திங்கள், 18 அக்டோபர், 2021

ஏன் உலர்ந்தது என் எலும்புகள்?

 

ஏன் உலர்ந்தது என் எலும்புகள்?

 

மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.(நீதி 17:22) 
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவிமுறிந்துபோம்.(நீதி 15:13)
சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து.(நீதி 15:15)
மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்தஆவி யாரால் தாங்கக்கூடும்?(நீதி 18:14)

மனமகிழ்ச்சியைத் தேடி மனிதன் எங்கெங்கோ ஓடுகின்றான். உல்லாசமாயிருக்க நாடுகின்றான், உற்சாக பானங்களைத் தேடுகின்றான், சின்றின்பங்களில் களித்திருக்க நேரத்தைச் செலவிடுகின்றான். என்றாலும், மனமகிழ்ச்சி குன்றுவதன் பிரதான காரணத்தைக் காண இயலாதிருக்கின்றான். ஞானியான சாலமோன் சொல்லும் இவ்வார்த்தைகளுக்கு ஆவியானவரால் வேதத்தில் இடங்கொடுக்கப்பட்டிருக்கின்றது. சாலமோனின் ஞானம் அவனுடையதல்லவே; அது தேவன் தந்ததல்லவா. உனக்கு என்ன வேண்டும் என்று சாலமோனிடத்தில் தேவன் கேட்டபோது, 'ஞானம் வேண்டும்' என்று கேட்டு தேவ ஞானத்தைப் பெற்றுக்கொண்டவன் சாலமோன். எனவே, அவனது வார்த்தைகளில் தேவஞானம் வெளிப்படுகின்றது. அந்த தேவ ஞானமே இன்று வேத வசனங்களாக நமது கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

எலும்புகள் உலர்ந்துபோவதற்குக் காரணம் முறிந்துபோன ஆவி; ஆவி முறிந்துபோவதற்குக் காரணம் மனதில் உள்ள துக்கம். மனிதனின் மனமகிழ்ச்சிக்கு முக்கிய காரணம் ஆவியே. நம்முடைய ஆவி முறிந்து கிடக்குமென்றால், வாழ்க்கையை சந்தோஷப்படுத்த எதனாலும் கூடாது. மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும் (நீதி 20:27). பரிசுத்த ஆவியைக் குறித்து நாம் அறிந்துகொள்ளும் முன்னர், பிறப்பிலே தாயின் வயிற்றிலே நம்முடைய நாசியில் ஊதப்பட்டு நமக்கு உயிர் கொடுக்கும் தேவனுடைய ஜீவ சுவாசத்தைக் குறித்து அறிந்துகொள்வது அவசியம். உலகத்தில் இருக்கின்ற அனைத்து மானிடர்களின் ஆவியும், நன்மை தீமையை அவர்களுக்கு அடையாளம் காட்டிக்கொடுக்கக்கூடியது; அது கர்த்தர் எல்லா மனிதருக்கும் கொடுத்த தீபம். இந்த தீபம் நமக்குள் மெய் தேவனின் குணத்தைக் கொண்டுவரும் வலிமையயுடையது. இந்த தீபத்தின் செயல்பாட்டையே மனசாட்சி என்று அழைக்கின்றோம். மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும் விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ் சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது (2கொரி 1:12) என்று பவுல் எழுதுகின்றாரே.

தேவன் நமக்குத் தந்த ஆவியை தேவனை விட்டுப் பிரித்துவிடும் போது, நமது ஆவி முறிந்துவிடுகின்றது. பாவங்கள், அக்கிரமங்கள், அநியாயங்கள், தீமைகள், விபச்சாரங்கள், வேசித்தனங்கள், களவுகள், போதைகள், சிற்றின்பங்கள் இன்னும் எத்தனையோ பாவங்கள் நமது ஆவியை தேவனை விட்டு முறித்துவிடுகின்றன. இதனால் நம்முடைய எலும்புகள் உலரும் நிலை உண்டாகின்றது. பாவம் பெலன் கொள்ளும்போது பரிசுத்தம் போராடுகின்றது, பாவம் வேர்விடும்போது பரிசுத்தம் ஓடிவிடுகின்றது. பாவங்களே வேராகிப்போன ஒரு மனிதனின் வாழ்க்கையில், பரிசுத்தத்தின் கனி பறிப்பது என்பது முடியுமோ? மரம் கெட்டதென்றால் அதின் கனியும் கெட்டதென்று சொல்லப்படும் (மத் 12:33).

என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்து போயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று (சங் 31:10) என்றும், நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று (சங் 32:3) என்றும் தாவீது தன் நிலைதனை எடுத்துரைக்கின்றார். உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.(ஏசா 59:2) இப்படிப்பட்ட தேவனுடனான முறிந்துபோன ஓர் வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, மனமகிழ்ச்சியை எதிர்பார்ப்பீர்களென்றால் அது எட்டாக் கனியே.

பாவம் என அறிந்தும் வாழ்க்கையை அதில் தொடர்ந்து வாழ்க்கைதனை நகர்த்தும்போது நமது வாழ்க்கையில் மனமகிழ்சி இல்லாமற்போய்விடுகின்றது. தேவனுக்கு விரோதமானவைகளைச் செய்ய நம்மை விற்றுப்போட்டு, ஆவியை அவருடுன் தொடர்பின்றி முறித்துவிடுவதினால், தேவகோபத்திற்கும் ஆளாகிவிடுகின்றோம். உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை (சங் 38:3) என்றும், நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும் (சங் 51:8) என்றும், என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது (சங் 6:2) என்றும் வேண்டுகின்ற தாவீது நமக்கு ஓர் உதாரணம்.

சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும் (சங் 109:18). சாபம் நமது மனகிழ்ச்சியைக் கெடுக்கும். நமது வாழ்க்கையில் நாம் செய்த காரியங்களினிமித்தம் சாபம் நம்மைத் தொடரும் என்பதை நாம் மறந்துவிடவேண்டாம். தேவ கோபத்தின் வெளிப்பாNடு சாபம். இந்த சாபம் நீங்கவேண்டுமென்றால், தேவ கோபம் நீங்கவேண்டும், தேவ கோபம் நீங்கவேண்டுமென்றால், பாவம் நீங்கவேண்டும். வேராகிய பாவத்தை வெட்டியெறிந்தால் மனமகிழ்ச்சியின் கனியைக் காணலாம்.

நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.(ரோம 8:16) இந்த நிலைக்கு வருவதுதான் மனமகிழ்ச்சிக்கு முதற்படி. முறிந்துபோன ஆவியை மீண்டும் தேவனோடு இணைப்பதே பிரதானமான மனமகிழ்ச்சியின் வாழ்க்கைக்கு ஆரம்பம். 
மேலும், குணசாலியான ஸ்தீரி தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள் (நீதி 12:4). ஒரு புருஷனுடைய எலும்பை பெண் ஒருத்தியால் உருக்கிவிடமுடியும். கணவனுக்கு விரோதமான மனைவியின் செயல், கீழ்ப்படியாமை, மாறுபாடான போக்கு, ஒத்துழையாமை இவை அனைத்தும் புருஷனுடைய எலும்புகளை உருக்கிவிடப் போதுமானவைகள். அப்படியே, நம்முடைய வாழ்க்கையில் பொறாமை வேரூன்றியிருக்குமென்றால், அது நம்முடைய எலும்புகளுக்கு விரோதமானது. சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.(நீதி 14:30)

அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று (எரே 20:9) என்று தனது எலும்பின் நிலையினை எடுத்தெழுதுகின்றான் எரேமியா. நம்முடைய எலும்புகளின் நிலை என்ன? அது உலர்ந்து போனவைகளா அல்லது ஊனுள்ளவைகளா, முறிந்துபோனவைகளா அல்லது முடிந்திருக்கிறவைகளா?

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய் (ஏசா 58:11) என்றும், நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும் (ஏசா 66:14) என்றும் எழுதப்பட்ட வார்த்தைகள் நமது வாழ்க்கையில் நிறைவேறட்டும். நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.(எபே 5:30)

நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.(நீதி 3:7) அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும் (நீதி 3:8). கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும் (நீதி 15:30). இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும் (நீதி 16:24). நம்முடைய எலும்புகளைக் குறித்து மாத்திரமே கவலை கொள்வோராக நாம் இராமல், இந்த உலகத்தில் நற்செய்தி அறிவிக்கப்படாமல், தொய்ந்து கிடப்போரின் எலும்புகளை புஷ்டியாக்கப் புறப்படுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக