ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துதல்கள். கடந்த நாட்கள் முழுவதும் நம்மை காத்து வழிநடத்தி, இந்த வருடத்தின் இறுதி மாதத்திலும் நுழைய தேவன் நமக்கு அளித்த கிருபைக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகின்றேன். அவருக்கே கனமும், துதியும், மகிமையும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாகட்டும்! கிறிஸ்து பிறப்பின் நாளை நினைவுகூருகின்ற இந்நாட்களில், கிறிஸ்துவைப் போல நாம் மாறவும், அவரை நமது வாழ்க்கையில் வெளிப்படுத்தவும் மற்றும் அவனியோர்க்கு அவரை அறிவிக்கவும் அழைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்த்துவிக்கும் வண்ணமாக இந்த மடலை வரைகின்றேன். புரிந்துகொள்ளவும், வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தவும் தேவன் பெலன் தருவாராக!
அன்பின் தொடக்கம் அவரிடமிருந்தே!
பிரியமானவர்களே! ஒருபுறம், உலகம் வேகமாக தன் திசையில் சுழன்றுகொண்டிருந்தாலும், நம்முன் வைக்கப்பட்டிருக்கும் தரிசனத்தின் திசையினை ஒருபோதும் நாம் மறந்துவிடவோ, அத்திசைக்கு நேராக நம்மை உந்தித்தள்ளும் விசையினை ஒருபோதும் நாம் இழந்துவிடவோ கூடாது. 'அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்' (1யோவான் 4:8) என்ற வசனம், மனிதனையும் தேவனையும் இணைக்கும் உறவின் பாலமாகவும் மற்றும் காரணியாகவும் அன்பு உபயோகப்படுவதையே நமக்கு வெளிப்படுத்துகின்றது. இந்த அன்பின் தொடக்கம், நம்மிடமிருந்து அல்ல; தேவனிடமிருந்தே உண்டாயிற்று என்பதை கிறிஸ்து பிறப்பின் நாளை அனுசரிக்கின்ற நாம் நினைவுகூருவது அவசியம். அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம் (1யோவான் 4:19) என்றும், தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது என்றும், நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது (1யோவா 4:9,10) என்றும், நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோமர் 5:8) என்றும் நாம் வேதத்தில் வாசிக்கின்றோமே! அவர் நம்மேல் வைத்த அன்பினை அறிந்து, உணர்ந்து, ஏற்றுக்கொண்டு, நாமும் அவர் மேல் அன்புகூரத் தொடங்குவோமென்றால், அதுவே நமது ஆவிக்குரிய வாழ்க்கை எனும் அத்தியாயத்தின் தொடக்கம். எனவே, 'உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்' (ரோமர் 8:39) என்ற பவுலின் உறுதி நம்மிடத்திலும் வெளிப்படட்டும்.
அன்பின் தொடர்ச்சி அவரைப்போலாகவே!
இரண்டாவதாக, பிதாவினிடமிருந்து குமாரன் மூலமாக வெளிப்பட்ட அவரது அன்பின் தொடர்ச்சி, நம்மையும் அவரைப் போலாக்குவதற்கே உந்தித்தள்ளுகின்றது என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். அவருக்கும் நமக்கும் இடையில் ஊடுருவி, உதிரத்தைச் சிலுவையில் சிந்தி, உரிமையோடு அப்பா என்று நம்மை அழைக்கச் செய்ததோடு நாம் நின்றுவிடாமல், அவரைப்போல நம்மை மாற்றுவதற்கும் நாம் அனுமதி அளிக்கவேண்டும். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே 'தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்' (ரோமர் 5:5) என்றும், 'கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே' (கலா. 3:27) என்றும் பவுல் எழுதுகின்றாரே.
அப்படியிருக்க, அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம் (1கொரி. 13:4-8). இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது (1கொரி. 13:13) என்ற வார்த்தைகளையும், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள் (மத். 5:44) என்ற இயேசு கிறிஸ்துவின் போதனையினையும் நம்முடைய வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தவேண்டியது எத்தனை அவசியம். 'பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே' (லூக். 23:34) என்பதுதானே சிலுவையில் அவர் தொங்கிக்கொண்டிருந்தபோது சொல்லிய வார்த்தைகள். கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே நம்மிலும் இருக்கக்கடவது (பிலி. 2:5).
அன்பின் தொண்டு அவருக்காகவே! அவரை அறிவிக்கவே!
மூன்றாவதாக, அவருக்கும் நமக்கும் இடையிலான அன்பின் பெருக்கத்தினால், இந்த உலகத்தாருக்குக் கிடைப்பது என்ன? என்ற கேள்வியையும் நம் முன் நிறுத்தவேண்டியது அவசியம். இல்லையேல், அவர் நமக்குள் ஊற்றின அன்பு, இந்த உலகத்தாருக்கு உபயோகமற்றதாகிவிடுமே! அதனால் உலகத்திற்குக் கிடைக்கவேண்டிய பயன் கிடைக்காமற்போய்விடுமே! நம்மையும் பிதாவையும் இணைக்க பலியாக இயேசு கிறிஸ்து தன்னையே சிலுவையில் ஒப்புக்கொடுத்தது போல, இவ்வுலகத்தாருக்கு இயேசு கிறிஸ்துவை அறிவித்து பிதாவோடு இணைக்க நாமும் நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டுமே. இதனையே, 'கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது' (2 கொரி. 5:14) என்று எழுதுகின்றார் பவுல். இந்த நெருக்குதல்தான், 'சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ' (1கொரி. 9:16) என்று அவரை பாரப்படவும்வைக்கின்றது.
உலகிற்கு வெளிச்சம் கொடுக்கும் திரியாக நாம் எரியவேண்டுமென்றால், வாழ்க்கையாகிய நமது விளக்கில் அவரது அன்பு குறைவின்றி ஊற்றப்பட்டிருந்தால் மாத்திரமே அது சாத்தியமாகும். 'உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். ஆனாலும், 'நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு' (வெளி 2:2-4) என்று ஆண்டவர் நம்மைப் பார்த்து ஒருபோதும் சொல்லிவிடக்கூடாது.
'ஆத்தும ஆதாயக வாஞ்சை' இன்று அநேரில் குறைவுபட்டுப்போனதற்குக் காரணம், அவர் மீதான அன்பில் அவர்களுக்கு இருக்கும் குறைபாடே! நம்முடைய இரட்சிப்பின் பாத்திரத்தில் அவருடைய அன்பு பெருகியோடுமென்றால், அருகிலிருக்கும் மக்களும் அவரை அறிந்துகொள்வது நிச்சயம். கிறிஸ்துவின் மீதான அன்பு, உலக வாழ்க்கையில் சிக்குண்டு வாழும் மனிதரையும், அவரது சிங்காசனத்திற்கு நேராக இழுத்துவர நம்மைத் தூண்டட்டும். இத்தகைய நற்செய்தி அறிவிப்பின் பணியில் பெருக இந்த கிறிஸ்துபிறப்பின் நாட்களில் கர்த்தர் கிருபை செய்வாராக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக