியஸ்தராகிய இயேசுவின் ஜெபம் பேதுருவை மறுபடியும் அவனை எடுத்து நிறுத்தியது; அப்போஸ்தலனாக மாற்றியது, ஆதி திருச்சபைகளுக்கு அசைக்க முடியாத வலுவான தூணாக அவனை மாற்றியது. ஆடுகளை மேய்க்கும்படி தெரிந்துகொள்ளப்பட்ட நாம், சத்துருவின் கண்ணியில் அகப்பட்டுக்கொள்ளவேண்டாம்.  

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...