இதயங்கள் திரும்பட்டும்
தேவனை விட்டுத் தூரமாய் நிற்கும் ஜனங்களை, தேவனிடமாய்த் திருப்புவதே தேவ ஊழியர்களின் பிரதானப் பணி. தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்புவதற்கு முன்னும், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்தில் பிரவேசிக்கச் செய்தபோதும், தன்னுடைய ஒரே பேறான குமாரனை பரத்திற்கு எடுத்துக்கொண்டு, அவர் செய்து முடித்ததினாலும் மற்றும் ஜெயித்து முடித்ததினாலும், தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியை இந்த உலகத்தில் நமக்கு அனுப்பித்தந்ததினாலும் உண்டான பின் விளைச்சலை அறுக்கும்படியாக, இவ்வுலகத்தில் பரலோக இராஜ்யப் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் பன்னிரெண்டாம் மணி நேர பணியாளர்களாகிய ஊழியர்களைக் கொண்டும் இடைவிடாது இன்றுவரை தேவன் செய்துவரும் பணி இதுவே. இந்த இலக்கினை அடையும்படியாகவே, அநேக தீர்க்கதரிசிகளையும், அப்போஸ்தலர்களையும், தேவ மனிதர்களையும் இன்றுவரை தேவன் எழுப்பிவருகின்றார்; அவர்களில், ஒருவருக்கொருவரைத் தொடர்புபடுத்தி, இயேசு கிறிஸ்து கூறிய இரண்டு தேவ மனிதர்களாகிய எலியா மற்றும் யோவான் ஆகியோரின் பணிகளும், அத்துடன், மனிதனாக இவ்வுலகத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவின் பணிகளும் நமக்கும் இந்நாட்களின் அறுவடைக் களத்தில் மாதிரியானவைகளே. பிள்ளைகளுடைய இருதயத்தைப் பிதாக்களிடத்திற்குத் திருப்பின, எலியாவின் தலை யேசபேலினால் தேடப்பட்டது; யோவான் ஸ்நானகனின் தலை ஏரோதியாளினால் துண்டிக்கப்பட்டது; அவ்வாறே, இயேசு கிறிஸ்துவின் தலையும் ஏரோதுவினால் தேடப்பட்டது; இன்றும் இப்படி கடினமானதே!
இதயங்களைத் திருப்பும் இறைத் தூதர்கள்
இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் 'பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்' (மல்கியா 4:5,6) என்று மல்கியா தீர்க்கதரிசியைக் கொண்டு முன்னறிவிக்கின்றார் தேவன்.
பிரியமானவர்களே! கர்த்தருடைய நாள் இந்த பூமியில் வரும் முன்னர், அவரை அறிந்திருக்கின்ற, அவரை ஏற்றுக்கொண்டிருக்கின்ற, அவருக்காக ஓடி ஓடி உழைக்கின்ற நம்முடைய கரங்களில், 'பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்பும்' மிக முக்கியமான பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது. அது ஊழியப்பாதையில் நம்மை முடுக்கி முன்னெடுத்துச் செல்லப் போதுமானது. இதனையே, மல்கியா தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் நமக்கு ஞாபகப்படுத்துகின்றார்.
