Skip to main content

பின்பற்றுவோரா? விசுவாசிப்போரா?

பின்பற்றுவோரா? விசுவாசிப்போரா?

 

அற்புதங்கள் ஜனங்களை இயேசுவண்டை ஈர்த்தன. இயேசு அற்புதங்களைச் செய்வதையும், நோய்களைக் குணமாக்குகிறதையும் கண்ட ஜனங்கள் ஆச்சரியப்பட்டனர், மாத்திரமல்லாமல், அவருக்குப் பின்னாகக் செல்லத்தொடங்கினர். 'திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களைச் சொஸ்தமாக்கினார்' (மத். 19.2) என்ற வசனத்தின்படி, பின் சென்ற ஜனங்கள் யார் என்றும் நாம் அறிந்துகொள்ளமுடியும்; வியாதியிலிருந்து சொஸ்தமாக்கப்படவேண்டியவர்களே அநேகர் அவருக்குப் பின் சென்றார்கள். இயேசு வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள் (யோவான் 6:2). இயேசு செய்த அற்புதத்தைக் கண்டதினாலேயே 'மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி' (யோவான் 6:14) என்று சொன்னார்கள். இயேசுவும், சீஷர்களும் கெனேசரேத்து நாட்டை அடைந்தபோது, அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள் (மத். 14:34,35). எங்கெல்லாம் இயேசு பயணித்துக்கொண்டிருந்தாரோ, அங்கெல்லாம் அவரைத் தேடிச் சென்றுகொண்டிருந்தனர் ஒரு கூட்டத்தினர்.

அப்படியே, அப்பம் கிடைத்ததினாலே ஒரு கூட்டத்தினர் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டிருந்தனர். இயேசு உபதேசிக்கும்போது பசியாயிருந்த அவர்களை போஷித்தார்; ஆனால், அவர்களோ போஜனத்திற்காகவே அவரைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர் என்பதை இயேசு சுட்டிக்காட்டுகின்றார். நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (யோவா 6:26) என்று அவர்களது நிலையினை எடுத்துக் கூறுகின்றார். இத்தகையோர் இயேசுவைப் தங்கள் ஆசை நிறைவேறவேண்டுமென்று பின்பற்றியவர்கள், ஆதாயத்தையும், ஆசீர்வாதங்களையும் பெறவேண்டுமென்று பின்பற்றியவார்.

அடுத்த கூட்டத்தினர், தன்னுடையவைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றியவர்கள். 'நீ என்னைப் பின்பற்றி வா' (மத். 8:22) என்று இயேசு அழைத்தபோது, அந்த அழைப்பினை ஏற்றவர்களாக அத்தனையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றியவர்கள். 'தன்னைத்தான் வெறுத்தும், சிலுவையை எடுத்துக்கொண்டும்' 'ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்தும்' 'தகப்பனையும் தாயையும் விட்டும்' பின்பற்றியவர்கள் இந்தக் கூட்டத்தில் உண்டு. என்றபோதிலும்கூட, சிலரால் இப்படியும் பின்பற்ற இயலாது போயிற்று. 'நீபூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு என்னைப் பின்பற்றிவா' (மத். 19:21) என்று இயேசு சொன்னபோதோ, அந்த மனிதனால் கூடாமல் போயிற்று.

தேடிவந்த கூட்டத்தினராயிருந்தாலும், எல்லாவற்றையும் விட்டுவந்த கூட்டத்தினாயிருந்தாலும், அவர்கள் உள்ளத்தில் பிதாவைப் பற்றியும், அவர் அனுப்பின குமாரனான தன்னைப் பற்றியும் விசுவாசத்தை வர்த்திக்கச் செய்யவேண்டும் என்பதே இயேசுவின் குறிக்கோளாயிருந்தது. அவர்களுடைய 'அற்பவிசுவாசத்தை' அகற்றவேண்டும் என்பது இயேசுவின் நோக்கமாயிருந்தது. இஸ்ரவேலருக்குள்ளே 'விசுவாசத்தைக் காணவேண்டும்' என்பது இயேசுவின் முதல் வாஞ்சையாயிருந்தது. நூற்றுக்கு அதிபதியை நோக்கி 'நீ விசுவாசித்தப்படியே உனக்கு ஆகக்கடவது' என்றார் (மத். 8:13); குருடர்களை நோக்கி, 'எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா?' (மத். 9.28) என்றார்; திமிர்வாதக்காரனின் 'விசுவாசத்தைக் கண்டு' திடன்கொள் என்றார் (மத். 9.2); பெரும்பாடுள்ள ஸ்திரீயை நோக்கி, 'உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது' (மத். 9:22) என்றார்; கானானிய ஸ்திரீயை நோக்கி, 'ஸ்திரியே, உன் விசுவாசம் பெரியது' (மத். 15:28) என்றார்; ஆனால், இத்தகைய விசுவாசம் இல்லாமல், குணமாகுதலைப் பெற்றுக்கொள்ளாமலிருந்தோரை நோக்கி, 'விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே' (மத். 17:17) என்று அங்கலாய்த்தார். ஒரு மனிதன் ஆண்டவரைத் தேடிவந்து, ஆண்டவரே என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான். 'உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற்போயிற்று' (மத். 17:15,16) என்று குணமாக்குதலுக்குக் காரணமான தங்கள் விசுவாசத்தைக் குறித்து கவலை கொள்ளாமல், சீஷர்களைக் குற்றஞ்சாட்டினார்கள். இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார் (மத் 17:17). சீஷர்களைக் குற்றஞ்சாட்டும் நீங்கள் விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததி என்று எடுத்துக்கூறினார். இதைக் கேட்ட சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று? என்று கேட்டபோது, 'உங்கள் அவிசுவாசத்தினால்தான்' (மத். 17:19,20) என்று சீஷர்களின் அவிசுவாசத்தையும் இயேசு சுட்டிக்காட்டினார். பல்வேறு சூழ்நிலைகளில் அவர்களுடைய அற்பவிசுவாசத்தை இயேசு கோடிட்டுக் காட்டுகின்றார் (மத். 6:30). அழைக்கப்பட்டவர்களாயிருந்தாலும், தன்னைப் பின்பற்றுபவர்களாயிருந்தாலும், சீஷர்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றவர்களாயிருந்தாலும், அவிசுவாசம் அவர்களுக்குள் காணப்பட்து. எனவே இயேசு சீஷர்களை நோக்கி, நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார் (மத் 21:21,22). யேசுவை பின்பற்றும் நாம் அவர்மேல் உள்ள விசுவாசத்தில் குறைந்தவர்களாயிருக்கக்கூடாது. கடலில் பேதுருவை 'அற்பவிசுவாசியே' (மத். 14:31) என்றும், சீஷர்களைப் பார்த்து 'அற்பவிசுவாசிகளே ஏன் பயப்படுகிறீர்கள்?' (மத். 8:26) என்றும் சொன்னாரே.

நம்முடைய நோக்கங்களுக்காக அவரைப் பின்பற்றும் கூட்டத்தினராக அல்லாமல், அவர் மேல் விசுவாசம் வைக்கும் சந்ததியாராக மாறவேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். அற்புதங்களை பெறும் ஜனங்கள், சுகத்தைப் பெறும் ஜனங்கள், ஆசீர்வாதங்களைப் பெற்றனுபவிக்கும் ஜனங்கள் பலர் தொடர்ந்து இயேசுவைப் பின்பற்றிக்கொண்டிருந்தாலும், அவர் மேல் விசுவாசம் வைப்போராக மாறாதிருக்கின்றனர். நம்மை தேவன் ஆசீர்வாதங்களினால் மகிழ்விக்கிறது போல, நாமும் அவர்மேல் விசுவாசம் வைத்தால் மாத்திரமே தேவனும் மகிமைப்படுவார். இயேசுவைப் பின்பற்றும் நாம் இந்த இரண்டாம் நிலையில் உள்ளவர்களா? விசுவாசக் கூட்டத்தினரா? தேவன் மகிமைப்படும்படி வாழும் ஜனங்களா? என்பதை ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். 'எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்' என்று அப்போஸ்தலர்கள் ஜெபித்தது போலவே (லூக். 17:5) நாமும் நமது விசுவாசத்தை வர்த்திக்க வேண்டும். மாம்சத்தின்படி ஆபிரகாமை தகப்பன் என்று சொல்லுவோராக அல்ல, விசுவாசத்தின்படி ஆபிரகாமின் சந்ததியார் என்று அழைக்கப்படும் நிலைக்கு நமது ஆவிக்குரிய வாழ்க்கை உயரட்டும்.

முதலாம் அற்புதத்தை இயேசு கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள் (யோவான் 2.11). எல்லாவற்றையும் விட்டு வந்தவர்கள்தான், படகினை அப்படியே கடலில் விட்டுவிட்டு வந்தவர்கள்தான்; என்றாலும், அவர்களுக்கு எதிர்காலத்தைக் குறித்த விசுவாசம் இல்லாதிருந்தது. எனவே, 'இதோ நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும்? (மத். 19:27) என்று கேட்டார்கள். அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 19:28) என்றார். மேலும், என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு (யோவான் 5:24) என்றார் இயேசு. 'நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை?' (யோவான் 8:46) என்று கேட்டார். விசுவாசிக்கிறவன், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான் (யோவான் 14:12), 'என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்' (யோவான் 11:25), விசுவாசிக்கிறவனே பிதாவின் சிநேகத்தைப் பெற்றுக்கொள்கிறான் (யோவான் 16:27). 'பிதாவே நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக வேண்டிக்கொள்கிறேன்' (யோவான் 17:21) என்றார்.

லாசரு வியாதியாயிருந்த செய்தி இயேசுவுக்கு அறிவிக்கப்பட்டபோது, இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார் இயேசு (யோவா 11:4). லாசருவை கல்லறையிலிருந்து உயிரோடு கூட இயேசு எழுப்பும் வேளையில், 'பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன்' (யோவா 11:41,42) என்று ஜெபித்தார். கல்லறைக்கு உள் இருக்கும் ஒருவனை உயிரோடு கூட எழுப்பும் நேரத்தில், கல்லறைக்கு வெளியே உயிரோடு நிற்கும் மனிதர்களுக்குள் விசுவாசம் துளிர்விடவேண்டுமென்று விரும்பினார் இயேசு. அற்புதங்களை மாத்திரம் செய்து, சூழ்ந்து நிற்போரை அசத்திவிட அல்ல, ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட அல்ல, தன்னை நிரூபிக்க அல்ல காண்போரையும் உயிர்ப்பிக்கவேண்டும் என்பது இயேசுவின் விருப்பம்.

இயேசு மீண்டும் பெத்தானியாவில், மரணத்திலிருந்து உயிரோடே இயேசு எழுப்பியிருந்த லாசருவின் வீட்டிற்கு வந்திருந்தபோது; அங்கும் திரள் கூட்டத்தினர் அவரைச் சூழ்ந்துகொண்டனர். அப்பொழுது, யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாகமாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள். லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தார்கள் (யோவா 12:10). இதைக் கண்ட பிரதான ஆசாரியர்கள், யூதர்கள் இயேசுவை தேடிப்போகக் காரணமாயிருந்த லாசருவை அழித்துவிட நினைத்தார்கள். இயேசுவை கொலை செய்யும் திட்டம் அவர்களுக்கு இருந்தது, என்றபோதிலும் அந்தப் பட்டியலுடன் இப்பொழுது லாசருவையும் கூட்டிக்கொண்டார்கள் (யோவான் 12:11). ஜனங்கள் இயேசுவை விசுவாசிப்பதற்கு நாம் காரணமாயிருப்போமென்றால், சத்துருவின் கொலைப் பட்டியலில் நமது பெயரும் எழுதப்படலாம், அச்சம் வேண்டாம். இதையே இயேசு, பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார் (லூக் 23:31). விசுவாசம் வைத்த சீஷர்கள் தங்கள் வாழ்க்கையை இயேசுவுக்காகக் கொடுத்தனர்.  

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...