களைகள்
ஆராதிக்கப்படும் இடத்திற்கு எப்படியாகிலும் தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும் என்பதே சாத்தானுடைய ஆசை. ஆண்டவருடைய சமுகத்தில் இதனை சாத்தியப்படுத்த விரும்பி விழுந்துபோன அவன், ஆண்டவரை ஆராதிக்கும்படியாகவே உலகத்தில் உருவாக்கப்பட்ட மனிதனோடு கைகோர்த்துக்கொண்டு அதனை அரங்கேற்றிவிட அனுதினமும் துடித்துக்கொண்டிருக்கிறான். அவனது ஆளுகைக்குள்ளும், வலைக்குள்ளும் விழுந்துவிட்ட மனிதர்களால் இப்பூமியிலாவது அதனைச் சாத்தியப்படுத்தி, அதிலே சந்தோஷங்காண விரும்புகின்றான். இதனை நன்கு அறிந்திருந்த பவுல், 'அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே' (2 கொரி 11:14) என்றும், 'ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும் (2கொரி 11:15) என்றும், அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்' (2கொரி 11:13) என்றும் எழுதி உணர்த்துகின்றாரே; எத்தனை அதிர்ச்சியான செய்தி இது.
உள்ளே சாத்தான் வெளியிலோ ஒளியின் தூதனுடைய வேஷம், உள்ளே சாத்தான் வெளியிலோ நீதியின் ஊழியக்காரருடைய வேஷம், உள்ளே சாத்தான் வெளியிலோ அப்போஸ்தலரின் வேஷம். ஒளியின் தூதனுடைய வேஷத்தை தான் தரித்துக்கொண்டிருப்பதுடன், அப்படிப்பட்ட வேஷந்தரித்த ஊழியக்காரர்களையும், அப்போஸ்தலர்களையும் ஜனங்களை வீழ்த்துவதற்காக சாத்தான் தன் வசத்தில் வைத்திருக்கின்றானே; அப்படியென்றால், நாம் எத்தனை எச்சரிக்கையோடிருக்கவேண்டும். இத்தகைய வேஷமுடைய மக்களின் வாழ்க்கை, 'நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்' (சங் 73:20) என்ற நிலைக்கே தள்ளப்பட்டுப்போம் என்பதே வேதம் தரும் தீர்ப்பு.
மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்க ளாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்க ளாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு (2தீமோ 3:1-5) என்றும் வேஷமாக வாழும் மனிதர்களைக் குறித்து, தீமோத்தேயுவுக்கும் பவுல் ஆலோசனையாகவும், கட்டளையாகவும் எழுதுகின்றாரே.
இயேசு கிறிஸ்துவும், வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள் (மத் 23:2-7) என்று வேஷமாகவே வாழும் வேதபாரகரையும், பரிசேயரையும் விமர்சிக்கிறாரே. மேலும், கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத் 7:15) என்று காட்டிக்கொடுக்கின்றாரே. உடலை அலங்கரித்துக்கொண்டு, உள்ளத்திலோ ஓநாய்களாகவே வாழ்ந்தார்கள் அவர்கள். நாம் போதிக்கும் வார்த்தைக்கும், வாழும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் காணப்படுமாயின், பரலோகம் நம்மைப் புறம்பாகத் தள்ளிவிடும்.
இன்றைய நாட்களிலும் இப்படிப்பட்ட மனிதர்கள் காணப்படவில்லையோ? விலையுயர்ந்த மற்றும் ஆடம்பர அங்கிகளை அணிந்தால் மாத்திரமே போதகர்களாக தங்களை ஜனங்கள் அங்கிகரிப்பார்கள் என்ற எண்ணத்திற்குள்ளும், உயர்ந்த ஆசனங்களிலும், உயர்தர வாகனங்களிலும் வலம்வந்தால் மாத்திரமே மக்களால் மனதளவில் மதிக்கப்படுவோம் என்ற மனநிலைக்குள்ளும் தங்களைத் தள்ளிக்கொண்ட தலைவர்கள் உண்டே. மக்களின் வரிப்பணத்தை அரசியல்வாதிகள் தங்கள் சொந்த உபயோகத்திற்காகவும், லாபத்திற்காகவும் வாரி இறைப்பதைப் போல, விலையுயர்ந்த கார்களை வாங்கவும், வீடுகளைக் கட்டவும் சபைமக்களின் காணிக்கைகளை வாரி இறைக்கும் கிறிஸ்தவத் தலைவர்கள் உண்டே. ஆத்துமாக்களைச் சந்திப்பதற்காக ஜனங்களது கரத்திலிருந்து வரப்பெறும் பணம், வேஷத்திலேயே வீணாகச் செலவுசெய்யப்படுவது, வேதனைக்குரியதே.
மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது (1பேது 3:3,4) என்று பேதுரு தனது நிருபத்தில் எழுதுகின்றாரே. முக்கியத்துவம் தரப்படவேண்டிய குணங்களை முடக்கிவிட்டு, புறம்பான அலங்கரிப்பினால் மாத்திரம் உடலை மூடிக்கொண்டு வாழ்ந்தால், கர்த்தருக்கு முன் நாம் அலங்கோலமாகவே காட்சியளிப்போம்; ஏனெனில், 'மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறாரே' (1சாமு 16:7). நாமும் பார்வையடைய வேண்டுமானால் கண்களுக்குக் கலிக்கம்போட வேண்டும். (வெளி 3:18)
நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன் (மத் 7:18-23) என்று வேஷமிட்ட மனிதர்கள் பரலோத்திற்குள் பிரவேசிக்காமல் வெளியேற்றப்பட்டனரே. நம்முடைய கனிகளே நம்மை யாரென்பதையும், நமது வேஷமான வாழ்க்கையையும் காட்டிக்கொடுத்துவிடப் போதுமானது. மனிதர்களது பார்வைக்கு நல்ல மரம்போல காட்சியளித்தாலும், அவர்களிடத்தில் காணப்படும் 'கசப்பான கனிகள்;' (ஏசா. 5:2,4) இயேசு கிறிஸ்து புசிப்பதற்கு உதவாதே. கனியில்லாத மரம் பட்டுப்போனதைப் போல, கசப்பான மரம் வருகையில் விடப்பட்டுப்போம்.
இன்று சில கிறிஸ்தவர்களுடைய நிலை இதுவே; 'கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் வேஷமாகவே தங்கள் வாழ்க்கையில் வைத்திருக்கிறார்கள்.' ஆடைகளிலும், அணியும் ஆபரணங்களிலும், வீடுகளிலும், வாகனங்களிலும் மற்றும் அலுவலகங்களிலும் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதை பிறருக்குப் பறைசாற்றும் வண்ணமாக வேதத்தையும், வசன அட்டைகளையும், வசனத்தோடு கூடிய நாட்காட்டிகளையும் தொங்கவிட்டுக்கொண்டு, தங்களுக்கும் அதற்கும் சம்மந்தமில்லாத வாழ்க்கை வாழும் மனிதர்கள் எத்தனை! எத்தனை!! வேதத்தை கைகளில் எந்திக்;கொண்டு ஆலயத்திற்குச் செல்வதினால், கிறிஸ்தவர்கள் என்ற வேஷத்திற்குள் தங்களது வாழ்க்கையை வைத்துக்கொண்டு, சினிமாவுக்கும், சிகரெட்டுக்கும், போதை வஸ்துக்களுக்கும் தங்களை விற்றுப்போட்டவர்களாக வாழும் சாத்தானுடைய சந்ததிகள் எத்தனை! எத்தனை!! இப்படிப்பட்டவர்களைப் பார்த்துதானே, மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும் (மத் 23:27) என்று இயேசு கிறிஸ்து சொன்னார்.
வேஷமான வாழ்க்கையிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளுவோம். நித்தியத்திற்கு வழிகாட்டும் சத்தியத்தையே சார்ந்துகொள்ளுவோம். உலகத்தைக் களைந்து, உன்னதம் விரும்புபவைகளை உடுத்திக்கொள்ளுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக