அப்படியல்ல ஆண்டவரே!
நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும், நாளிகையையும் அறிந்தவர் இயேசு. நாம் எப்படி இருக்கிறோம் என்று நமக்கே தெரியாத நேரத்திலும், இப்படித்தான் நாம் இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறவர் நம் தேவன். ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்முடைய நிலை என்ன? என்பது நமக்கே தெரியாத நேரத்தில், நாம் நின்றுகொண்டிருக்கும் நிலையை நமக்குக் காட்டிக்கொடுப்பவர். நீங்கள் கோபமுள்ளவர்கள் என்று உங்களுக்கே தெரிந்திராத நேரத்தில், யாரையாவது அனுப்பி உங்களது கோபத்தைத் தூண்டி உங்கள் கோபத்தைக் காட்டிக்கொடுப்பவர்; அப்படியே, பொறாமை, எரிச்சல், புறங்கூறுதல், அபத்தமானவைகளைப் பேசுதல், வீணாதை நாடுதல் என பட்டியலை நாம் நீட்டிக்கொண்டேபோகமுடியும். உங்களிடத்தில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசுவுக்குள் மன்னிக்கும் தன்மை இருந்தது; அதையே, சீஷர்களுக்கும் அவர் கற்றுக்கொடுத்தார், அவரும் தன்னிடத்தில் வந்தோரின் பாவங்களை மன்னித்தார்; அத்தோடு மாத்திரமல்லாமல், ஜனங்கள் தன்னை சிலுவையில் அறைந்தபோதிலும், பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே! என்று பரிதபித்தார். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி; ஆனால், முகத்தில் மாத்திரமல்ல, வெளிப்படும் வார்த்தையிலும், நடக்கையிலும் கூட தெரிவது அகத்தின் அழகே. அகம் அழுக்காக இருந்தால், முகம் மாத்திரமல்ல, வாழ்க்கையின் மொத்தமுமே அழுக்காகவே இருக்கும்.
'வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்' (மத். 15:11) என்றும், அப்படியே, வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்' (மத். 15:18) என்றும், புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும் (மாற். 7:15) என்றும் போதித்தார். மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார் (மாற் 7:21-23). இயேசுவுக்கு சீஷனாக இருந்தபோது, இவ்விதமான போதகங்களையெல்லாம் இயேசு உபதேசிக்க, காதுகளால் அவரருகே அமர்ந்திருந்து கேட்டவன் பேதுரு. இதையே பவுலும், ரோமருக்கு எழுதும்போது, 'ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும் (ரோமர் 14:14) என்று எழுதுகின்றார். இந்தச் சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டே நியாயத்தீர்ப்பும் நிறைவேற்றப்படுகின்றது. 'தீட்டுள்ளதும், அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்' (வெளி. 21:27) என்பதையே நியாயத்தீர்ப்பின் சட்டமாக நாம் வாசிக்கிறோம்.
இயேசுவோடு உடனிருந்து, இயேசுவின் போதனைகளைக் கேட்டு, இயேசுவோடே வாழ்ந்திருந்தபோதிலும், பேதுரு இந்த போதகத்தை மறந்திருந்தான். அவனது உணவுப் பழக்கவழக்கங்களில், 'தீட்டு, தீட்டு' என்ற பதத்தை திரும்பத் திரும்ப உபயோகிக்கிறான். பாடம் ஒன்றைக் கற்றுக்கொடுக்க, கர்த்தர் முயன்றபோது, அவனுக்குள் இருந்த இந்த மாம்சம் வெளிப்பட்டது. 'நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப் போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும், அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் ஆண்டவர் காண்பித்து, பேதுருவே, எழுந்திரு அடித்துப் புசி' என்று சொன்னதாக அவன் ஞானதிருஷ்டியடைந்து கண்டபோது, 'அப்படியல்ல ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை' (அப். 10:14) என்றான். அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்றார். ஒருமுறை மாத்திரமல்ல, மூன்று முறை ஆண்டவர் அப்படியே காட்டியபோதிலும், அதே பதிலையே பேதுருவும் அதே பதிலைத்தான் ஆண்டவருக்குச் சொல்லிக்கொண்டிருந்தான்; அவனுடைய வார்த்தையிலும், வாழ்க்கையிலும் மாற்றத்தைக் காண இயலாத தேவன், 'அந்தக் கூட்டை திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொண்டார்' (அப். 10:16).