தாவீதைத் தொடர்ந்து இஸ்ரவேலின் மேல் ராஜாவான அவனது குமாரனாகிய சாலொமோன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான் (1இராஜா. 11:6) என்று 'தகப்பனாகிய தாவீதுடன் ஒப்பிட்டுக்' கூறும் வேதம், பிரிக்கப்பட்ட இஸ்ரவேலின் முதல் இராஜாவாகிய யெரொபெயாமை நோக்கி: 'உனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தேவர்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் உண்டுபண்ணி, உனக்குப் புறம்பே என்னைத் தள்ளிவிட்டாய்' (1இராஜா. 14:9) என்றும், யெரொபெயாமின் ஸ்தானத்தில் ராஜாவான நாதாபைக் குறித்து (1இராஜா. 14:20), 'அவன் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்' (1இராஜா. 15:26) என்றும், நாதாபின் ஸ்தானத்தில் ராஜாவான பாஷhவைக் குறித்தும் மற்றும் பாஷாவின் குமாரனாகிய ஏலாவைக் குறித்தும், 'இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்கிச் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான அவர்களுடைய எல்லா பாவங்களினிமித்தமும்' (1இராஜா. 16:12) என்றும், ஏலாவின் ஸ்தானத்தில் ராஜாவான சிம்ரியைக் குறித்து, 'அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும் அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவன் பாவத்திலும் நடந்ததினால், கட்டிக்கொண்ட அவனுடைய பாவங்களினிமித்தம் அப்படி நடந்தது' (1இராஜா. 16:19) என்றும், சிம்ரியின் ஸ்தானத்தில் ராஜாவான உம்ரியைக் குறித்து, 'நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் சகல வழியிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குத் தங்கள் வீணான விக்கிரகங்களாலே கோபம் மூட்டும்படியாய் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவங்களிலும் நடந்தான்' (1இராஜா. 16:26) என்றும்,
உம்ரியின் ஸ்தானத்தில் ராஜாவான ஆகாபைக் குறித்து, தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான் (1இராஜா. 16:30) என்றும், அரசர்களாயிருந்த நாட்களில் கர்த்தருக்குத் தூரமாகவும், துக்கமாகவும் காணப்பட்ட அவர்களது வாழ்க்கையை எடுத்துக் கூறுகின்றது.
அத்துடன், சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் 'தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல', தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை (1இராஜா. 11:4), சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல் என்று கூறும் வேதம், யூதாவின் ராஜாவாகிய ஆசாவைக் குறித்து, ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப்போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான் (1இராஜா. 15:11) என்றும், அமத்சியாவைக் குறித்து, அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போலல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான் (2 இராஜா. 14:3) என்றும், ஆகாசைக் குறித்து, அவன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல் (2இராஜா. 16:2)
என்றும் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற (1சாமு. 13:14; அப். 13:22) 'தகப்பனாகிய தாவீதையே' முன்னுதாரனமாகக் கொண்டு, அவர்களது வாழ்க்கையையும், செயல்பாடுகளையும், தேவனோடு அவர்கள் கொண்டிருந்த தொடர்பினையும் அளவிட்டுக் கூறுகின்றது. இப்படி பொல்லாப்பு செய்யத் தங்களை விற்றுப்போட்டிருந்த மற்றும் 'பொல்லாப்பிற்குள் சிக்குண்டுக் கிடந்த இராஜாக்களையும், மக்களையும், மீண்டும் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற தகப்பனாகிய தாவீதின் இருதயத்திற்கு நேராகத் திருப்புவது' தேவனது விருப்பமாயிருந்தது.
எலியா: இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் நாட்களில் அப்பணியினைச் செய்த எலியா, சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக் குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் (1இராஜா. 18:21) என்று சொன்னதோடு மாத்திரமல்லாமல், பாகால் தீர்க்கதரிசிகளுக்கு முன்பாக, அதற்கான சவாலையும் சந்திக்க ஆயத்தமாயிருந்தான். எலியாவின் சவாலுக்கு இணங்கின பாகாலின் தீர்க்கதரிசிகள், காளையை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலை தொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டபோதும், அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினபோதும், உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு, இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டபோதும், அவர்களுக்கு மறுஉத்தரவு எதுவும் கிடைக்காமல் தோல்வியடைந்து சோர்ந்துபோனபோது
(1இராஜா. 18:26-29), கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய எலியா, பரலோகத்தின் தேவனை நோக்கி விண்ணப்பஞ் செய்தபோது, 'ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே', (பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே) இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படியே செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும் என்று, பிதாக்களின் நாமங்களைச் சொல்லி, அவர் அங்கள் பிதாக்களின் தேவன் என்பதையும் அறியும்படியாக அல்லவோ அவர்களது செவிகள் கேட்க விண்ணப்பம் செய்கின்றான்.
'ஒருபுறம் 'கர்த்தரே தேவன்' என்றும் மறுபுறம் 'பிதாக்களின் தேவன்' என்றும் நிரூபிக்கத் துடித்த எலியாவின் விண்ணப்பத்திற்கு உடனே பரத்திலிருந்து பதில் வந்தது. கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம் என்றார்கள்
(1இரா 18:36,38,39). பிதாக்கள் தொழுது சேவித்த தேவனை விட்டு விலகி தூரமாகச் சென்று, 'பாகாலை வணங்கிக்கொண்டிருந்த பிள்ளைகளாகிய ஜனங்களின் இருதயத்தை, பிதாக்களின் இருதயத்தை நோக்கித் திருப்பும்' இப்பணியினை எலியாவைக் கொண்டு அருமையாய் தேவன் நிறைவேற்றினாரே. 'பிள்ளைகளின் இருதயத்தை பிதாக்களிடத்திற்குத் திருப்பும்' இப்பணி சவால்கள் நிறைந்தது; எதிர்ப்புகள் நிறைந்தது. எலியாவினால் செய்யப்பட்டவைகளைக் கேள்விப்பட்ட யேசபேல், எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களின் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால் தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னதைப் போல (1இராஜா. 19:2),
சத்துருக்களின் தோல்வியையும் நமது வெற்றியையும் கேள்விப்படும் யேசபேல்களின் ஆவியைக் கொண்ட மனிதர்கள் நமக்கு எதிராக எழும்பக்கூடும்; என்றபோதிலும், சரீரத்தை ஒளித்துக்கொள்ளாமல், நமது ஆத்துமா பிதாவாகிய தேவனுக்குள் ஒளிந்திருக்கிறது என்ற தைரியத்தோடு தொடர்ந்து முன்னேறிச் செல்லுவோம். இப்பணியின்போது, சத்துருக்கள் சங்கரிக்கப்பட்டு, 'கர்த்தரே தெய்வம்' என்று எழும்பும் சத்தம், பரலோக பிதாவை எத்தனையாய் மகிழப்பண்ணும்!
யோவான்: அவ்வாறே, யோவான் ஸ்நானகனும், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; 'ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன்' என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக். 3:7,8)
என்றும் கூறினதையும் வேதத்தில் வாசிக்கின்றோமே. மாம்சத்தின்படி, 'ஆபிரகாமின் சந்ததி' என்று மாத்திரம் மார்தட்டிப் பேசிக்கொண்டிருக்காமல், ஆண்டவருக்கு முன் ஆபிரகாமைப் போன்ற வாழ்க்கை வாழ்ந்தால் மாத்திரமே, சத்தியத்தின்படி ஆபிரகாமின் சந்ததியார் நாம் என்று உரிமைபாராட்ட இயலும்; இந்த உரிமைக்கு நேராக ஜனங்களின் இருதயத்தைத் திருப்பும்படியாக அல்லவோ இருந்தது யோவானின் பிரசங்கம்.
'நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான். அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்' (லூக். 1:14,16) என்று யோவான் ஸ்நானகனை எலியாவுடன் தொடர்புபடுத்தி இயேசு கிறிஸ்துவும் கூறுகின்றாரே; ஏனெனில், யோவான் செய்த பணியும் இதுதானே. 'மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது' என்று பிரசங்கம் பண்ணினதோடு, கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்' (மத். 3:2,3) என்ற சத்தத்தை வனாந்தரத்தில் தொனிக்கப்பண்ணினவன் அல்லவா இந்த யோவான். அவனது வார்த்தைகளைக் கேட்டு, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய் (மத். 3:5), தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள் (மத். 3:6) என்று வாசிக்கின்றோமே.
இயேசு கிறிஸ்து: மேலும், யூதேயாவை விட்டு கலிலேயாவுக்கு இயேசு கிறிஸ்து தனது சீஷர்களோடு சென்றுகொண்டிருந்தபோது, சமாரியா நாட்டின் வழியாக அவர் பிரயாணப்பட்ட நேரத்தில், யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வர நேரிட்டது. அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது (யோவான் 4:5,6). அப்பொழுது, அங்கு தண்ணீர் மொள்ள வந்த சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீயைப் பார்த்து, 'தாகத்துக்குத் தா' என்று இயேசு கிறிஸ்து கேட்டபோது, சமாரிய ஸ்திரீ அவரை நோக்கி, 'நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம்?' (யோவான் 4:9) என்று கேள்வி எழுப்புகின்றாள். இயேசு கிறிஸ்து அவளுக்குப் பிரதியுத்தரமாக, 'நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார்' (யோவான் 4:10) என்று சொன்னபோதும், 'ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்?' (யோவான் 4:11) என்று மீண்டும் அவரிடத்தில் கேள்வி எழுப்புகின்றாள். அத்தோடு அவள் நிறுத்தவில்லை, முற்பிதாவாகிய யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின், கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம்போட்டதையும், யாக்கோபு தான் கூடாரம்போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய எமோரியரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்டதையும் நினைவில் கொண்டவளாகவும் (ஆதி. 33:18,19), இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி, 'உன் சகோதரருக்கு கொடுத்ததைப்பார்க்கிலும், நான் என் பட்டயத்தாலும், என் வில்லினாலும், எமோரியர் கையிலிருந்து சம்பாதித்த ஒரு நிலத்தை உனக்கு அதிகமான பங்காகக் கொடுத்தேன் என்றும் சொன்னதை (ஆதி. 48:22) நினைவில் கொண்டவளாகவும், 'இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ?' என்ற கேள்வியையும் கூடவே எழுப்பினதுடன், 'அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே' (யோவான் 4:12) என்றும் பெருமையாகப் பேசுகிறாள்.
பிதாக்களின் கிணற்றைக் குறித்து பெருமையாக அவள் பேசினபோதிலும், பிதாக்கள் நடந்த பிதாவின் பாதையில் அவள் நடக்கவில்லையே! முற்பிதாவாகிய யோசேப்பின் கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த அவளது வாழ்க்கை, முற்பிதாவாகிய யோசேப்பின் பரிசுத்தத்திற்கு எத்தனை தூரமாயிருந்தது! 'கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்' (யோவான் 4:25) என்ற அறிவு அவளுக்கு இருந்தபோதிலும், எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே (யோவான் 4:20) என்று பிதாக்கள் தொழுதுகொண்ட மலையினையே மீண்டும் மேன்மைப்படுத்தி அவள் இயேசு கிறிஸ்துவினிடம் பேசினபோதும், கிறிஸ்துவுக்குப் பிரியமான வாழ்க்கையினை அவள் வாழவில்லையே. தன்னைக் குறித்து ஊரே அறிந்துவைத்திருக்கும் வாழ்க்கையினை ஒருவர் சொன்னதற்கு, 'நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்' (யோவான் 4:19) என்கிறாள்.
இயேசு அவளை நோக்கி: 'நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா' (யோவான் 4:16) என்று சொன்ன மாத்திரத்தில், அவளுடைய மொத்த வாழ்க்கையும் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுவிட்டதே. 'ஜந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய்' (யோவான் 4:18) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் அவளுடைய வீழ்ச்சியடைந்த வாழ்க்கையை எத்தனையாய் எடுத்துரைக்கின்றது. இப்படிப்பட்ட வீழ்ந்துபோன, பிதாக்கள் வணங்கின பிதாவை விட்டு பின்வாங்கிச் சென்ற பின்சந்ததியாகிய அவளை, மீண்டும் பிதாவினண்டைக்குத் திருப்பினார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
தகப்பனாகிய தாவீதின் பாதையில் பின் சந்ததியாராகிய பிள்ளைகளைத் திருப்பவும், விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமின் பாதையில் பிள்ளைகளாகிய ஜனங்களை மீண்டும் திருப்பவும், எலியாவையும், யோவான் ஸ்நானகனையும் தேவன் உபயோகித்ததுபோல, இயேசு கிறிஸ்துவும் அப்பணியினையே செய்ய இந்த உலகத்தில் வந்ததுபோல, இதயங்களைத் திருப்பும் இறைப்பணியினைச் செய்ய, இன்றும் தேவன் நம்மை அழைக்கின்றார்; நம்முடைய இருதயம் மாத்திரம் காப்பாற்றப்பட்டுவிட்டால் போதும் என்று நினைக்காமல், இருளாய் இருக்கும் இருதயத்தைக் கொண்ட ஜனங்களைக் குறித்த பாரத்தையும் மனதில் கொண்டவர்களாக இன்றைய நாட்களில் நாம் செயல்படவேண்டியது எத்தனை அவசியம்? இதனை அகத்தில் உணர்ந்தவர்களும், அழைப்பினை அறிந்தவர்களுமாகிய நாம், ஆத்துமாக்களைத் தேடும் பணியில் அயராது ஈடுபட்டால் மாத்திரமே அறுவடை மிகுதியாகும்; சொந்த குமாரனையே அனுப்பி சம்பாதித்த ஆத்துமாக்களால் ஆண்டவரின் இராஜ்யம் நிறைவாகும்.
ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் இருதயத்தில் உண்டான இந்தச் சிந்தையையும் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும் (1 நாளா. 29:18) என்று தாவீதின் விண்ணப்பத்திலும், அந்த லேவியரின் பிறகாலே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்கு எருசலேமுக்கு வந்தார்கள் (2நாளா. 11:16) என்றும், ஆனாலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் தங்கள் இருதயத்தைத் தங்கள் பிதாக்களின் தேவனுக்கு இன்னும் நேராக்காதிருந்தார்கள் (2நாளா. 20:33) என்றும், எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்பண்ணி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேடும்படிக்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும், கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பாராக (2நாளா. 30:19) என்றும் வேதம் நம் முன் கொண்டுவரும் நிகழ்வுகள் அனைத்தும், பிதாக்களின் தேவனை நோக்கி பிள்ளைகளின் இருதயங்கள் திரும்புவதைத்தானே சுட்டிக்காட்டுகின்றன.
'பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்' என்ற இப்பணியினைச் செய்ய, ஒருவேளை, தேவனைப் பின்பற்றின பிதாக்களின் இருதயத்திற்கடுத்த காரியங்களை நாம் அடுத்த தலைமுறைக்கு, பிள்ளைகளுக்கு கொண்டுவந்து சேர்க்க நேரிடலாம்; அல்லது, பிதாக்களின் இருதயத்திற்கடுத்த காரியங்களுக்கு நேராக பிள்ளைகளை நாம் வழிநடத்த நேரிடலாம்; இவ்விரண்டில், பணி எதுவாயினும், மாற்றப்படவேண்டியது பிள்ளைகளின் இருதயமே. பிள்ளைகளாகிய இக்காலத் தலைமுறையினரை தேவனை உண்மையாய்ப் பின்பற்றின பிதாக்களின் பாதையில் இணைப்பதே பிரதானப் பணி என்பதை மனதில் கொண்டவர்களாக தொடர்ந்து செயல்படுவோம்.
'கர்த்தருடைய நாள்'
அதுமாத்திரமல்ல, பிதாக்களின் இருதயத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளின் இருதயத்தைப் பிதாக்களிடத்திலும் திருப்பும் பணியினை ஊழியர்களாகிய தேவ மனிதர்கள் செய்துகொண்டிருக்கும் இக்கடைசி நாட்களில், 'கர்த்தருடைய நாளைக்' குறித்த அறிவும் ஜனங்களின் மனதிலும், சிந்தையிலும் காணப்படவேண்டியது அவசியமே. தேவனின் அவசரத்தையும், தேவ மனிதர்களின் அவசரத்தையும் புரிந்துகொண்டவர்களாக ஜனங்கள் தங்கள் இருதயங்களை ஆண்டவருக்கு நேராகத் திருப்ப மறுத்தால், கோபத்தின் நாளில் கர்த்தருடைய முகத்திற்கு அவர்கள் மறைக்கப்படுவார்களே! இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள் (2கொரி. 6:2)
என்பதை மறந்து வாழும் மனிதர்கள் கர்த்தருடைய நாளில் நடக்கவிருப்பவைகளையும் அறியவேண்டுமே.
உலகம் கண்டிராத உபத்திரவம்
'எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்; அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்' என்று மல்கியா தீர்க்கதரிசியைக் கொண்டு தேவன் முன்னுரைப்பதற்கு முன், 'இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே' என்று அதனை எப்போது செய்யவிருக்கிறார்? என்றும், ஏன் செய்யவிருக்கிறார்? அத்துடன், கூடவே நாம் என்ன செய்யவேண்டும்? என்றும் கூறி அறிவிக்கத் தவறவில்லை.
கர்த்தருடைய நாளைக் குறித்து யோவேல் தீர்க்கதரிசிகளின் வாயிலாக தேவன் முன்னுரைத்தபோது, 'அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போலச் சர்வ வல்லவரிடத்திலிருந்து வருகிறது (யோவேல் 1:15); கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்' (யோவேல் 2:31); கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது. அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள் (யோவேல் 2:1,2), கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்? (யோவேல் 2:11); எனவே, 'பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக் குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்' (யோவே 1:14) என்று கூறுகின்றார்.
'நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்' (ஆதி 32:26) என்று ஆசீர்வாதத்திற்காக மாத்திரமே ஆண்டவரின் காலைப் பிடித்துக்கொண்டு உபவாசம் இருப்பதும், தாங்களும் அவ்விடம் விட்டு கடந்து செல்லாமல், ஆண்டவரையும் அவ்விடத்திலிருந்து நடந்துசெல்ல விடாமல், 'ஆசீர்வாதத்திலேயே ஆண்டவரை நிறுத்திக்கொள்ளத் துடிக்கும் மக்கள்' இன்றைய நாட்களில் அதிகமே. ஆசீர்வாதம் என்றும் படகில் ஆற்றில் நடுவே நின்றவாறு, விருப்பங்கள் என்றும் சுய அலைகளை தங்கள் மேல் வீசச் செய்துகொண்டு, தாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து தங்களை ஆசீர்வதித்தால் மாத்திரமே அக்கரைக்குச் செல்வோம் என்று அடம்பிடிக்கும் மக்களும் உண்டு; இவ்வாறு ஆசீர்வாதங்களைக் குவித்துக்கொள்வதிலேயே கவனமாயிருக்கும் மனிதர்கள் பலரின் வாழ்க்கை அதினுள்ளேயே புதைந்துபோய்விடுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இவ்வுலக வாழ்க்கையில் மாத்திரமே இன்பம் காண விரும்பும் மக்களின் கண்களுக்கு, பரம கானான் காணல்நீராக மாறிவிடக்கூடும். இடைவிடாமல் ஆசீர்வாதங்களுக்காக மாத்திரமே செய்யப்படும் விண்ணப்பங்கள், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் பயணத்தில் அக்கரை சேருவதற்குப் பாதகத்தை உண்டாக்கிவிடக்கூடாது என்பதிலும் நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டுமே!
'இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?' (மத். 19:27) என்ற பேதுருவின் கேள்விக்கு, 'என் நாமத்தினிமித்தம் வீ;டடையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்' (மத். 19:29) என்ற வார்த்தைகளைத்தானே உகந்த பதிலாக இயேசு உச்சரித்தார்.
பிரியமானவர்களே! ஆசீர்வாதத்திற்காக மாத்திரமே ஆண்டவரிடத்தில் போராடும் மக்களாக நாம் காணப்படாமல், அக்கிரமத்திலிருந்தும் விடுதலையாகப் போராடவேண்டியது அவசியமானதல்லவா! இதனைத்தானே எபிரெய ஆக்கியோன், 'பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே' (எபி. 12:4) என்று எழுதுகின்றார். 'நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது' (எபி. 9:22) என்ற வசனத்தின்படி, நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்பதற்காக இயேசு கிறிஸ்து மரித்தார் என்பதை உயர்த்திக் கூறும் நாம், 'இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் பலனை நம்முடைய வாழ்க்கையில் அடைய' 'இரத்தஞ்சித்தப்படத்தக்கதாக' எதிர்த்து நிற்கவேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாதே. இதனை நினைவில் கொள்ளாதோரின் ஆவிக்குரிய வாழ்க்கை நிதானமின்றி உறுதியாக நில்லாமல் தள்ளாடிக்கொண்டேயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 'இயேசு எனது பாவங்களை மன்னித்துவிட்டார்' 'இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி என்னை சுத்திகரித்துவிட்டது' 'இயேசுவினால் பாவத்திலிருந்து விடுதலையடைந்துவிட்டேன்' என்று துள்ளிக்குதிப்பதோடு நின்றுவிடாமல், 'நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி' (ஆதி. 39:9) என்று யோசேப்பைப் போல எதிர்த்து நிற்கும் சுபாவமும் நம்மில் வெளிப்படவேண்டுமே. 'இயேசு என்னை இரட்சித்தார்' என்ற ஒருபுறத்தை மாத்திரம் சொல்லிக்கொண்டு, 'தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்' (1கொரி. 10:12) என்ற மறுபுறத்தை மறந்ததினாலேயே அநேகருடைய மறுபிறப்பு கேள்விக்குரியாகிவிட்டது.
அகிலத்தை முடும் அந்தகாரம்
அதுமாத்திரமல்ல, கர்த்தருடைய நாளைக் குறித்து, 'கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்' (ஆமோஸ் 5:18) என்று ஆமோஸ் தீர்க்கதரிசியைக் கொண்டும் ஆண்டவர் எழுதிவைத்திருக்கின்றாரே.
மரணத்தின் நித்திரையிலிருந்து விழிக்கும்போது, நாம் நித்தியத்தின் வெளிச்சத்தில் பிரவேசித்துவிடுவோம்; ஆனால், அந்தகாரத்தில் வாழுவோரையும் நாம் ஆதாயப்படுத்தவேண்டுமே. எனவே, 'இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது' (ஏசா. 9:2) என்ற வசனத்தை நம்முடைய வாழ்க்கை பூர்த்தியாக்கட்டும்.
'பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது' (யோவான் 9:4) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள், கர்த்தருடைய நாளில் உண்டாகவிருக்கும் அந்தகாரத்திற்கு முன், நாம் அதிவேகமாய்ச் செயலாற்றவேண்டும் என்பதைத்தானே வெளிப்படுத்துகின்றது. இப்படியிருக்க, அந்தகாரம் வரும் என்று அறிந்த நாம், அயர்ந்து தூங்குவது நியாயமாகுமோ? அகிலத்தில் வாழும் மக்கள் அந்த அந்காரத்தில் அகப்பட்டுக்கொள்ளாதிருக்க அயராது செயல்படவேண்டாமோ?
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான் (வெளி. 3:8) என்ற நற்செய்தி உன்னதத்திலிருந்து ஒலித்துக்கொண்டிருக்க, நாம் ஒளிப்பிடத்திலிருக்கலாமோ? இருப்பிடத்தைப் பூட்டிக்கொள்ளலாமோ? ஆமோஸ் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நம்மை தட்டியெழுப்பட்டும், செயல்வீரர்களாக்கட்டும்.
அளந்தபடியே உனக்கு அளக்கப்படும்
மேலும், எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; 'நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்'; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல்திரும்பும் (ஒபதியா 1:15) என்று ஓபதியா தீர்க்கதரிசியைக் கொண்டு கர்த்தர் எழுதித்தந்திருக்கும் எச்சரிப்பின் வார்த்தைகளும் நமக்கு எதிராக நின்றுவிடக்கூடாது அல்லவா!
'நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்' (லூக். 6:38) என்ற வசனத்தை, காணிக்கையுடன் மாத்திரமே ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கம் பெருவிட்டதினால், நம்முடைய வாழ்க்கையின் செயல்களுக்கடுத்தவைகளுடன் அதனைச் சம்மந்தப்படுத்திப் பார்க்க பல வேளைகளில் நாம் தவறிவிடுகின்றோம். 'உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான்' (மத். 10:40,42) என்று தனது சீஷர்களிடத்தில் சொன்னதோடு, 'பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள்' (மத். 25:42,43,45) என்றும் சொல்லும் காரியங்கள், நம்முடைய காணிக்கையின் அளவை அல்ல, 'செயல்களின் அளவை' அல்லவோ எடுத்துக்காட்டுகின்றது.
'நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா' (மத். 19:21) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு இணங்காத வாலிபன், நித்தியத்தையே இழந்து நின்றானே. இத்தகையோரின் வரிசையில், வாரிசாகவும், வரிசையாகவும் நாம் வந்துவிடக்கூடாதே. அள்ளிப்போட்டும் அடையாளம் காட்டப்படாத ஐசுவரியவான்களைப் போல அல்ல, தனது வாழ்க்கையையே விதைத்த விதவையின் செயல்தானே உன்னதரின் பார்வையில் உயர்ந்ததாயிருந்தது. கர்த்தருடைய நாளின்போது, இத்தகைய நியாயத்தீர்ப்பு நமக்கு எதிராக வந்துவிடக்கூடாதே!
'வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது' (லூக். 11:39) என்று சொன்னதைத் தொடர்ந்து, மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ? உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், 'அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்' (லூக். 11:40,41) என்று சொல்லும் வார்த்தைகள், கொடுப்பதற்கும், உள்ளத்தின் சுத்தத்திற்கும் இடையிலான உறவினை எத்தனை அழகாய், தெளிவாய், வெளிப்படையாய் விளக்கிக்கூறுகின்றன. பிரியமானவர்களே! கொடுப்பது என்பது, சுத்தத்திற்கு அடுத்த சத்தியம் என்பதை நாம் உணர்ந்துகொள்வது அவசியமல்லவா!
மறுக்கப்படும் மறுதேசத்து வஸ்திரம்
கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன். வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன் (செப் 1:7-9). விரும்பப்படாத ஜாதியே, கட்டளை பிறக்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோகுமுன்னும் கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்கு முன்னும், கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும், நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள். தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள் (செப் 2:1-3) என்று தீர்க்கதரிசியாவாகிய செப்பனியாவைக் கொண்டும் தேவன் எழுதிவைத்திருக்கின்றாரே.
செப்பனியா தீர்க்கதரிசியின் இந்த வார்த்தைகள், 'தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது' (மத். 22:2) என்று இயேசு கிறிஸ்து கூறிய உவமையுடன் எத்தனையாய் ஒத்துப்போகின்றது. 'விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள்' (மத். 22:11-13) என்றாரே.
இளைய குமாரன் தன் தகப்பனிடத்தில் வந்தபோது, அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்ததோடு, தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள் (லூக். 15:22) என்று சொன்னாரே. தகப்பனை விட்டுத் தூரம் போனதினால், அழுக்காய்ப் போன வஸ்திரம், தகப்பனோடு பந்தியில் அமரும்போது மாற்றப்படவேண்டுமல்லவா! இன்று வஸ்திரத்தை மாற்றும்படியாக தகப்பனது வீட்டை நோக்கி நாம் வருவோமென்றால், கர்த்தருடைய நாளாகிய அன்று இரட்சிப்பின் வஸ்திரத்தோடு, பிதாவின் வீட்டில் வரவேற்கப்படுவோம்.
'இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும்' என்பதுதானே சேனைகளின் கர்த்தர் அந்த நாளைக் குறித்து நமக்குக் கூறும் செய்தி (மல். 4:1). இதனை உணர்ந்தவர்களாக, நினிவே பட்டணத்தின் ஜனங்களைப் போல நம்மை தாழ்த்தி மனந்திரும்புவோமென்றால், இத்தகைய கோபத்திலிருந்து நாம் தப்பித்துக்கொள்வதோடு, நித்தியத்திற்குள்ளும் நாம் ஆனந்தமாக உட்பிரவேசித்து, அவரோடு பந்தியிலும் அமரமுடியுமே. இத்தகைய வாழ்க்கையையே எதிர்நோக்குவோம்; கர்த்தர் நம்மை வழிநடத்துவாராக! ஆமென்.
Comments
Post a Comment