Skip to main content

இன்னும் இடம் இருக்கிறது

இன்னும் இடம் இருக்கிறது

 

பரம பணிக்கென்று பாரிலே அழைக்கப்பட்ட பலர் பாதை மாறி சென்றுகொண்டிருக்கின்றனர். அது தேவனுடைய பணி, தன்னுடைய பணி அல்ல என்று தன் வழியிலேயே நின்றுகொண்டிருக்கின்றனர். தாங்கள் அழைப்பினைப் பெற்றவர்கள் என்பதை அடுத்தவர் வந்துதான் ஞாபகமூட்டவேண்டிய நிலையிலேதான் இன்னமும் அநேகருடைய வாழ்க்கையின் நிலை காணப்படுகின்றது. தேவனுக்காகத்தான் தான் என்றும் தேவனுக்காகத் தான் செய்யவேண்டியது இன்னதென்றும் அறிந்திருந்தும், அழைப்பிருந்தும், எங்கே இருக்கிறார்களோ அங்கேயே இருந்துகொண்டிருக்கின்றனர். அத்தகையோரின் வாழ்க்கை சத்துருவுக்கு ஆனந்தத்தையும், சத்தமிட்டுக் அழைத்த தேவனுக்கு அங்கலாய்ப்பையுமல்லவா கொண்டுவரும். நாம் அழைக்கப்பட்டிருந்தால், அடுத்து செய்யவேண்டியது என்ன? நாம் அழைக்கப்பட்டிருந்தால் அன்புகூருவது யார் மேலே? நாம் அழைக்கப்பட்டிருந்தால் அமரவேண்டியது எவ்விடத்திலே? என்ற சுலபமான கேள்விகள், நம்மை எளிதாக அழைப்பை நோக்கி நகரச் செய்ய வலிமையுடையவைகள். சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன (ஏசா 52:7) என்று சுகமான இடத்தில் அமர்ந்திருக்கிறவர்களையல்ல, சுவிசேஷத்தை அறிவிக்க அலைந்து திரிகிறவர்களைக் குறித்தல்லவா தேவன் எழுதிவைத்துள்ளார்.

ஆங்காங்கே விளைச்சலை ஆயத்தப்படுத்துவது தேவனுக்கு எளிது, ஆனால், அவ்விளைச்சலை அறுக்க வேலைக்காரர்களை அழைப்பது கடினமான காலமிது. இதனைக் குறிக்கும்படியாகவே இயேசு ஓர் உவமையை சொன்னார். ஒரு மனுஷன் பெரிய விருந்தை ஆயத்தம்பண்ணி அநேகரை அழைப்பித்தான். விருந்து ஆயத்தமாயிருந்தது, விருந்துண்ணும் வேளையும் நெருங்கிக்கொண்டிருந்தது; ஆனால், விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் எவருமே விருந்து வீட்டிற்கு வந்துசேரவில்லை. அனைத்தும் ஆயத்தம் ஆனால், ஆட்கள் இல்லை. எனவே, அழைக்கப்பட்டவர்களை இரண்டாம் முறையாக மீண்டும் அழைக்கும்படி தனது ஊழியக்காரனை அனுப்பினான் எஜமான். விருந்து வீட்டில் இன்னும் அனைத்தும் ஆயத்தமாகியிருக்காது என்று ஒருவேளை அவர்கள் தாமதித்துக்கொண்டிருக்கலாம் என்ற எண்ணத்தோடு, 'எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள்' என்று சொல்லி அனுப்பினான். என்றபோதிலும், விருந்து ஆயத்தமாயில்லை என்ற காரணத்தினால் அல்ல, தாங்கள் வர ஆயத்தமாயில்லை என்ற பதிலே ஊழியருக்குக் கிடைத்தது. பெரிய விருந்தை ஆயத்தம் பண்ணும் எஜமானுக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுக்கும் மக்கள் இவர்கள், மாத்திரமல்ல ஆயத்தம்பண்ணப்பட்ட விருந்தையும் வீணடிக்கிறவர்கள்.

அழைக்கப்பட்டும் அமர்ந்துவிடும் மக்கள் பெருகிவருவதால், பல ஊழியங்களில் இன்னும் அழைக்கப்பட்டோருக்கான இடம் காலியாகவே கிடக்கிறது. விரிவடைந்துவிட்ட ஊழிய ஸ்தாபனங்கள், விஸ்தாரமான பரப்பளவில் செயல்படும் ஊழியங்கள், உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் என பிரம்மிக்கத்தக்க வளர்ச்சி கண்ணுக்குத் தென்பட்டாலும், உள்ளே ஊழியர்கள் இல்லாத நிலை. அழைப்பு பெற்றவர்கள் அசட்டையாக இருந்துகொண்டிருப்பதினால், அழைப்பினைக் குறித்த அக்கறையில்லாதிருப்பதினால், விண்ணுலகப் பணியினை மறந்து மண்ணின் வாழ்வோடு பிண்ணிப் பிணைந்து கிடப்பதினால், அழைக்கப்பட்ட இடத்திற்கு செல்ல மனதில்லாமல் இருக்கின்ற இடத்திலேயே பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லி, தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து நகர்த்திக்கொண்டிருப்பதினால், ஊழியங்கள் பல இத்தகைய நிலையைச் சந்திக்க நேரிடுகின்றன.

ஊழியங்களில் ஊழியர்கள் இல்லாமற் போகிறதற்கு, அழைப்பு பெற்றும் அமர்ந்திருக்கும் நீயே பொறுப்பு. வேலை ஆயத்தமாயிருந்தும், எஜமான் காத்துக்கொண்டிருந்தும், ஆயத்தமாயிருக்கும் கதிர்களை அறுக்க முற்படாமல், அழைப்பை ஏற்று புறப்படாமல் இருந்தால், களத்தில் அழியும் கதிர்களுக்கு நீயே பொறுப்பு. இன்றும், இன்னும் வேலையாட்களைத் தேடிக்கொண்டிருக்கும் ஊழிய ஸ்தாபனங்கள் உண்டே, உன் கண்களால் அவைகளைக் கண்டதுண்டா? இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் (மத் 9:37,38) என்று வேலையாட்களின் தேவையை அறிவிக்கின்றார். 'ஆட்கள் தேவை' 'ஆட்கள் தேவை' என்ற விளம்பரம், ஆண்டவராலேயே வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்க, தகுதியிருந்தும், தாலந்துகளிருந்தும், அழைப்பிருந்தும் களத்திலே நுழைய தயங்குவொரே விருந்தை வீணடிப்போர்.

அழைக்கப்பட்டோர்கள் வர மறுத்துவிட்டால், அதனை ஈடு செய்ய எஜமான் எடுக்கும் முயற்சி அதிகமானது. அழைக்கப்பட்டவர்கள் விருந்துக்கு வராததைக் கண்ட வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான் (லூக் 14:21).. ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான் (லூக் 14:22). அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா (லூக் 14:23) என்றான். அழைக்கப்பட்டவர்கள் வர மறுக்கும்போது, அதனை சரிக்கட்டுவதில்தான் எத்தனை சிரமம். ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைத்தாலும் விடோ நிரம்பவில்லை. பெருவழிகளிலும், தெருக்களிலும் ஊழியர்கள் தேடித்திரியும் நிலை உண்டாகிவிடுகின்றது. அப்படியென்றால், விருந்துக்கு எஜமானால் அழைக்கப்பட்டவர்களின் தொகை எத்தனை அதிகமாயிருந்திருக்கும். கட்டளையின்படி செய்துமுடித்துவிட்டாலும் 'இன்னும் இடம் இருக்கிறது' என்பதுதான் எஜமானின் ஏக்கக் குரல். நமக்கு அழைப்பை மாத்திரம் கொடுக்கிறவரல்ல தேவன், மறுபுறத்தில் விருந்தையும் ஆயத்தம் செய்கின்றவர். குறிப்பிட்ட ஓர் இடத்திற்கு நாம் அழைக்கப்பட்டிருந்தால், நாம் அங்கு வருவோம் என்ற ஆவலுடன் ஆத்துமாக்களை ஆயத்தப்படுத்தத் தொடங்குகின்றார் தேவன்; அதுவே நமக்கு விருந்து. நமது வருகைக்காக எதிர்பார்த்து, எதிர்பார்த்துக் காத்திருந்து, நாம் அழைப்பினைக் கைவிடும்போது, நம்மை நம்பி ஆயத்தம்பண்ணிய ஆத்துமாக்களைக் கைவிடுகிறவரல்ல தேவன். விருந்தை வீணடிக்கும் மனிதர்களாக நாம் காணப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம். அழைக்கப்பட்டவர்களே, உங்கள் அழைப்பின் இடம் ஆயத்தம்.

வழக்கமாக நடைபெற்றுவரும் வராந்திர ஜெபக்கூடுகை, ஒருமுறை எங்களது வீட்டில் நடைபெறவிருந்தது. ஜெபம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, இடையில் எழுந்து செல்லும் நிலையினைத் தவிற்க, ஜெபக்கூடுகைக்கு வரவிருப்போருக்கான தேனிர் மற்றும் திண்பண்டங்களை கூடுகை தொடங்குவதற்கு முன்னரே நாங்கள் ஆயத்தப்படுத்தத் தொடங்கினோம். அனைத்தும் ஆயத்தமாக்கிவிட்டு காத்திருந்தோம், மாலை சுமார் 7 மணி, ஒரு சில சிறுவர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்; ஆனால், குடும்பத்தினரோ, பெரியவர்களோ எவருமே வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்தும், எவருமே வராத நிலையில், குடும்பத்தினரான நாங்கள் வந்திருந்த ஒரு சில சிறுவர்களுடன் பாடல் பாடி ஜெபித்து முடித்தோம். ஆனால், பாத்திரத்தில் இருந்த சுமார் 25 பேருக்கான தேனீரையும், திண்பண்டங்களையும் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தவர்களாக இருந்தோம்; அப்போது, வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபோது கட்டிடம் ஒன்றில் கட்டிடப் பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். ஆயத்தம் செய்தவைகள் வீணாகிவிடக்கூடாது என்ற எண்ணத்துடன், அவைகளை எடுத்துச் சென்று அவர்களுக்குக் கொடுத்தோம். திடீரென வந்த தேனீரைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அழைக்கப்பட்டவர்கள் வராவிட்டாலும், ஆயத்தம் செய்தவைகளை நாங்கள் வீணாக்கவில்லை. 

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் (யோவா 14:2,3) என்றார் இயேசு. நாம் பரலோகம் செல்வதற்கு முன்னமே நமக்கான அத்தனையையும் அங்கே ஆயத்தம் செய்துவிடுகின்றவர் இயேசு. இத்தனை ஆயத்தங்களுடன் அவர் அங்கே காத்திருக்க, அழைக்கவரும்போது நாம் உடன் செல்லத் தகுதியற்றவர்களாகக் காணப்பட்டால், ஆயத்தம் செய்யப்பட்டவைகளை நாம் அவமதித்தவர்கள்தானே. உலகத்தின் சிற்றின்பங்களிலும், பாவங்களிலும், உல்லாசங்களிலும், ஆஸ்திகளிலும் சிக்கிக்கொண்டு பரலோகத்தை இழந்துவிடும் மனிதர்களாக நாம் காணப்படக்கூடாது. காத்திருக்கும் இயேசுவின் எதிர்பார்ப்பினைப் புரிந்துகொள்ளுவோம். 'வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே' என்ற வார்த்தைகளை நமது காதுகள் பரலோகத்தில் நுழையும்போது கேட்கட்டும். 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...