அந்தக் கூட்டில் பூமியிலுள்ள நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருந்தாலும், அந்தக் கூடு வானத்திலிருந்தல்லவா வெளிப்பட்டது. பூமியிலுள்ள தீட்டான அவைகள் வானத்துக்கு எப்படி போனது? தீட்டான அவைகளை தேவன் எப்படி எடுத்துக்கொண்டார்? இதுபோன்ற பல்வேறு கேள்விகளையெல்லாம் கேட்டு, தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைத் திருத்திக்கொள்ளும் நிலையில் இல்லை பேதுரு. சத்தியத்தை அறிந்துகொள்ள முற்படாமல், சந்தேகத்திற்குள்ளேயே தன்னைத் தள்ளிக்கொண்டான் அவன் (அப். 10:17). ஓ! அது தேவனால் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டவைகள்; ஏற்றுக்கொள்ளப்பட்டவைகளே மீண்டும் என்னிடத்திற்கு இறக்கப்படுகின்றன என்ற பாடத்தை அவன் புரிந்துகொள்ளவில்லை. பேதுரு தீட்டாக எண்ணியவைகளை அவனது வீட்டிற்குள்ளேயிருந்தே தேவன் கொண்டுவந்தார். தீட்டானவைகள் உள்ளே வந்துவிடக்கூடாது என்று வீட்டை அடைத்துவைத்திருந்தாலும், திமிர்வாதக்காரனை வீட்டுக்குள் இறக்கியதுபோல இறக்கினார். திமிர்வாதம் வீட்டிற்குள் இறங்கியதற்கு அல்ல, வீட்டுக்குள் இருக்கும் பேதுருவுக்கு என்பதை அறிவுறுத்தினார். மனந்திரும்புதலைப் போதிக்க வேண்டிய பேதுருவே நீ மனந்திரும்பு என்று அறைகூவல் விடுத்தார்.
பிரியமானவர்களே, தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எத்தனையோ காரியங்கள் இன்று ஆவிக்குரியவர்கள் என்று தங்களை அடையாளமிட்டுக்கொள்ளும் மனிதர்களால் கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இரத்தத்தினால் கழுவப்பட்ட நாம் ஒன்றே என்று ஆலயத்தில் நின்று ஆராதித்தாலும், வீட்டுக்கு வந்ததுமே, 'அவர் அந்த ஜாதி' 'அது வேற ஜாதி' என்ற வார்த்தைகள்தான் ஆவிக்குரியோர் பலரது வாயிலிருந்து வெளிவருகின்றன; இது அவலமான நிலையல்லவா! தேவன் சுத்தமாக்கினவர்களை 'தீண்டத்தகாதவர்களைப்போலவே' பார்த்துக்கொண்டிருக்கும் கூட்டமும் உண்டு. தேவன் சுத்தப்படுத்தித் தரும் காரியங்களைத் தீட்டு, தீட்டு என்று சொல்லி ஒதுங்கும் மனிதர்களே ஆன்ம குஷ்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். வாழ்க்கையின் பல்வேறு காரியங்களில், வேலையில், திருமணத்தில் தேவன் தரும் சுத்தமான காரியத்தைப் புரிந்துகொள்ள மனமின்றி 'அப்படியல்ல, ஆண்டவரே' நான் நினைப்பது வேறு என்று வேறு பாதையில் சென்றுகொண்டிருக்கிறவர்கள் பலர். என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்லளூ உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறாரே (ஏசா. 55:8). தேவன் தருவதைப் புரிந்துகொள்ளாமலும், வாங்க மனமற்றும் இருந்ததினால், பலருக்குக் கொடுக்கப்பட்ட கூடு மீண்டும் வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வேலையையோ, திருமணத்தையோ, படிப்பையோ, பின்னும் பிற காரியங்களையோ இதனால் இவர்கள் இழந்திருக்கலாம்.
மற்றொரு காரியத்தையும் பேதுருவின் வாழ்க்கையில் நாம் காணமுடியும்: ஆறாம்மணி நேரத்திலே, மேல் வீட்டில் ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினபோது (அப். 10:9) அவனுடைய ஆவி தேவனோடு பேச ஆயத்தமாயிருந்தது, ஆவி ஜெபத்தை நாடியது, ஜெபத்தின் மூலமாக தேவனோடு இணைந்திருக்கவும், அவரது வார்த்தைகளைக் கேட்கவும் பேதுருவின் ஆவி ஆயத்தமாயிருந்தது. ஆனால், அவனுடைய சரீரத்திலோ மற்றுமோர் போராட்டம் நடந்துகொண்டிருந்தது அது 'பசி'யே. பசி என்கிற உணர்வின் மத்தியில், பரலோகத்தின் தேவனை நோக்கி அவன் ஜெபித்துக்கொண்டிருந்தான் பேதுரு. அவன் மிகுந்த பசியடைந்து, சாப்பிட மனதாயிருந்தான். அவனுடைய ஜெப நேரத்தில மாம்சம் ஆவியோடு போராடத் தொடங்கியது. ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது (மத். 26:41) என்று இயேசு போதித்ததெல்லாம் அவனது நினைவில் இருந்திருக்கும். பசி வந்தால் பத்தும் பறந்துபோம் என்பார்கள், ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையில் பசி வந்தால் பக்தி பறந்துபோய்விடக்கூடாது. மனைவி மாத்திரம் பெலவீன பாண்டமல்ல (1பேதுரு 3:7) நமது மாம்சமும் பெலவீனப் பாண்டமே. எனவே தாவீது ஜெபிக்கும்போது, தனது உடைந்துபோன மாம்சத்தின் பாண்டத்தை சரிசெய்யும்போது, 'உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படிச் செய்யும்' (சங். 51:12) என்று வேண்டுகின்றான். உற்சாகமான ஆவிதான் பெலவீனமான பாண்டத்தை உடைந்துவிடாமல் தாங்கவும், காக்கவும் வலிமை பெற்றது. அந்த ஆவிக்கே எப்பொழுதும் வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தால், ஆவிக்குரிய வாழ்க்கை உடைந்துவிடாதபடிக்கு காத்துக்கொள்வது எளிது. எனவே பவுல், 'ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்' (ரோமர் 8:13) என்று எழுதுகின்றார்.
ஆனால், பெலவீனமுள்ள மாம்சம் அநேகருடைய வாழ்க்கையில் பெலமுள்ளதாக மாறிவிடுகின்றது. ஆவியினாலே அவைகளை ஜெயிக்காமல், பெலவீனைத்தையே நினைத்து நினைத்து, அதையே பேசிப் பேசி, அதனாலே அங்கலாய்த்து படுத்துக்கொள்கின்றனர். மாம்சத்தின் பெலவீனம் என்பது ஆவியை வீழ்த்தும் பெலனாகிவிடும். மாம்சம் தன்னுடைய பெலத்தினாலே, ஆவியின் பெலத்தை வீழ்த்துவதில்லை, மாறாக, தனது பெலவீனத்தை பெலனாக்கிக்கொண்டு ஆவியை வீழ்த்திவிடத் துடிக்கிறது. இதனை அறியாமல், தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை மாம்சத்துக்குப் பலியாக்கிவிட்டவர்கள் அநேகர். நீங்கள் கர்த்தருக்காக எத்தனையாய் ஊழியம் செய்துகொண்டிருந்தாலும், எத்தனை வல்லமையான காரியங்களை கர்த்தர் உங்கள் மூலமாக உலகில் நடப்பித்துக்கொண்டிருந்தாலும், எத்தனை சிறப்பானதாக உங்கள் ஊழியம் சென்றுகொண்டிருந்தாலும், ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்கள் மாம்சத்துடன்தான் உறங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்; எப்பொழுது வேண்டுமென்றாலும், அது உங்களை மேற்கொள்ளலாம் என்பதை நினைத்து எச்சரிக்கையாயிருங்கள். ஊழியத்தின் பாதி வழியில் மாம்சத்தின் வழிக்குள் பிரவேசித்துவிட்ட ஊழியர்கள் பலர் உண்டு. பண விஷயத்தில் தங்கள் ஆவியைப் பறிகொடுத்துவிட்டவர்கள் பலர் உண்டு. அப்படியே, குடும்ப வாழ்க்கையிலும், பாலுறவுக்கடுத்த காரியத்திலும், பெருமை போன்ற குணங்களுக்கடுத்த காரியங்களிலும் எப்போதும் மாம்சம் நமக்குக் கண்ணியே என்பதை மறந்துவிடவேண்டாம்.
ஜெபித்துக்கொண்டிருந்த நேரத்தில் சாப்பாட்டை நினைத்துக்கொண்டே இருந்ததினால், சாப்பாட்டைக் கொண்டே தேவன் அவனுக்கு பாடம் கற்றுக்கொடுத்தார். அவன் சாப்பிட முடியாத நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும் ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிற சாப்பாட்டுக் கூட்டை அவனுக்கு முன் வைத்தார். ஜெபிக்கும்படி மேல்வீட்டிற்கு ஏறியபோதிலும், சாப்பாட்டையே நினைத்துக்கொண்டிருக்கிற பேதுருவே, பசியையே நினைத்துக்கொண்டிருக்கின்ற பேதுருவே, 'எழுந்திரு, அடித்துப் புசி' என்று சொன்னார்.
சாப்பிட மனதாயிருக்கும்போது, நான் சாப்பிடத்தக்கவைகள் தரப்படவில்லையே, மாறாக, சாப்பிடக்கூடாதவைகளும், நான் சாப்பிடத் தகுதியில்லாதவைகளும், அருவருப்பானவைகளும் எனக்கு முன்னே காட்டப்படுகின்றதே ஏன்? என்று பேதுரு சந்தேகித்துக்கொண்டிருந்தான். மூன்று முறை அப்படியே காட்டப்பட்டு, பின்பு அந்தக் கூடு வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது (வச. 16). தீட்டு என்று நினைத்த அந்தக் கூட்டை பேதுரு தொடவே இல்லை; அப்படியே ஆண்டவரிடமே விட்டுவிட்டான். ஜெப வேளையில் தேவையற்ற காரியத்தை நாம் செய்வோமென்றால், நமக்குத் தேவையற்றவைகளைக் கொண்டே தேவனது தேவையை நிறைவேற்றும் பாடத்தை நமக்கு தேவன் நடத்துவார்.
பசியாயிருக்கும் நேரத்தில், விரும்பியது வராமல், விரும்பாதவைகள் வந்துகொண்டிருக்கின்றனவா? எதற்காக ஜெபித்தோமோ, அதற்கான பதில் கிடைக்காமல், நமக்குத் தேவையற்றவைகள் நமது கண்களுக்கு முன்பாக தென்படுகின்றனவா? அது மாத்திரமல்ல, அது நமக்குத் தேவையில்லை என்று நாம் விட்டுவிடுவதினால் திரும்ப வானத்துக்கும் எடுத்துக்கொள்ளப்படுகின்றனவா? அவைகள் நாம் சாப்பிடுவதற்கு அல்ல, நமக்குப் பாடம் கற்பிப்பதற்கே. இயேசு இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்த பின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று (மத். 4:2); ஆனால், அவர் சாப்பிட மனதாயில்லை, சாப்பாட்டையே நினைத்துக்கொண்டிருக்கவிலi;ல. ஆனால், பிசாசு வந்து அவருக்கு சாப்பாட்டை நினைப்பூட்டுகின்றான். இதே பேதுருவுக்குத்தான், கெத்சமனேயில் இயேசு விழிந்திருந்து ஜெபிக்கச் சொன்னபோது, ஜெப நேரத்தில் தூக்கமும் வந்தது. பேதுருவை மாம்சம் மாறி மாறித் தாக்கியது. மாத்திரமல்ல, கெச்சமனேயி; பிரதான ஆசாரியனின் வேலைக்காரனை காதற வெட்டும்படி துடித்ததும் மாம்சமே, மறுதலித்ததும் மாம்சமே.
எனக்குப் பிரியமானவர்களே, தேவனைத் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில் நம்முடைய சிந்தை எதன்மேல் பதிந்திருக்கிறது. ஆவியோடும், உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளுவோம்; அவரது போதனைகளை மறந்துவிடாதிருப்போம், மாம்சம் வாட்டினாலும், ஆவியை விட்டுவிடாதீர்கள். மாம்சம் வேதனைக்குள் கிடந்தாலும், ஆவி தேவனோடேயே இருக்கட்டும்; ஏனோக்கைப் போல தேவனோடேயே சஞ்சரியுங்கள் அதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டவர்கள். ஆண்டவருக்கே ஆலோசனை சொல்லும் மாம்சத்தின் சட்டத்திற்குள் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக