செவ்வாய், 27 அக்டோபர், 2026

ஆசீர்வாதமும், பட்சபாதமும்

 

ஆசீர்வாதமும், பட்சபாதமும்

 

        கிறிஸ்துவில் பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். கிறிஸ்துவுக்காக வாழவும், அவருக்காகச் செயல்படவும் நம்மை அர்ப்பணித்திருக்கும் நாம் 'மற்றர்களுக்கு ஆசீர்வாதமாக மாறும்படியாக அழைக்கப்பட்டவர்கள்'. அப்படியென்றால், அதற்கு எதிரான குணங்களுக்கு நம்முடைய வாழ்க்கையில் நாம் இடமளித்துவிடக்கூடாதே!    

                ஏசா மற்றும் யாக்கோபு இருவரும் சகோதரர்களே; என்றபோதிலும், ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே எதிரிகளாக மாறிப்போனவர்கள். ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள் (ஆதி 25:28) என்று வாசிக்கின்றோமே. ஏசா வேட்டையாடுகிறவன், யாக்கோபோ வீட்டிலே தாய்க்கு உதவியாக கூழ் சமைக்கிறவன். தனக்குப் பிடித்தவைகளைச் செய்பவர்களின் மேலேயே, தனித்தனியான பிரியத்தை வெளிப்படுத்தினார்கள் ஈசாக்கும், ரெபெக்காளும். நம்முடைய வாழ்க்கையும் சில நேரங்களில் ஈசாக்கைப்  போலவும், ரெபெக்காளைப் போலவுமே காணப்படுகின்றது. நமக்குப் பிடித்திருக்கும் காரியங்களை அல்லது நாம் விரும்பும் காரியங்களை எவர்கள் செய்கிறார்களோ, அவர்களையே ஆசீர்வதிக்க நாம் விரும்புகின்றோம். பிரியமானவர்களே! ஆண்டவருடைய விருப்பத்தைச் சார்ந்ததாக அல்ல, நம்முடைய விருப்பத்தைச் சார்ந்ததாகவே ஆசீர்வாதம் திசைதிருப்பப்படக்கூடாது.

                ஏசா மற்றும் யாக்கோபு, இரண்டு பேரும் ஈசாக்கின் பிள்ளைகளே; அப்படியிருக்க, தான் மரிக்கும் முன்னதாக இரண்டு பேரையும் அழைத்து ஈசாக்கு ஆசீர்வதித்திருந்திருக்கலாமே. 'ஆசீர்வாதம்' என்ற முதலை (யளளநவ) தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, பட்சபாதம் என்ற பார்வையோடு, பிள்ளைகளுக்கு இடையிலேயே தகப்பனாகிய ஈசாக்கு பிரிவினையை உண்டாக்கிவிட்டானே. தான் விரும்புகிறவன் ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்று நினைத்தான் ஈசாக்கு, ரெபெக்காளோ, தான் விரும்புகிறவன் ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்று நினைத்தாள்.  வேட்டையாடுகிறவர்களும் வேண்டும், வீட்டிலே சமைக்கிறவர்களும் வேண்டும்.  வேட்டையாடுகிறவர்கள் விரும்பப்படாவிட்டால், வீட்டிலோ கூழ் மட்டும்தான் கிடைத்துக்கொண்டிருக்கும். வீட்டிலிருக்கிறவர்கள் இல்லாவிட்டால், வேட்டையாடிவிட்டு களைத்தவர்களாக வீட்டிற்கு வரும்போது, வீட்டிலே கூழுக்குக்கூட வழியிருக்காகது. ஊழியத்திலும்கூட இத்தகைய இரு கூட்டத்தினருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ளவேண்டியது அவசியம். வீட்டிலிருக்கிறவர்கள் வேட்டையாடவில்லை என்றோ, வேட்டையாடுகிறவர்கள் வீட்டிலேயே தரிக்கிறதில்லை என்றோ நாம் தப்புக்கணக்குப் போட்டுவிடக்கூடாது.  களைப்போடு வெளியிலிருந்து வருகிறவர்களை வரவேற்று, வேண்டியவைகளைக் கொடுத்து அவர்களை உபசரிக்கவேண்டிய பொறுப்பு வீட்டிலிருக்கும் பிள்ளைகளுக்கு உண்டு என்பதை உணர்ந்துகொள்ளாமல், களைப்போடு வருவோரிடமிருந்துகூட கன்னமிட்டு எடுத்துக்கொள்ளும் மனிதர்களாக ஒருபோதும் நாம் காணப்பட்டுவிடக்கூடாதே.

                வேட்டையாடியவைகளை உடனே சமைத்து உண்டு பசியாற்றிக்கொள்ள முடியாது. சமைக்கவேண்டிய பிற பொருட்கள் வீட்டிலிருப்பதினால், வேட்டையாடினவைகளை வீட்டிற்குக் கொண்டுவந்துதான் சமைக்கவேண்டும்.  அதுவரை வேட்டையின்போது செலவழிக்கப்பட்ட சக்தியினாலும், பெலத்தினாலும் வேட்டையாடினவர்கள் களைத்துப்போனவர்களாகவே காட்சியளிக்கக்கூடும். சில நாட்களில், காட்டிற்குள் சென்று, கஷ்டப்பட்டு வேட்டையாடியும், வேட்டையின்போது ஒன்றுமே கிடைக்காத, அகப்படாத நிலையும் உண்டாகக்கூடும். எத்தனை அம்புகளை பிரயோகித்தாலும், எத்தனையாய் குறிபார்த்து எய்தாலும், கைகளிலோ எஞ்சியிருப்பது வில்லும் அம்புமாகவே ஒருவேளை காணப்படக்கூடும். வேட்டையின்போது எதுவும் கிடைக்கவில்லையே, வீட்டிற்குச் சென்றாலாவது ஏதாவது கிடைக்குமா? என்ற பசியோடும், தாகத்தோடும், துக்கமான மனநிலையோடு வீட்டு வாசலை நோக்கி நடந்துவந்துகொண்டிருக்கக்கூடும். இப்படிப்பட் வேடர்களை அடையாளம் கண்டுகொண்டு, அவர்களது கடின உழைப்பினையும் அத்துடன் களைப்பினையும் புரிந்துகொண்டு, வீட்டிலிருக்கும் மனிதர்களாகிய நாம் நம்மிடத்திலிருப்பவைகளை அவர்களோடுகூட பகிர்ந்துகொண்டால் அல்லவோ பரலோகம் மகிழ்ச்சியடையும்.

                ஆனால், யாக்கோபின் மனநிலையோ சற்று வித்தியாமாயிருந்தது. 'ஆசீர்வாதம், ஆஸ்தி' என்ற இரு வார்த்தைகளுக்குள்ளாக மாத்திரம் தனது வாழ்க்கையினை வளைத்துவைத்திருந்தான் யாக்கோபு. ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான்.  அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்று கேட்டபோது, யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு (ஆதி 25:29-31) என்றல்லவோ கூறுகின்றான். சகோதரனே, வேட்டையாடச் சென்ற உனக்கு என்னவாயிற்று, ஒன்றும் அகப்படவில்லையோ, வருத்தப்படாதே, வீட்டிலே நான் இருக்கிறேன், உனக்கு வேண்டிய உணவுகளைக் கொடுத்து, உனது களைப்பினை ஆற்றி, உன்னை தைரியப்படுத்தி, பெலப்படுத்தி, மீண்டும் திடமுடன் வேட்டைக்கு நீ புறப்பட்டுச் செல்லவேண்டிய அத்தனையையும் உனக்கு நான் செய்கிறேன் என்றல்லவோ சகோதரனாகிய யாக்கோபு சொல்லியிருக்கவேண்டும். 'இதோ, நான் சாகப்போகிறேன்' (ஆதி. 25:32) என்ற நிலையில் அல்லவோ ஏசா தன் சகோதரனாகிய யாக்கோபோடுகூட பேசிக்கொண்டிருக்கின்றான்.

                சகோதரன், உயிரைவிடவிருக்கும் நேரத்தில்கூட, ஏசாவின் சொத்துக்களை தனக்கு உரியதாய் எழுதி வாங்குவதிலேயே குறியாயிருக்கிறான் யாக்கோபு; எத்தனை பரிதாபம். 'இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு' என்று யாக்கோபு கேட்டபோது, ஏசா யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான். இத்தனை காரியங்களைச் செய்தபின்னரே, யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான் (ஆதி 25:34) என்றுதான் ஏசாவின் இந்த செயலைக் குறித்து வேதத்தில் வாசிக்கின்றோம்; அதன் அர்த்தம், உயிரைவிட சேஷ்டபுத்திர பாகத்தை உயர்வாக எண்ணினார் கர்த்த;   ஆனால், ஏசாவோ, தனது பசிக்காக, மாம்சத்தைக் காப்பாற்றுவதற்காக பட்டெனக் கொடுத்துவிட்டான். நம்முடைய வாழ்க்கையில் தேவன் உயர்வாக வைத்திருக்கும் காரியங்களை, நாம் ஒருவோதும் உயிருக்காக விட்டுவிடவோ, குறைவாக அவைகளை எடைபோட்டுவிடவோ கூடாது. மாம்சத்தின் பசிக்காக ஆணட்வரால் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களை விட்டுக்கொடுத்துவிடக்கூடாது. 'மாம்சத்தின் தேவைகளைப் பூர்த்தியாக்க' அவைகளை விட்டுக்கொடுத்துவிடக்கூடாது. 'இந்த சேஷ்டபுத்திர பாகம் எனக்கு என்னத்திற்கு' என்று ஏசாவைப்போல எண்ணிவிடக்கூடாது. ஆகாப் நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு, அதைப் பார்க்கிலும் நல்ல திராட்சத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்று சொன்னபோது,  நாபோத் ஆகாப் ராஜாவை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக (1இரா 21:2,3) என்று சொன்னானே; தனது சுதந்தரத்தைக் காத்துக்கொண்டானே. ஒருவேளை, அதற்காக அவன் கொல்லப்படும் சூழ்நிலை உண்டானாலும், பிதாவின் பார்வையிலோ நிச்சயம் அவன் கனம் பெற்றவனே என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். ஆண்டவரிடமிருந்து கிடைத்திருக்கும் ஆசீர்வாதங்களை ஒருபோதும் நாம் அசட்டைபண்ணிவிடக்கூடாது.

                என்றாலும், 'எனது சேஷ்ட புத்திரபாகத்தை இன்று உனக்குத் தருகிறேன், நீ எனக்கு கூழைத் தா' என்று ஏசா முதலாவதாக, தானாக முன்வந்து சகோதரனாகிய யாக்கோபினிடத்தில் சொல்லவில்லை என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். 'அந்த சிவப்பான கூழிலே நான் சாப்பிட கொஞ்சம் தா' (ஆதி. 25:30) என்று ஏசா கேட்டபோது, உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு (ஆதி 25:31) என்று யாக்கோபுதானே அதற்கு விலை பேசுகின்றான். சேஷ்டபுத்திர பாகத்தைக் குறித்த எண்ணம் யாக்கோபின் சிந்தனையில் நிறைந்தேயிருந்திருக்கக்கூடும். ஏசாவுக்கு மாத்திரம் கிடைத்திருக்கின்றதே, எனக்குக் கிடைக்கவில்லையே என்று அவனது உள்ளம் கடினமடைந்திருந்திருக்கக்கூடும். முதலில் பிறந்தவனுக்குத்தானே அது சொந்தம், பிறப்பின் வரிசையை இனி மாற்றியமைப்பது இயலாதது என்ற எண்ணத்தோடு, அதனைப் பறிக்கும் வழியினைக் குறித்தே யாக்கோபு ஒருவேளை யோசித்துக்கொண்டேயிருந்திருக்கக்கூடும்.  கைகளிலே ஏதுமின்றி, வெறுமையாக இருக்கும் மனிதர்களிடத்திலிருந்து உள்ளதையும் எடுத்துக்கொண்டு ஒன்றுமில்லாதவனாகவே மாற்றிவிடவேண்டும் என்ற மனநிலை நமக்கு ஒருபோதும் உண்டாகக்கூடாது. வேட்டையாடி நீ கொண்டுவருவதெல்லாம் உனக்கு, வீட்டிலிருக்கிறவைகளோ அத்தனையும் எனக்கு என்ற தவறான மனநிலைக்குள் ஒருபோதும் நாம் மாட்டிக்கொள்ளக்கூடாதே. அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது, நான் எத்தனை நாட்களாக ஜெபித்துக்கொண்டேயிருக்கிறேன்; எனக்கோ இன்னும் பதில் வரவில்லையே என்று நினைப்பதோடு, ஆசீர்வாதங்களைப் பெற்று அனுபவிக்கும் பிற ஜனங்களிடத்தில் அன்புகூர மனதில்லாதவர்களாக அவர்களைப் பகைக்கும் மனநிலைக்குள்ளாகத் தங்களைத் தள்ளிக்கொள்ளும் மனிதர்கள் இந்த உலக்தில் அநேகர்.

                என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளும்போது, என்னைத் தொந்தரவுசெய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள்,  நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று (லூக் 11:7) சொல்லுகிறவர்களாக நாம் காணப்பட்டுவிடக்கூடாதே. 'கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்' (லூக். 11:9) என்பது பிதாவை நோக்கி நாம் செய்யவேண்டியது என்றாலும், அதன் மறுபக்கமாகிய, 'கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்' என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாதே. அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் (லூக் 6:38) என்ற வசனத்தை நம்முடைய வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தவேண்டியது எத்தனை அவசியம்.

                ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன். ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடி, அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான் (ஆதி 27:1-4). ருசியான வேட்டை உணவுகளின்மேல் ஆசைகொண்டிருந்தான் ஈசாக்கு. அந்த உணவை தனக்குத் தரும் பிள்ளையினையே அவன் ஆசீர்வதிக்கவும் விரும்பினான். ரெபெக்காளோ, தான் விரும்பும் யாக்கோபு ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்று விரும்பினாள். அதற்காக கணவனான ஈசாக்கையும், பிள்ளையாகிய ஏசாவையும் அவள் ஏமாற்றவும் (ஆதி. 27:8-10), உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்' (ஆதி. 27:13) என்று சாபத்தைக்கூட சுமந்துகொள்ளவும், யாக்கோபை பொய் சொல்லும்படியாகத் தூண்டிவிடவும் துணிந்துவிட்டாளே. ஆசீர்வாதம் தேவனிடத்திலிருந்தே வருகின்றது (ஆதி. 27:28), ஈசாக்கு அதனை இறங்கச் செய்யும் வடிகால் மாத்திரமே; என்றாலும், தனது மாம்சத்திற்குட்பட்டே ஆசீர்வாதத்தை அவன் வெளிப்படுத்துவதனை நம்மால் காணமுடிகின்றதே. நம்முடைய வாழ்க்கையும் இப்படிப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாது.  நமது மாம்சத்தை, சரீரத்தை, வாழ்க்கையை திருப்திப்படுத்தும் மனிதர்களை மாத்திரமே ஆசீர்வதிக்கும் மனநிலை நம்மில் உருவாகிவிடக்கூடாது.

                யாக்கோபை ஆசீர்வதித்துவிடக்கூடாது என்ற மனநிலையோடு, ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் குமாரனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்று சொன்னதோடு, சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் (ஆதி. 27:21,22) என்ற சந்தேக வார்த்தைகளையும் வெளிப்படுத்துகின்றான். என்றாலும், யாக்கோபு கொண்டுவந்த எல்லாவற்றையும் புசித்த பின்பு, தான் விரும்புகின்ற ஏசாதான் அவன் என நினைத்து, 'தேவன் உனக்கு வானத்துப்பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக. ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள்' என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான் ஈசாக்கு (ஆதி 27:29). ஆனால், கர்த்தரோ, ரெபெக்காள் கர்ப்பவதியாயிருக்கும்போது, இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும்; அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் (ஆதி 25:23) என்று சொன்ன தனது வார்த்தையினையே நிறைவேற்றினார். ஒருவேளை கர்த்தர் தன்னிடத்தில் சொல்லியிருந்த இந்த வார்த்தைகளை ரெபெக்காள் ஈசாக்கினிடத்தில் அறிவித்திருந்திருக்கக்கூடுமே. அப்பபடி தெரிந்திருந்தும், அறிந்திருந்தும், தேவன் தெரிந்தெடுத்திருக்கின்ற, விரும்புகின்ற யாக்கோபை ஆசீர்வதிக்க விரும்பாமல், தான் விரும்புகின்ற ஏசாவையே ஆசீர்வதிக்க விரும்புகிறான் ஈசாக்கு. ஈசாக்கின் வாயினாலேயே ஏசாவை நோக்கி, 'உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து, உன் சகோதரனைச் சேவிப்பாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்தில் இருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்துப்போடுவாய்' (ஆதி 27:40) என்று தனது திட்டத்தை திரும்பவும் அறிவித்தது எத்தனை ஆச்சரியமானது. தேவன் திட்டம்பண்ணினவைகளை நம்முடைய மாம்சீக விருப்பத்தின்படி நம்மால் மாற்றியமைத்துவிடமுடியாது. அவர் விரும்பும் மனிதர்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டுசேர்க்க நாம் மறுத்தாலும், அவருக்கு முன் மனிதர்களை மாற்றி நிறுத்தினாலும், எப்பிராயீமைத் தன் வலதுகையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடதுகையினாலே இஸ்ரவேலின் வலது கைக்கு நேராகவும் தகப்பனாகிய யோசேப்பு விட்டபோது, இஸ்ரவேல், மனமறிய, தன் வலதுகையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே முத்தவனாயிருந்தும், தன் இடது கையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்ததுபோல வைத்து, 'அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்' (ஆதி 48:13,14,19) என்று சொல்லுவார் அவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக