ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். (எபி 12:1)
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். கிறிஸ்துவுக்குப் பின்செல்லும் நாம், 'வழியைப் பார்த்து நடக்க அழைக்கப்பட்டவர்கள்; வழியின் ஓரங்களைப் பார்த்து அல்ல'. ஓரங்களைப் பார்த்து நடப்போமென்றால், ஊருக்குப் போகும் வழியையை விட்டு விலகும் மற்றும் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலைகள் நம்முடைய வாழ்க்கையில் உண்டாகக்கூடும். 'நட்சத்திரத்தைப் பார்த்து நடக்கவேண்டிய சாஸ்திரிகள், நேர்வழியை விட்டு விட்டு ஏரோதுவின் அரண்மனையை அடைந்ததைப் போல, நாம் திசைமாறும் தருணங்கள் ஏற்பட்டுவிடும்.'
ஒரு மனிதன் தன்னுடைய பயணத்தில் எதைப் பார்க்கிறான் என்பதே, அவன் எங்கே செல்கிறான் என்பதைத் தீர்மானிக்கின்றது. அழைப்பினை நோக்கிய பயணத்தில், நாம் சந்திக்கும் சில சம்பவங்கள், எதிர்கொள்ளும் பலவிதமான வார்த்தைகள் மற்றும் விமர்சனங்கள், எதிர்ப்புகள் இவைகள் அனைத்தும் நாம் நின்று நேரம் செலவிடப்படவேண்டியவைகள் அல்ல; நாம் இலக்கை அடையும் நேரத்தை இவைகள் தாமதிக்கச்செய்துவிடவும் கூடாது; எனவே, துரிதமாக அவைகளைத் தூசியென உதறிவிட்டு, இலக்கை அடையும் பயணத்தையே இன்னும் விரைந்து முன்னேறுவோம். வழியில் இருக்கும் குப்பையைப் பார்த்துக்கொண்டே நடப்பவன், தன் இலக்கை மறந்துவிடுகிறான். ஆனால் இலக்கைப் பார்த்துக்கொண்டு நடப்பவன், வழியில் இருக்கும் குப்பைகளனைத்தையும் தாண்டிச் சென்றுகொண்டிருப்பான்.
இதன் பொருள், வழி ஓரங்களில் நடக்கும் தவறுகளை நாம் கண்டுகொள்ளக்கூடாது என்பதல்ல; தவறுகளை நாம் கண்டுகொள்ளாததினால் அவைகளை ஆதரிக்கிறோம் என்பதல்ல. நிச்சயம் ஒருவரை எச்சரிக்கவேண்டிய நேரத்தில் அவரை எச்சரிப்பது நமது கடமை. உண்மையைச் சொல்லவேண்டிய நேரத்தில் உண்மையைச் சொல்லவேண்டியது நமது கடமை. ஆனால், ஒருவர் தொடர்ந்து சத்தியத்தை நிராகரித்து, திருத்தத்தை மறுத்து, தவறான பாதையிலேயே செல்ல விரும்பினால், இப்படிப்பட்டவர்களைப் பார்த்துக்கொண்டே நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும், மன அமைதியையும் வீணாக்கிக்கொண்டிருக்கக்கூடாது. அவர்களை தேவனுடைய கரங்களில் ஒப்படைத்துவிட்டு, அவர்களுக்காக ஜெபிப்பதை நமது கடமையாக்கிக்கொண்டு தொடர்ந்து இலக்கை நோக்கி நாம் முன்னேறுவதே நல்லது.
விதைகளைக் குறித்த உவமையில், வயலில் நல்ல விதை விதைக்கப்பட்டிருந்தபோதிலும், எதிரியோ களைகளை விதைத்தான். இரண்டும் வளர்ந்தன. என்றபோதிலும், உடனடியாக களைகள் எல்லாவற்றையும் பிடுங்கிவிடாமல், அறுவடைக்காலம் வரைக்கும் வளர அவை அனுமதிக்கப்பட்டன. இதிலிருந்து, நாம் அறிந்துகொள்வது என்ன? எல்லாவற்றையும் நாம் உடனடியாகத் தீர்த்துவைக்க வேண்டியதில்லை; சிலவற்றை தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு விட்டுவிடவேண்டும் என்பதுதானே! அப்படியென்றால், நம்முடைய பயணம் களைகளை நோக்கியதாக அல்ல; கதிர்களை நோக்கியதாக இருக்கவேண்டுமே! நம்முடைய வாழ்க்கையில் சிலர் களைகளைப்போல தோன்றலாம், குழப்பத்தை ஏற்படுத்தலாம், பணியைத் தடுக்கலாம், தவறான வார்த்தைகளைப் பேசலாம், நம்முடைய உழைப்பைக் குறைத்து மதிப்பிடலாம், நம்மைப் பற்றித் தவறாகப் பேசலாம்; என்றபோதிலும், அவர்கள் செய்வதையே நாம் கவனித்துக்கொண்டிருந்தால், நம்முடைய செயல்களை நாம் மறக்க நேரிடும்.
ஒரு தோட்டக்காரன் நாள் முழுவதும் களைகளையே பார்த்துக்கொண்டிருக்கமாட்டான் அல்லவா! தனது தோட்டத்திலிருக்கும் நல்ல செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவான், உரமிடுவான், வளர்ச்சியை உற்றுநோக்குவான். அதுபோலவே, நம்முடைய வாழ்க்கையிலும் தவறான மனிதர்களைச் சுற்றியே நம்முடைய கவனத்தைச் செலுத்தாமல், தேவன் நமக்குள் வைத்திருக்கும் தரிசனமாகிய நல்ல விதையை வளர்ப்பதில் கவனத்தைச் செலுத்துவோம். களைகளிடத்தில் அல்ல, நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தரிசனமாகிய மரத்திலிருந்தே தேவன் கனிகளை எதிர்பார்ப்பார்.
ஒருவர் நம்மைப் பற்றி என்ன சொன்னார் என்பதையே தொடர்ந்து நினைத்துக்கொண்டிருந்தால், தேவன் நம் மூலம் ஜனங்களுக்குச் சொல்லவேண்டிய வார்த்தைகளுக்கு அவை தடைகளாக மாறிவிடலாம்.ஒருவர் நம்மை எப்படி நடத்தினார் என்பதையே தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தால், தேவன் நமக்கு முன்பாக வைத்திருக்கும் திறந்த வாசல்களை நாம் கவனிக்காமல் போகலாம்.
நம்முடைய அழைப்பில் உண்மையாக இருப்போம். தேவன் நமக்குக் கொடுத்த ஊழியத்தை நிறைவேற்றுவோம், நம்முடைய கரங்களில் ஒப்படைக்கப்பட்ட ஆத்துமாக்களுக்காக ஜெபிப்போம். நம்முடைய குடும்பத்தைக் குறித்து கரிசனையுள்ளவர்களாயிருப்போம், நம்முடைய சாட்சியைக் காத்துக்கொள்ளுவோம்; மற்றவர்கள் எப்படி ஓடுகிறார்கள் என்பதின் மீது கவனத்தைச் செலுத்துவதைவிட, நாம் எப்படிப் ஓடுகிறோம் என்பதின் மீது நமது கவனத்தைச் செலுத்துவோம்.நேற்று யார் என்ன செய்தார்கள் என்பதில் நாம் சிக்கிக்கொண்டால், இன்று தேவன் கொடுக்கும் வாய்ப்பை இழந்துவிடுவோம். நேற்று யார் நம்மை காயப்படுத்தினார்கள் என்பதையே நினைத்துக்கொண்டிருந்தால், இன்று யாரை நாம் ஆசீர்வதிக்க வேண்டும் என்பதை மறந்துவிடுவோம்.
நேற்று யார் நம்மை காயப்படுத்தினார்கள் என்பதையே நினைத்துக்கொண்டிருந்தால், இன்று யாரை நாம் ஆசீர்வதிக்க வேண்டும் என்பதை மறந்துவிடுவோம். நம்மைத் தள்ளிவிட்டவர்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கவேண்டாம்; தேவன் நம்மைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார் என்பதை நினைவுகூறுவோம். நம்மை விமர்சித்தவர்களைப் பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருக்கவேண்டாம்; தேவன் நம்மை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதை நினைவுகூறுவோம்.
நம்மைத் தடுப்பவைகளில் நமது கவனத்தை வீணாக்காமல், தேவன் நமக்கு முன்பாக வைத்திருக்கும் பாதையில் நான் தொடர்ந்து முன்னேறுவோம். நமது கண்களை இயேசுவின் மேல் வைத்து, நமக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஓட்டத்தை விசுவாசத்துடன் ஓடி முடிப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக